காதல் ஸ்கொயர் - 13


விடியற்காலை 6 மணிக்கு மேல் அந்த ரயில், திருவள்ளுர் ஸ்டேஷனில்நின்றுவிட்டுக் கிளம்பியது. லோயர் பர்த்தில் படுத்திருந்த கௌதம் தூக்கத்தில் திரும்பினான். யார் மீதோ கால் பட… சட்டென்று கண் விழித்துப் பார்த்தான். தனது காலடியில் பூஜா அமர்ந்திருப்பதைப் பார்த்த கௌதமிற்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே போர்டை பார்த்தான். திருவள்ளுர்.

வேகமாக எழுந்து அமர்ந்த கௌதம், “பூஜா... நீயும் இந்த ட்ரெய்ன்லதான் வர்றியா?” என்றான் இன்னும் கண்களிலிருந்து தூக்கமும், ஆச்சர்யமும் விலகாமல். பூஜா பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள். பூஜாவைப் பார்த்தால் ரயிலில் வந்ததுபோல் தெரியவில்லை. குளித்துவிட்டு வந்ததுபோல் ஃப்ரெஷ்ஷாக இருந்தாள். தொடர்ந்து கௌதம், “ஏய்… சொல்லு.திடீர்னு இங்க எப்படி?” என்றான்.

“உன்னைப் பாக்கதான் வந்தேன்”

“புரியல”

“நீ இன்னைக்கி, இந்த ட்ரெய்ன்ல சென்னை வர்றதா உங்கம்மா சொன்னாங்க. நீ வந்தவுடனே உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. என்னோட ஒருபேஷன்ட், ரயில்வே ஸ்டாஃப். அவர் மூலமா நீ எந்த கோச்ன்னு விசாரிச்சுட்டுவந்துட்டேன்” என்றவளைக் கண்களில் கேள்வியுடன் பார்த்த கௌதம், “அப்படியே பாத்தாலும், சென்ட்ரல் ஸ்டேஷன்லதான நீ என்னை ரிஸீவ்பண்ணனும். இங்க எப்படி?” என்றான்.

“நாலரைக்கே சென்ட்ரல் வந்துட்டேன். ட்ரெய்ன் ரெண்டு மணி நேரம்லேட்டுன்னாங்க. யோசிச்சேன். சென்ட்ரலுக்கு நீ ஏழு மணிக்கு மேலதான்வருவ. அதான் சப்-அர்பன் ட்ரெய்ன பிடிச்சு, இங்க வந்து, டிக்கெட் வாங்கிட்டுஏறிட்டேன்” என்றாள். அவளை வியப்புடன் பார்த்தான். என்ன பெண் இவள்?தன்னைப் பார்ப்பதற்காக, இவ்வளவு காலையில் மெனக்கெட்டு திருவள்ளுர்வந்து, தன் காலடியில் உட்கார்ந்திருக்கிறாள்.

“ஏய்… நான்தான் இன்னும் ஒன்னவர்ல சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருப்பனே….அங்கயே பாத்துருக்கலாமே”

“இங்க வந்தா ஒன்னவர் முன்னாடியே உன்னப் பாக்கலாம்ல்ல?” என்று கூறிய பூஜாவை கௌதம் உற்றுப் பார்த்தான். இந்தப் பிரியத்தை பார்த்தால் வெறும் நட்புபோல் தெரியவில்லையே. சில வினாடிகள் அவன் கண்களை நேருக்குநேர் பார்த்த

பூஜா பின்னர் பார்வையை விலக்கிக்

கொண்டு, “என்ன கௌதம்…. ஸைலன்ட்டாயிட்ட… நான் வந்தது பிடிக்கலையா?”

“சேச்சே… எதுக்கு இவ்ளோ தூரம் சிரமப்பட்டு

கிட்டுன்னு கேட்டேன்”

“சாதாரணமா நம்ம பழகுற ஆள, சென்ட்ரல் வந்து ரிஸீவ் பண்ணுவோம்.ஸம்ஒன் ஸ்பெஷல் டு மீன்னா, எதாச்சும் ஸ்பெஷலா செய்யணும்ல்ல?”

“நான் என்ன ஸ்பெஷல் உனக்கு?” என்று கேட்ட கௌதமை பூஜா பதில் ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள். பூஜாவை உற்றுப் பார்த்த கௌதம் மனதிற்குள், “கடவுளே… பூஜா மனதில் என் மீது ஏதேனும் ஐடியா இருந்தால் நீக்கிவிடு” என்று வேண்டிக்கொண்டு, “என்னைப் பாக்க வரன்னு உங்க வீட்டுல சொல்லிட்டு வந்தியா?” என்றான்.

“காலங்காத்தால ஒரு பையனப் பாக்கப் போறன்னா விடுவாங்களா? ஹாஸ்பிட்டல்ல ஒரு எமர்ஜென்ஸின்னு பொய் சொல்லிட்டு வந்துருக்கேன்”என்றாள் பூஜா.

கௌதம் யோசனையுடன் பார்த்தான். இவள் என்னைக் காதலிக்கிறாளா? காதலிக்கும் பெண்கள் முதலில் வீட்டில் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். உடனே, “சேச்சே… அதெல்லாம் இருக்காது. சும்மா ஃப்ரெண்ட்ஷிப்தான்.கொஞ்சம் நெருக்கமான ஃப்ரெண்ட்ஷிப். அவ்வளவு

தான்” என்று தனக்குள் சமாதானம் செய்துகொண்டான்.

தொடர்ந்து பூஜா, “உங்கம்மாப்பா ரெண்டு பேரும்

இன்னைக்கி ஹாஸ்பிட்டல் போயிடுவாங்க. நீ அவங்க கூட இருக்க முடியாது. அதனால நான் இன்னைக்கி லீவு போட்டுட்டேன். இன்னைக்கி மோஸ்ட் ஆஃப் தி டைம் உன்

கூடதான் இருக்கப்போறேன். அஃப்கோர்ஸ்… வித் யுவர்

பர்மிஷன். உனக்கு ஏதும் ப்ரோக்ராம் இருக்கா?” என்றாள்.

“ம்…. இன்னைக்கி நைட் காலேஜ் ஃப்ரண்ட்ஸோட மீட்டிங்” என்றவுடன் பூஜாகட்டை விரலை உதட்டில் வைத்து, “தண்ணி பார்ட்டியா?” என்று கேட்க, கௌதம் சிரித்தபடி தலையை ஆட்டினான்.

“ஓகே… அப்ப பகல் ஃபுல்லா உன்னோடதான் இருப்பேன்” என்றாள்.

பூஜா சென்ட்ரல் ஸ்டேஷனில் தனது வெஸ்பாவை விட்டிருந்தாள். வெஸ்பாவில் கௌதமின் வீடிருக்கும் எம்ஆர்ஸி நகரை நோக்கிச் சென்றனர். வழியில் கடற்கரையில் நடந்து செல்பவர்களை பார்த்துவிட்டு, “இங்க ஒருசின்ன வாக் போலாம்” என்று வண்டியை நிறுத்தினாள் பூஜா.

கடற்கரையில், வெவ்வேறு மூலிகை ஜுஸ்களால்,

உடலின் சகல உறுப்புகளையும் மக்கள் ஜுஸ்வாஷ் செய்துகொண்டிருந்தனர். லைஃப்டைமை எக்ஸ்டென்ட்

செய்வதற்காக ஜோடிகளாக நடந்து கொண்டிருந்தவர்

களைப் பார்த்தபடி கௌதம், “இங்க ஹஸ்பென்ட் -ஒய்ஃப்

நடக்கிற விதத்தை வச்சு, கல்யாணமாயி எத்தனை வருஷமாயிடுச்சுன்னு சொல்லிடலாம்” என்றான்.

“எப்படி?”

“முகமெல்லாம் பூரிப்போட, சந்தோஷமா சிரிச்சு பேசிகிட்டே நெருக்கமா நடந்தா, கல்யாணமாயி மேக்ஸிமம் ஒன் இயர்க்குள்ளதான் இருக்கும்.கொஞ்சம்

விலகி நடந்துகிட்டு, பெரும்பாலும் ஒய்ஃப் மட்டும் பேசிகிட்டு, புருஷன் அப்பப்ப ஒண்ணு ரெண்டு வார்த்தைல

பதில் சொல்லிகிட்டு வந்தான்னா, அஞ்சாறு வருஷம் ஆயிடுச்சு. ஒய்ஃப் பின்னால வர்றாளா இல்லையான்னே பாக்காம, புருஷன் பாட்டுக்கும் முன்னாடி நடந்து போய்கிட்டேயிருந்தா பத்து, இருபது வருஷம் ஆயிடுச்சு. பக்கத்து பக்கத்துல,ரெண்டு பேரும் ஒரு வார்த்தைகூட பேசாம, புத்தர் மாதிரி முகத்தை வச்சுகிட்டு, பற்றற்று நிதானமா நடந்துகிட்டிருந்தாங்கன்னா, முப்பது வருஷம் க்ராஸ் பண்ணிட்டாங்க” என்று கௌதம் கூறுவதைப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டே வந்த பூஜா, ஒரு வாக்கிங் ஜோடியைப் பார்த்தவுடன் நின்றாள்.

“கௌதம்… இவங்க நீ சொல்ற மாதிரி, அப்பப்ப ஒண்ணு ரெண்டு வார்த்தைபேசிட்டு வர்றாங்க. அவங்கள்ட்ட உங்களுக்கு கல்யாணமாயி, அஞ்சு வருஷம் ஆயிடுச்சான்னு கேக்கப்போறேன்” என்று கூறிவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள். கௌதம், “ஏய் லூசு… என்ன பண்ற?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டு, வேகமாக அவர்களை நோக்கி நடந்தாள். கௌதம் ஒன்றும்

புரியாமல் பார்க்க… பூஜா, “எக்ஸ்க்யூஸ்மீ” என்று அவர்கள் அருகில் சென்றுவிட்டாள். கௌதம் “மை காட்” என்று தலையில் அடித்துக்கொண்டு சற்றுத் தள்ளியே நின்றுவிட்டான். பூஜா அவர்களிடம் ஏதோ கேட்பதும், அந்தக் கணவன் பதில் சொல்வதும் தெரிந்தது. பிறகு அவள் கௌதமை நோக்கி வர… “நிஜமாவே கேட்டுட்டியா?” என்றான் கௌதம் பதற்றத்துடன்.

“ம்…”

“அவங்க கடுப்பாயிருப்பாங்களே…”

“இல்ல… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாங்க”

“என்ன கேட்ட?”

“இங்கருந்து வேளச்சேரிக்கு பஸ் இருக்குமான்னு கேட்டேன். லைட் ஹவுஸ் ஸ்டாப்புல வரும்ன்னாங்க” என்று கூறிவிட்டு பூஜா சிரிக்க… கௌதம் அவளைப் புன்னகையுடன் பார்த்தான்.

அன்று மாலை வரை இருவரும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தனர். பெரும்பாலும் பூஜாதான் பேசிக் கொண்டிருந்தாள். நுங்கம்பாக்கம் ஸேன்டிஸ் சாக்லேட் லெபாரட்டரி ரெஸ்ட்டாரென்டில், பேங்க்கோ ஃபிஷ் ஃபிங்கர்ஸை கடித்தபடி பூஜா மீன்களின் மருத்துவ குணங்களைப் பற்றிச் சொன்னாள். எக்ஸ்பிரஸ்அவென்யூ மாலில், எஸ்கலேட்டரில் ஏறிக்கொண்டே கௌதம் பூஜாவிடம், “இங்க வர்றப்ப மட்டும் ஆயிரம் கண்ணோட வந்தாதான், ஒரு ஃபிகரையும் மிஸ் பண்ணாம பாக்க முடியும்” என்றதற்கு பூஜா சத்தமாகச் சிரித்தாள். மாலை அமேத்திஸ்ட்டின் கார்டன் கஃபேயில் சாக்கோசிப் வாஃபில்ஸை கடித்தபடி, இன்னும் இந்த நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறித்து அசந்தர்ப்பமாகக் கவலைப்பட்டார்கள்.

ஞாயிறு இரவு. பூஜா சென்ட்ரல் ஸ்டேஷனில் அவனை ரயில் ஏற்றிவிட வந்திருந்தாள். அவள் முகம் வாட்டமாக இருந்தது. சிக்னலைப் பார்த்தபடி பூஜா, “ட்ரெய்னிங் முடிஞ்சு எங்க போஸ்ட்டிங் போடுவாங்க?” என்றாள். கௌதம், “தெரியல….. சென்னை…. பேங்ளுர், கொச்சின்….. எங்கவேணும்ன்னாலும் இருக்கலாம்” என்றவுடன் அவள் முகம் மாறியது.

“ஓகே…. லெட்ஸ் ஹோப் ஃபார் த பெஸ்ட்…..” என்ற பூஜாவின் முகம் பச்சைசிக்னலைப் பார்த்தவுடன் இன்னும் வாட்டமானது. ட்ரெய்ன் கிளம்ப… “பை…பை.” என்று கையை ஆட்டிய பூஜாவின் கண்கள் லேசாக கலங்கினாற்போல் இருந்தது. ஏன் கலங்குகிறாள்? உள்ளுக்குள் ஏதாவது லவ்வா? நினைக்கும்போதே கௌதமுக்கு திகிலாக இருந்தது. ஒருவேளை அப்படி இருந்தால், வீணாக பூஜாவின் கனவுகளை வளர்க்கக் கூடாது. அடுத்த முறை பூஜாவைச் சந்திக்கும்போது, நந்தினியின் மேல் தனக்குள்ள ஈர்ப்பைச்சொல்லிவிட வேண்டும்.

(தொடரும்)

x