தன் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த அருணைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்த கௌதம், “டேய்... அங்க அப்பாகிட்ட என்னடா பேச்சு? இங்க வாடா...” என்று அழைத்தான். கௌதமின் குரலில் பழைய நட்பின் நெருக்கமும் உரிமையும் தெரிந்தது. அருண் உற்சாகத்துடன் கௌதமை நோக்கிச் சென்றான். மூர்த்தி சில வினாடிகள் யோசித்துவிட்டு வெளியே வந்தார்.
நந்தினி, பூஜா ஆகிய இருவரையும் வராந்தாவின் ஓரத்திற்கு அழைத்துச் சென்ற மூர்த்தி, “கௌதம் இப்ப ஃபுல்லா ரெக்கவர் ஆயிட்டான். உங்க ரெண்டு பேர லவ் பண்ணதும் அவனுக்கு ஞாபகமிருக்கு” என்றவுடன் இரண்டு பேரின் முகங்களும் சந்தோஷத்திற்கு மாறின. ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அவர்களின் முகங்கள் உடனே இறுக்கமாகின.
“இப்ப... உங்க லவ்வ விட முக்கியமான விஷயம், கௌதமோட ஹெல்த் தான். அவன் ஃபுல் நார்மலுக்கு வந்து, அவனே யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவான். அதுவரைக்கும் அவனத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று மூர்த்தி கூற... தலையாட்டிய நந்தினி, “அவனப் பாக்கலாம்ல அங்கிள்?” என்றாள். மூர்த்தி, “பாருங்க... ஆனா உங்க லவ் மேட்டரப் பத்தி இப்போதைக்கிப் பேசாதீங்க” என்றார். “ஓகே...” என்று பூஜா கூற... அறைக்குள் சென்ற மூர்த்தியின் பின்னால் நந்தினியும் பூஜாவும் சென்றனர்.
அருணுடன் பேசிக்கொண்டிருந்த கௌதமின் முகம், நந்தினியையும் பூஜாவையும் பார்த்தவுடன் மாறியது. ஒரே கணத்தில் கண்களில் மகிழ்ச்சியாகவும் வருத்தமாகவும் உணர்வுகள் தோன்றி மறைந்தன. ஒன்றும் பேசாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
நந்தினியைப் பார்த்த கௌதமின் கண்களில் அந்தப் பழைய நெருக்கமும், காதலும் தெரிய... சட்டென்று நந்தினியின் கண்கள் கலங்கிவிட்டன. கௌதம், “ஏய்... நந்தினி...” என்று அவள் கையை ஆறுதலாகப் பிடித்து இறுக்கினான். இதைப் பார்த்த பூஜா, “கௌதம்...” என்று வேகமாக அழைத்தபோது, அவள் கண்களும் கலங்கிவிட்டன. கௌதம், “பூஜா... வாட் இஸ் திஸ்?” என்று இன்னொரு கையால் அவள் கையையும் ஆறுதலாகப் பிடித்து அழுத்தினான். இருவருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்த கௌதமின் விழிகளிலும் கண்ணீர்ப் படலம்.
இதைக் கவனித்த மூர்த்தி அருகில் நெருங்கி, அவர்களின் கைகளைப் பிரித்துவிட்டு, “இப்ப கௌதம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்
டும்” என்றார். சில வினாடிகள் தடுமாறிய நந்தினி, “ஓகே கௌதம்... நான் கிளம்புறேன்” என்றாள். பூஜா, “அப்புறம் பாக்கலாம் கௌதம்” என்று கூற... கௌதம் பதில் ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டினான். இருவரும் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
கௌதமுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு டாக்டர் மனோகர், “ஸ்கேன் ரிப்போர்ட் நார்மலா இருக்கு. அவன் இப்ப பழைய கௌதம். அவன பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க. லெட் ஹிம் லிவ் ஹிஸ் ஓன் லைஃப்” என்று கூறிவிட்டு நர்ஸிடம், “கௌதம டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க” என்றார்.
இரண்டு நாட்கள் கௌதம் வீட்டைவிட்டு எங்கேயும் போகவில்லை. பழைய நண்பர்களுடன் மொபைலில் பேசினான். அருண் வந்து கௌதமைப் பார்த்துவிட்டுச் சென்றாலும், அவன் நந்தினியின் லவ் மேட்டரை எடுக்கவில்லை. நந்தினியும் பூஜாவும் போன் செய்து, “உடல்நலம் எப்படியிருக்கிறது?” என்று விசாரித்தார்களே தவிர... அவர்கள் காதலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை.
அம்மா ஹாஸ்பிட்டலுக்குப் போன பிறகு, கௌதம் தனியாகத்தான் வீட்டிலிருந்தான். நந்தினியையும் பூஜாவையும் பற்றி நினைக்காமலிருப்பதற்கு முயன்றான். ஆனால் இருவரது நினைவுகளும் மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. அந்தக் காதல் காலத்தில் நந்தினியும் பூஜாவும் பேசிய விஷயங்கள், கௌதமின் காதில் விடாது ஒலித்துக்கொண்டேயிருந்தன.
கேத்தி பாலடாவில், குளிரில் உடல் நடுங்க... கேரட்டைக் கடித்தபடி நந்தினி, “கௌதம்... நான் உனக்குத் தகுதியான ஆள்தானா?” என்றாள்.
“நிச்சயமா. ஆனா ஒரே ஒரு குறை.”
“என்ன குறை? அடிக்கடி கதை சொல்லி மொக்கை போடுறதா?”
“அதெல்லாம் இல்ல. உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நல்லாருக்கும்.”
“ஏன்?”
“உன் தங்கச்சின்னா... எப்படியும் அவளும் அழகாதான் இருப்பா. உங்க ஊருக்கு வந்தன்னா கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்.”
“என்ன கிளுகிளுப்பு?”
“நான் ஜோக்கடிக்க... அவ என் மடில விழுந்து சிரிக்க... நான் அப்படியே அவ முதுகுல விழுந்து சிரிக்க...”
“நான் உங்க ரெண்டு பேரு முதுகுலயும் வௌக்கமாத்தால அடிக்க...”
கடற்கரைப் படகு மறைவில் அவன் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த பூஜா, “அப்படிப் பாக்காத கௌதம். நீ பாக்கும்போது... அப்படியே உடம்பெல்லாம் சூடாயி, மண்ணுகூட சுட்டுடுச்சு பாரு...” என்று கடல் மணலை எடுத்துக் காட்டினாள்.
நந்தினி காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியபடி, “நாம எத்தனை குழந்தைங்க பெத்துக்கலாம் கௌதம்?” என்றாள். ஜன்னலோரம் அவனைப் பின்னாலிருந்து அணைத்தபடி பூஜா, “நம்ப ரெண்டு பேரும் வேலைக்குப் போகவே கூடாது கௌதம். 24 மணி நேரமும் ஒண்ணா, ஒரு நிமிஷம்கூட பிரியாம இருக்கணும்” என்றாள்.
நந்தினி அவன் கன்னத்தோடு தனது கன்னத்தை இழைத்தபடி, “நேத்து ஒரு கனவுடா. திருவையாத்துல நம்ம பிள்ளைங்களோட காவிரில குளிச்சுட்டு, ஆண்டவர் நெய் அல்வா கடைல போய் அசோகா சாப்பிடுறோம்” என்றாள்.
கௌதமின் கண்களில் நந்தினியும் பூஜாவும் வெவ்வேறு ரூபங்களில் தோன்றிக் கொண்டேயிருந்தார்கள்.
அவன் நகத்தைத் தனது பற்களால் கடித்துத் துப்பியபடி பேசும் பூஜா... கௌதம் சிகரெட்டைப் பற்றவைக்க முயலும்போது, லைட்டரை ஊதி அணைக்கும் நந்தினி...
தனது கூந்தல் நுனியால் கௌதமின் முகத்தை வருடிய பூஜா...
அவனுடைய நெற்றி வியர்வையை ஊதி ஊதி உலர வைத்த நந்தினி...
சிரிக்கும் பூஜா... சிரிக்கும் நந்தினி... அழும் நந்தினி... அழும் பூஜா... நந்தினி... பூஜா... நந்தினி... பூஜா... நந்தினி... பூஜா... நந்தினி... பூஜா...
தன்னை மீறி, “கடவுளே... இட்ஸ் கில்லிங்... இட்ஸ் கில்லிங்...” என்று வாய்விட்டுப் புலம்பிய கௌதம் அருணுக்கு போன் போட்டு, “அருண்... இன்னைக்கி நைட்டு சரக்கடிக்கலாமா?” என்றான்.
தி. நகரிலிருந்த அந்த ரூஃப் கார்டன் பாரில், இரண்டு லார்ஜ் பிராந்தியை அடித்துவிட்டு, மெலிதாக போதை ஏறிய பிறகுதான் கௌதம், நந்தினி-பூஜா விஷயத்தைப் பேச ஆரம்பித்தான். “நந்தினி என்னடா சொல்றா?” என்ற கௌதம் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான்.
“உன் போனுக்காகக் காத்துட்டிருக்கா. பூஜாவவிட, தன்னோட காதல்தான் பெருசு. அது உன்னை அவகிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு நம்புறா.”
“ம்ஹ்ம்...” என்று சிரித்த கௌதம்,
“பூஜாவும் அப்படித்தான் நினைச்சுட்டிருப்
பாள்ல?” என்றான்.
“ரெண்டு பேருல யாரை நீ ரொம்ப லவ் பண்ற?”
“இப்படில்லாம் கேட்டா எப்படிரா? ரெண்டு பேரையும், வெவ்வேறு காலகட்டத்துல லவ் பண்ணியிருக்கேன். ரெண்டு பேரும் வெவ்வேறு விதமா என்னைப் பாதிச்சுருக்காங்க. ரெண்டு பேரு மேலயும் காதல் இருக்கு. நினைக்க... நினைக்க... ரெண்டு பேரும் சரிசமமா நிக்கிறாங்க...” என்ற கௌதம் ஒரு மடக்கு பிராந்தியை எடுத்து விழுங்கிவிட்டு, “இந்த மாதிரி நிலைமை, உலகத்துல யாருக்கும் வந்திருக்காதுல்ல?” என்றபோது அவன் கண்கள் கலங்கிவிட்டன.
“ஏய்... அந்தப் பேச்ச விடுரா...”
“எப்படிரா விட முடியும்? 24 மணி நேரமும் ரெண்டு பேரும் மனசுக்குள்ள மாத்தி மாத்தி வந்து பேசுறாங்க... சிரிக்கிறாங்க... அழறாங்க... அணைச்சுக்கிறாங்க... உதட்டக்கிள்ளுறாங்க... தலைமுடியக் கோதி விடுறாங்க... சட்டைக் காலர சரி பண்றாங்க... பின்கழுத்து மச்சத்துல கடிக்கிறாங்க... ஒரே ஸ்வெட்டருக்குள்ள கட்டிப்பிடிக்கிறாங்க... டீசர்ட் முதுகுல ஐஸ்கட்டியப் போடுறாங்க... நடுவிரலால முதுகுல கோலம் போடுறாங்க... குளிச்சிட்டுக் கூந்தல் தண்ணிய உதறுராங்க...” என்று வேக வேகமாக, உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய கௌதமின் தொண்டை அடைக்க... கண்கள் கலங்கி, சட்டென்று அமைதியானான்.
சில வினாடிகள் மவுனத்துக்குப் பிறகு, “என்னால முடியலடா... முடியல... பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா...” என்ற கௌதம் திடீரென்று தனது இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான். “டேய்... என்னடா...” என்று அருண் தனது சேரை அவன் அருகில்
போட்டுக்கொண்டு அமர்ந்தான். கௌதம்அப்படியே அருணின் மடியில் படுத்துக்கொண்டு சத்தமின்றி அழ... கௌதமின்முதுகு மட்டும் குலுங்கிக்கொண்டேயிருந்தது.
(தொடரும்)