“என்னிடம் வாருங்கள்… உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குகிறேன்..!” என்று மீனவர்களைப் பார்த்துச் சொன்னார் இயேசு. அவரின் வழியே பைபிளைக் கற்று பிரசாரகர் ஆனவர்தான் ஃபாதர் ரஃபேல் கார்சியா ஹெரேரோஸ். தேவாலயத்தில் பிரசாரம் செய்து, மக்களின் மனங்களைப் பிடித்து கிறிஸ்துவை நோக்கிச் செலுத்தியவர் ஆனானப்பட்ட பாப்லோவைப் பிடித்து அரசிடம் ஒப்படைத்தார் என்று சொன்னால், கொலம்பிய மக்களுக்கு அவர் தேவதூதர்தான் இல்லையா..?
மெதஜின், கலி கார்ட்டெல், போலீஸ், கெரில்லா படைகள் போன்றவற்றுக்கு இடையே நடைபெற்ற மோதல்களில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் கூட, மிக அதிக அளவில் உயிர்த் தியாகம் செய்த ஒரு கூட்டம் உண்டு என்று சொன்னால் அது பத்திரிகையாளர்கள்தான்..! 1983 முதல் 1991 வரை பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 26 பத்திரிகையாளர்கள் ‘நார்கோ’ குழுக்களால் கொல்லப்பட்டனர். டயானா துர்பே, அந்தக் கொலைகளின் கடைசி கன்னியாக இருந்தாள்.
இந்தத் தருணத்தில்தான் அதிபர் சீஸர் கவீரியா அமெரிக்க டி.இ.ஏ. ஏஜென்ட்டுகளின் உதவியை நாடினார். அந்த ஏஜென்ட்டுகள் தாங்களாக வெளிப்படையாக எந்த சாகசங்களையும் செய்யாமல், கொலம்பிய அரசு 1986-ல் உருவாக்கிய 'சர்ச் பிளாக்’ அமைப்புக்கு உதவி செய்தனர். அப்படி ஒரு உதவியால்தான் பாப்லோவின் சரிபாதியாகக் கருதப்படும் கஸ்தாவோ கவீரியா 1990-ல் கொல்லப்பட்டான். அவனுக்கு முன்பு, முந்தைய ஆண்டு பாப்லோவின் கூட்டாளி ‘மெக்ஸிகன்’ கொல்லப்பட்டான். இந்த அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தியவர், கர்னல் ஹியூகோ மார்டினெஸ். அவரையும் தன் வலையில் வீழ்த்தப் பார்த்தான் பாப்லோ. ஆனால், அவர் மசியவில்லை. எனவே, அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆனால், கர்னலுக்கு ஆயுசு கெட்டி..!
இன்னொரு பக்கம் நீதியை நிலைநாட்ட முயன்ற நீதிபதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அரசு தந்த சம்பளம், ஒரு குடும்பத்தின் ஒரு மாதச் சாப்பாட்டுக்கே சரியாக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியில்லாமல் திண்டாடினர். இந்நிலையில் ஒன்று, அவர்கள் பாப்லோவுக்குச் சாதகமாக நடந்துகொள்ள வேண்டும்... அல்லது மரணத்தைத் தழுவ வேண்டும். இதில் மனதை உருக்கும் உண்மை என்னவென்றால்… பலரும் மரணத்தை ஏற்றுக்கொண்டதுதான்..!
பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் போன்றோர் கொல்லப்பட்டதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், பதின் வயதுச் சிறுவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். பாப்லோவால் அல்ல… போலீஸாரால்..!
மெதஜின் நகரத்தில் இருந்த பல சிறுவர்கள், பாப்லோவுக்கு ஒற்றர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் வேட்டையாடப்பட்டனர். பதிலுக்கு பாப்லோ செய்த விஷயம் கொலம்பிய காவல்துறையை குலை நடுங்கச் செய்தது. வேறொன்று மில்லை… தன்னுடைய ஆட்கள் போலீஸாரைக் கொல்ல வேண்டும். கொல்லப்பட்ட போலீஸார் எந்தப் பதவியில் இருக்கிறாரோ அதற்கு ஏற்ப தன் ‘சிகாரியோ'க்களுக்குச் சன்மானம் வழங்கினான் பாப்லோ. கான்ஸ்டபிளைக் கொன்றால் ஒரு ரேட். கமிஷ்னரைக் கொன்றால் இன்னொரு ரேட். இதை அறிந்த போலீஸார் வெளியே வரவே அஞ்சினர்.
இந்த விஷயங்களை எல்லாம் அவ்வப்போது அதிபர் கவீரியாவின் காதுகளுக்கு எடுத்துச் சென்று புகார் செய்துகொண்டிருந்தனர் அதிகாரிகளும் அமைச்சர்களும்.“இந்தக் கஷ்டங்களை எல்லாம் புகார் செய்றதுக்கு அதிபர் இல்லாத ஒரே ஆள் இந்த நாட்டுல நான் மட்டும்தான்..!” என்று மனமுடைந்தார் கவீரியா.
பாப்லோவை எப்படித் தொடர்பு கொள்வது..? யார் தொடர்பு கொள்வது..? தொடர்புகொண்டால்தானே விவாதிக்க முடியும்..? பாப்லோவிடம் தொடர்பு கொள்ள மிகச் சிறந்த இடைத்தரகர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் ஆல்பெர்டோ வில்லமிசார். முதலில் அவர் பாப்லோவின் கூட்டாளிகள் ஒச்சாவோ சகோதரர்களைத் தொடர்பு கொண்டார். ஆனால், அவர்கள் கைவிரித்துவிட்டனர்.
அடுத்தபடியாக வேறொரு நபரைத் தேடிக் கொண்டிருந்தபோது சிக்கியவர்தான் ஃபாதர் ரஃபேல் கார்சியா ஹெரேரோஸ். பாப்லோவைப் போலவே அவரும் ஒரு கத்தோலிக்கர். கொலம்பிய அரசின் ‘டெலிவிசோரா நேஸ்யோனெல் கானல் 7’ தொலைக்காட்சியில் 1955-ம் ஆண்டு முதல் ‘காட்ஸ் மினிட்’ எனும் ஒரு நிமிட ஆசிர்வாத நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அதில் பெரும்பாலும் அன்றைய நாட்டு நடப்புகளை, அரசியல் கூத்துகளை ‘பிரேயர் பண்றேன் பா’ என்ற போர்வையில் சங்கேத வார்த்தைகளைப் போட்டு மன்றாடுவார். அது பலருக்கும் புரியாது. ஆனால், புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்துவிடும். எனவே, அவர் மக்களிடத்தில் பிரபலமடைந்தார்.
அப்படித்தான் ஒருநாள் தன்னுடைய நிகழ்ச்சியில் ‘பாப்லோவைப் பிடிக்க என்னுடைய உதவி ஏதேனும் தேவையா..? அரசிடம் உனக்காக நான் பேசவா..?’ என்று ஒரு ‘பிரேயர்’ செய்தார். வில்லமிசார் அகம் மகிழ்ந்தார். அரசிடம் தன் கோரிக்கைகளை முன் வைக்க இவரே சிறந்த ஆள் என்று பாப்லோவும் முடிவு செய்தான். ஃபாதர் ஹெரேரோஸ், பாப்லோவைச் சந்திக்கும் நாள் வந்தது. சந்தித்தார்கள்.
தான் கைதாகும் முன்பு அனைத்துப் பிணயக் கைதிகளையும் விடுவிப்பதாகச் சொன்னான் பாப்லோ. தான் மட்டுமல்லாது தன் கூட்டத்தினரையும் சரணடைய வைப்பதாகச் சத்தியம் செய்தான். ஆனால், அவன் விதித்த ஒரே நிபந்தனை… தனக்காகத் தான் தேர்வு செய்த இடத்தில் தானே கட்டிய சிறையில்தான் தானும் தன்னைச் சார்ந்தோரும் சிறை வைக்கப்பட வேண்டும்..!
ஒரு கடத்தலின் செய்தி..!
‘தன் சொந்தச் சிறையில் சிறை வைக்கப்பட வேண்டும்..!’ இதெல்லாம் நடக்கிற கதையா..? ஆனால், நடந்தது. ஏனென்றால், கொலம்பியா தன்னகத்தே பல வினோதங்களைக் கொண்ட நாடு. கடந்த தலைமுறையிலும் சரி… இந்தத் தலைமுறையிலும் சரி… உலகத்தால் மறக்கப்பட முடியாத இரண்டு கொலம்பியர்கள் யாரென்று கேட்டால் இவர்களைச் சொல்லலாம். ஒருவர், பாப்லோ எஸ்கோபார். இன்னொருவர், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்...
அதுசரி… கடத்தல்காரனுக்கும் கதை எழுதுபவருக்கும் என்ன தொடர்பு..? உண்டு. பாப்லோவின் இந்த ‘கிட்னாப்பிங்’ எபிஸோடை, வில்லமிசாரும், அவரது மனைவி மரூஜாவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘நியூஸ் ஆஃப் எ கிட்னாப்பிங்’ என்ற தலைப்பில் அபுனைவு நூலாக எழுதினார் மார்க்கேஸ்.
மட்டுமல்ல… கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அங்கு தனது பிசினஸை ஆரம்பிக்க ஒரு காலத்தில் பாப்லோ திட்டமிட்டிருந்தான். அதற்கு காஸ்ட்ரோவிடம் தூது செல்ல வைக்க பாப்லோ யோசித்திருந்த நபர் யார் தெரியுமா..? சந்தேகமே வேண்டாம்… மார்க்கேஸ்தான்..!
மார்க்கேஸ் நாவலாசிரியராக இருந்தாலும்கூட, தன் வாழ்வின் பெரும்பகுதியைப் பத்திரிகையாளராகக் கழித்தவர். எந்தப் பத்திரிகையில் முதன்முதலாக பாப்லோவின் ஒளிப்படம் வெளியானதோ, தனக்கு எதிராக எழுதுகிறது என்று சொல்லி எந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பாப்லோவால் கொல்லப்பட்டாரோ, அதே ‘எல் ஸ்பெக்டேட்டர்’ பத்திரிகையில்தான் மார்க்கேஸூம் பணிபுரிந்தார்.
அப்படியானவர் காஸ்ட்ரோவிடம் தூது செல்ல பாப்லோ அழைத்திருந்தால் போயிருப்பார் என்று நினைக்கிறீர்கள்..?
(திகில் நீளும்)