ஏமாந்து போவதில் சுகமுண்டா என்றால், உண்டு !
ஏமாந்து போகும் விதம்தான் அதை தீர்மானிக்கிறது. எனக்கு வந்து வாய்த்த அந்த ஆப்பை அப்படித்தான் சொல்ல வேண்டும் !
எழுத்து, இலக்கியம், நாடகம், சினிமா என மனம் போகும் போக்கில் சுற்றிக்கொண்டிருக்கும் எனது இயல்புக்கு அரசியல் வாடை சிறிதும் ஆகாது. என்றாலும் எனது ஜாதக விசேஷமோ என்னவோ பெரிய மனிதர்கள் பலரோடும் என்னை நெருங்க வைத்தது.
எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாமல் பட்டவர்த்தனமாகப் பழகக் கூடியவன் என்பதால் அனைவருக்கும் என்மேல் அன்பு இருந்தது. அன்றைய அரசியலின் நிழலாளுமையானவர் அடிக்கடி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து தன் பத்திரிகை குறித்துப் பேசிக்கொண்டிருப்பார்.
அதையெல்லாம் கண்ட சிலர் இவனைப் பிடித்தால் போதும் காரியம் நடந்துவிடும் என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்.
அப்படி வந்து சேர்ந்ததுதான் ஜார்ஜின் பழக்கம்.
மதுரையில்...மிகப் பெரிய லாட்டரி அதிபரின் கையாளாக சுற்றிக்கொண்டிருந்த ஜார்ஜ், ஒருகட்டத்தில் தன் அலைச்சலை எண்ணிப் புழுங்கி சலித்து நானும் ஒரு தொழிலதிபராகக் கொழித்து வருவேன் எனக் கருவேற்றிக்கொண்டு சென்னை வந்திறங்கியிருந்த நேரம் அது !
ஜார்ஜுக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் சொல்வதை அப்படியே நம்பிக் கேட்டுக்கொள்ளும் ஒரு கேரக்டர்.
மைலாப்பூர் ஸ்டூடியோ ஒன்றின் ரிதம் ரூமில் அவசரமாகப் பாட்டெழுதிக் கொண்டிருந்த என்னைத் தேர்ந்தெடுத்து திடீரெனக் கட்டியணைத்துக்கொண்ட ஜார்ஜ், என் இலக்கிய ஆளுமையை வானளாவப் புகழ்ந்தபடி...
“ஜி, உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் சரியாயில்ல ஜி. காசு என்ன பெரிய காசுன்னு தெனாவட்டா சுத்திக்கிட்டிருக்கிறீங்க. ஆனா, உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அதை நினைக்கணும் ஜி...”
“யோவ், எனக்கு இன்னும் கல்யாணமே ஆவலைய்யா..?”
“ஐயோ, தெரியும் ஜி. தெரியாமலா சொல்றேன்...?”
10 பேர் அடங்கிய எனது பெரிய குடும்ப பாரத்தை அறிந்து சொன்ன ஜார்ஜை மனமுருக வழி மொழிந்து மௌனமாகத் தலையசைத்தேன்.
“நீங்க சும்மா இருங்க ஜி போதும். மத்ததை நான் பாத்துக்குறேன்...முறுகலா ரவா தோசை உங்களுக்குப் புடிக்கும் கரெக்டா..? வர வெச்சிருக்கேன். வாங்க ஜி சாப்பிட்டுட்டு எழுதலாம்...”
‘அட்றா சக்கை. நம்மையும் டெவலப் செய்ய ஆண்டவன் ஒரு ஆளை அனுப்பிட்டாண்டா...’ என நெக்குருகியவன் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்த இலக்கியங்களையெல்லாம் நிறுத்திக்கொண்டேன்.
அடுத்த ஒருவாரம் சல்லென ஓடிப்போனது.
திருவல்லிக்கேணி வீட்டின் இரண்டாம் படிக்கட்டில் ஹாயாக சாய்ந்து உட்கார்ந்து தெரு கிரிக்கெட்டுக்கு ‘அம்பயர்’ செய்து கொண்டிருந்தேன்.
“போங்கடிக்காதடா....டேய் பாஸ்கர், உங்கம்மா சத்தியமா சொல்லு.., நீ க்ரீஸ்லயா இருந்த..? ச்சீமாகிட்ட வேணும்னா கேட்டுப் பார்றா...”
“ஸாரி பாஸ்கர்...அவுட்” என்று நான் கைகாட்டிக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்து கடுப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஜார்ஜைக் கண்டுவிட்டேன்.
“வாங்க பாஸ்...”
வேக வேகமாக என்னை நோக்கி வந்த ஜார்ஜ்,
“என்ன ஜி... உங்க அருமை தெரியாம... என்ன பண்ணிக்
கிட்டிருக்கீங்க இங்க..? வாங்க போவோம்...”
“எங்க..?”
“ஐயோ, இங்க வெச்சு எதும் பேசக் கூடாது. யாருமில்லாத இடத்துக்குப் போயிருவோம்... வாங்க ஜி... சட்டுன்னு ஏறுங்க.”
அகலமான பின் சீட்டுகொண்ட கைனடிக் ஹோண்டாவில் காலைக்கட்டி ஏறிக்கொண்ட என்னை, வெகு வேகமாக இழுத்துக்கொண்டு போய் மெரினா பீச்சில் நிறுத்திய ஜார்ஜ்,
“நாக மாணிக்கம் கேள்விப்பட்டிருக்கீங்களா... 21 அடி யாம் ஜி...”
“புரியல ஜார்ஜ்...”
“உங்களுக்குப் புரிய வைக்கறது ரொம்பக் கஷ்டம். வேர்ல்டுலயே காஸ்ட்லியான அந்தப் பொக்கிஷம் திண்டுக்கல்ல அகப்பட்டுருச்சாம். மொத்தம் 21 அடியாம்... அடிக்கு நாலு கோடியாம். கூட்டிப் பாருங்க ஜி...”
“...............”
“வேணாம் ஜி... நீங்க யோசிக்க ஆரம்பிச்சா எதுவும் வெளங்காது. நீங்க ஒண்ணும் பண்ண வேணாம். உங்க லிங்க்ல இருக்குற பிக் ஷாட் யாராவது ஒருத்தர்கிட்ட ஒரே ஒரு லிங்க் குடுங்க போதும். அப்புறம் நான் பாத்துக்கிறேன்...”
“எங்கப்பா பேர் கெட்டுறக் கூடாது ஜார்ஜ்...”
“எப்படிக் கெடும்? கொஞ்சம் யோசியுங்க ஜி... உங்கள நம்பித்தானே உங்க தம்பி தங்கச்சிங்க இருக்காங்க..? ”
“என் கவலையே அதுதான் ஜார்ஜ்...”
“எறங்கி அடிங்க ஜி ...”
எனக்கு குழப்பம் நேரும்போதெல்லாம் ஐயப்பனைத் தேடி ஓடுவது வழக்கம்.
ஐயப்பன் !
அசகாய சூர வியாபாரஸ்தன். அவன் தகப்பனார் சிறிய அளவில் துவங்கிய வியாபாரத்தை அகிலமெங்கும் பரப்பி கொடி நாட்டிவிட வேண்டும் என்னும் வெறி கொண்டிருந்தவன். என்னை எப்படியாவது ஆளாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன்.
என்னைவிட சில வயது மூத்தவன் என்றாலும் வாடா போடா என்று பேசிக்கொள்வோம். ஜார்ஜ் சொன்னதை அப்படியே சொன்னேன்.
“ஐயப்பா, என்ன பண்ணலாம்...?”
“யார்றா அவன்... அழைச்சுண்டு வா... பேசிப் பாக்கலாம்...”
காந்தி சிலைக்கு நேரெதிர் சாலையில் ஐஜி ஆபீ
ஸுக்கு பத்து பில்டிங் தாண்டி அன்று அமைந்திருந்த ‘செல்லா ஏசி ரெஸ்ட்டாரென்ட்’ டில் ஓல்டு காஸ்க் ரம்மும், நெத்திலி வருவலும் மிகப் பிரசித்தம்.
ஜார்ஜுக்கு கை காண்பித்துவிட்டு நாங்கள் சுடச்சுட ஆனியன் பகோடா ஆர்டர் செய்துகொண்டோம். எதிரே இருந்த டிவி-யில் அசாருதீன் டாஸ் போட்டுக் கொண்டிருந்தார்...
“21 அடின்னா என்ன... நாகத்தின் சைஸா..?”
“இல்லீங்க ஐயப்பன் சார், அது லைட்டோட சைஸ்ஸாம்...”
“அப்படீன்னா..?”
“ப்ளீஸ், மெல்லப் பேசுங்கள் சார்.”
அக்கம் பக்கம் பார்த்தபடி ஜார்ஜ் விவரிக்கத் துவங்கினான்.
“நாலாயிரம் வருஷத்துக்கு ஒருமுறைதான் அது வெளியாகுமாம். 27 நாட்டுல அதைத் தேடிக்கிட்டிருக்காங்களாம் சார். அந்த மாணிக்கக் கல் அவ்ளோ லேசுல கிடைக்காதாம்.’’
“ம்ம்ம்...”
“மாணிக்கக் கல்லை பசும்பால் கிண்ணத்துல போட்டு கீழே வெச்சுடுவாங்களாம். அதைச் சுத்தி சதுரமா செங்கல்லை ஒண்ணு மேல ஒண்ணா வெச்சு அஞ்சு அடி, பத்து அடின்னு அடுக்கிக்கிட்டே வருவாங்களாம். எத்தனை அடி வரைக்கும் அந்த மாணிக்க ஒளி வீசி வருதோ அது வரைக்கும்தான் கணக்கு. புரியுதுங்களா..?”
“ம்ம்ம்...”
“அப்படிப் பாத்தா நமக்கு கிடைச்ச நாக மாணிக்கத்தோட லைட் 21 அடி வரை வரை வருதாம்...”
ஐயப்பனின் கண்கள் விரிந்தன!
“இப்போ, எங்க இருக்கு அது..?”
சட்டெனப் பேச்சை நிறுத்திய ஜார்ஜ் என்னை உற்றுப் பார்த்தான்.
“இவன் என் கூடப் பிறந்தவன் மாதிரி ஜார்ஜ்...”
“ஐயோ...அதுக்கில்லீங்க ஐயப்பன்...”
“சொல்லுங்க...”
“எல்லாத்தையும் ரகசியமா வெச்சிருக்காங்க. திண்
டுக்கல் காட்டுல அகப்பட்ட அதுக்கு எக்கச்சக்க டிமாண்ட்.
அவங்களோட ஆஃபர் எனக்குப் பிடிச்சிருக்கு. 20 அடிக்கான காசு போதும்குறாங்க. மீதி ஒரு அடிக்கான பணம், கை மாத்தி விடற நமக்கு... ’’
“அப்படீன்னா நாலு கோடி..?”
“சரியா புடிச்சீங்க... எங்க பக்கம் ரெண்டு, உங்களுக்கு ரெண்டு. அவ்வளவுதான். புரியுதுங்களா..?”
இடையில் எனக்கும் ஐயப்பனுக்கும் சேர்த்து பத்துப் பன்னிரண்டு பேஜர் மெஸேஜ் அலறிவிட, நாளை முடிவெடுப்போம் என்றபடி கிளம்பினோம்.
அதிகாலையில், வெளிவராண்டாவில் நல்ல தூக்கத்
தில் இருந்த என்னை தலையணைக்குப் பக்கத்தில் இருந்த அழுக்கேறிய பேனாசோனிக் கார்ட்லெஸ் போன் சிணுங்கி சிணுங்கி அழைத்துக் கொண்டிருந்தது.
ஐயப்பன் !
“டேய்...ஜார்ஜ் கூப்டானா..?””
“இல்லையே ஐயப்பா....”
“என்னான்னு பாத்துருலாம்டா...”
“ஐயப்பா, எனக்கு குழப்பமா இருக்குன்னுதான் உன்கிட்ட வந்தேன்... ஆறப் போட்டு யோசிப்போமா..?”
“யோசிக்கறதுக்கு என்ன இருக்கு... நம்ம கைக்காசு போடப் போறது இல்ல. கூடி வரட்டும். உன்கிட்டயும் லிங்க் இருக்கு. என்கிட்டயும் லிங்க் இருக்கு. தள்ளிவிட்டா ரெண்டு கோடி. ஆளுக்கொரு கோடி...”
“அவ்ளோ பணத்தை எனக்கு ஆளத் தெரியாதே ஐயப்பா..?”
“அதெல்லாம் நான் சொல்லித்தரேன்டா...பாத்துக்கலாம் வா...”
சொல்லி வைத்தது போல அடுத்த போன் ஜார்ஜிடமிருந்து.
“ஐயப்பன் கால் பண்ணானா ஜி..?’’
“மரியாதை முக்கியம் ஜார்ஜ்... ஐயப்பன் என் அண்ணன் மாதிரி...”
“எனக்கும்தான் ஜி... அண்ணனைக் கூட்டிக்கிட்டு 11 மணிக்கு செல்லாஸ் வந்துருங்க ஜி...”
வெறும் தரையில் படுத்துக் கிடந்த எனக்கு முதுகு வலித்தது.
“இல்ல ஜார்ஜ்... வீரமணிதாசன் வரேன்னு சொல்லி
யிருக்கார். எங்க வீட்ல வெச்சு அம்மன் கம்போசிங் இருக்கு. நாளைக்குப் பாத்துக்கலாமா..?”
“சரியான சோம்பேறி ஜி நீங்க... இருங்க, நான் கிளம்பி வரேன்...”
அதன்பின் எல்லாம் வேகம் பிடித்தது.
ஐயப்பனுக்கு வேண்டப்பட்ட டிராவல்ஸ் ஒன்றில் இருந்து அம்பாஸிடர் கார் வரவழைக்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோயில் வாசலுக்கு சற்றுத் தள்ளிக் காத்திருந்த அந்தக் காரை சுற்றித் தேங்காய் உடைக்கப்பட, முன்னால் ஜார்ஜ் அமர்ந்துகொள்ள பின்னால் நானும் ஐயப்பனும் உட்கார்ந்துகொண்டோம்.
“கிளம்பலாம் சண்முகா...” என்ற ஐயப்பனின் குரலுக்குப் பணிந்து திண்டுக்கல் நோக்கி விரைந்தது எங்கள் வெள்ளை நிற கார்.
இன்று போல் அன்று டிராஃபிக் இல்லை என்பதால் கார் தங்கு தடையின்றி வேகமெடுத்தது. கொஞ்ச நேரத்திலேயே சுற்றிலும் பச்சைப் பசேலென வயல் வெளிகள் காணப்பட குதூகலமானேன்.
“ஆடும் வயலெல்லாம் முருகன் வேலா..? அசையாத மலை எங்கள் முருகன் தோளா...?” என்று நான் பாடப் பாட துள்ளிக் குதித்த ஐயப்பன்,“டேய்...இது, டி.எல். மகராஜனுக்குடா... இது வீரமணிதாசன் பாடுனா சரியா வரும்...” என்று கணக்கெடுத்துக் கொண்டிருந்தான்.
நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி டிஃபன் சாப்பிட்டோம். பம்பு செட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய ஹோட்டலில் மந்தாரை இலையில் வைத்து ஆவி பறக்கப் பரிமாறப்பட்ட இட்லியின் மணம் என்னைக் ‘கண்டதுண்டா..?’ என்றது.
கார் மீண்டும் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
“எங்க இருக்கோம்...” என்று ஜார்ஜ் கேட்க... “விழுப்புரம் தாண்டி போயிக்கிட்டிருகோம்க...” என்றார் சண்முகம்.
“ஓகே, உளுந்தூர்பேட்டை தாண்டி சொல்றேன், நிறுத்திக்குங்க...”
திட்டக்குடியில் கார் நின்றது.
“வாங்க, வாங்க...” என்று அவசரமாக காரைவிட்டுக் கீழிறங்கிய ஜார்ஜ், உதட்டில் ஒற்றை விரலை வைத்து “உஸ்...” என்று எங்களை உஷார்படுத்தியபடி ரோட்டுக்கு இடப்பக்கம் சரிந்த பாதை ஒன்றில் அழைத்துப் போனான்.
முன்னே போன ஜார்ஜை ஆவி அடங்கப் பின் தொடர்ந்தோம்.
ஆஸ்பெஸ்டாஷ் கூரை வேய்ந்த செவ்வகமான கொட்டகை ஒன்றில் நுழைந்தோம். அமானுஷ்யமான நிசப்தம் அங்கே நிலவியது. தூரத்தில் மங்கலானதோர் அறை தெரிய, அதன் வாசலில் நீண்டு தொங்கிய ஆரஞ்சு நிறத் துணி காற்றிலாடிக் கொண்டிருந்தது.
வரிசையாக போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்களில் தொப்பையும் இறுக அணைத்த கனத்த தோல் பைகளுமாய் ஆஜானுபாகுவான சிலர் காத்திருந்தார்கள்.
அவர்களை எல்லாம் கொஞ்சம் கூட கேர் பண்ணாமல் இரண்டு சேரை இழுத்துப் போட்டு எங்களை அமரவைத்த ஜார்ஜ், கண்ணடிப்பும் புன்னகையுமாக வேகமாக உள்ளே போனான்.
திக்திக்கெனக் காத்துக்கொண்டிருந்தோம்.
திடீரென்று “ழே...” எனும் பேரோசையொடு பெரிய தாம்பாளம் ஒன்று கீழே விழுந்தலையும் சத்தம் அந்தச் சூழலையே நாராசமாக்கியது.
எல்லோரும் துள்ளி எழுந்து நிற்க...மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்டக் கலங்கிய கண்களோடு வெளியே வந்தான் ஜார்ஜ்.
என் உள்ளங்கையை அழுந்தச் சுரண்டிய ஐயப்பன், “போயிடலாம் வாடா...” என்று காதோரம் கரகரத்தான்.
என் முரட்டு சுபாவம் வெளியே வந்தது.
“இரு ஐயப்பா... என்னதான்னு பாத்துடலாம்...”
தள்ளாடி வந்த ஜார்ஜின் மூக்கில் கர்சீப்பை அழுத்தி சேரில் உட்கார வைத்தேன்.
அப்புறம்தான் ஆரம்பித்தது விளையாட்டு !
(சந்திப்போம்)