எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?


ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கும்போது டெல்லியின் சைகைக்கு ஆடும் ஆளுநர் பதவி எதற்காக என்ற கேள்வியை அரசியல் கட்சிகள் காலங்காலமாக எழுப்பி வருகின்றன. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உச்சம் தொட்டிருக்கும் ஆளுநர் - முதல்வர் மோதல் அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கிறதோ என சிந்திக்க வைத்திருக்கிறது.

இன்றைக்கு நேற்றல்ல, புதுச்சேரியில் முதல்வரை விடவும் அங்கிருக்கும் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற தோற்றம் நீண்டகாலமாகவே நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. அதனால், பல சமயங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் ஊக்குவிப்பதிலும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிப் பார்ப்பதிலும் மத்திய அரசுகளின் பங்கும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

ஆளுநர் என்பவர், அரசின் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்து அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கக்கூடியவர் மட்டுமே. எந்த இடத்தில் அரசு இயந்திரம் தறிகெட்டுத் திரும்புகிறதோ, அந்த இடத்தில் ஆளுநர் லகானை இழுத்துப் பிடிக்கலாம். அதைவிடுத்து, எனக்கும் அதிகாரம் இருக்கிறது... நான் நினைத்தால் எதையும் சாதிப்பேன் என அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நேரடியாகக் களத்தில் இறங்குவது சரியாகாது. அத்துடன், சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஈகோ யுத்தம் நடத்துவதும் தேவையற்ற குழப்பங்களைத் தான் உண்டாக்கும். அதுபோல, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு உரிய மரியாதையும் மாண்பையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமக்கு உண்டு என்பதை முதல்வரும் உணர வேண்டும். ஆனால், புதுச்சேரியில் இதற்கெல்லாம் நேர்மாறான விஷயங்களே நடந்துகொண்டிருக்கின்றன.

தாங்கள் நடத்திக்கொண்டிருக்கும் இந்த நீயா நானா ஈகோ யுத்தத்தால் மாநிலத்தின் வளர்ச்சி முடங்கிப் போகிறது, வாக்களித்த மக்களை உதாசீனப்படுத்துகிறோம் என்பதை புதுச்சேரி ஆளுநரும் முதல்வரும் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

x