துயருக்கு வழிவகுத்த துப்பாக்கி வேதாந்தம்!


வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மெல்ல மெல்ல மூச்சுத்திணறி செத்துக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் விரட்டப்பட்டு, வேறு சில மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை, தமிழகத்தின் தாராள குணத்துக்கு விலையாக 13 உயிர்களைப் பலி கேட்டிருக்கிறது!

‘சுவாசம் திணறி மூர்ச்சையாகி மெல்ல மெல்ல உயிரிழக்கும் பேராபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற தூத்துக்குடி மக்களின் கதறலைக் காதுகொடுத்துக் கேட்க நாதியில்லை. அரசாங்கத்தின் அத்தனை கதவுகளையும் தட்டிப்பார்த்துவிட்டு, ‘இனி பொறுப்பதில் பயனில்லை’ என்று கொதித்தெழுந்த அந்த மக்களுக்கு குண்டுகளைப் பரிசளித்திருக்கிறது அரசு. ‘தாக்க வந்தால் தற்காப்பு நடவடிக்கை எடுக்கத்தானே செய்வார்கள்?’ என்று காவல் துறைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் தமிழக முதல்வர். அதைவிடக் கொடுமை, தொலைக்காட்சி செய்தி வழியாகத்தான் இந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக ‘விளக்கம்’ வேறு கொடுக்கிறார்!

நெஞ்சு கொதித்து, ஒரே ஒரு நாள் கையை ஓங்கியதற்கே தண்டனை துப்பாக்கிச் சூடு என்றால், நஞ்சுப் புகையை ஏவி தினம் தினம் கழுத்தை நெரிக்கும் கொடூரக்காரர்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குத் துணைபோன அரசுத் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

கையறு நிலையில் இருப்பவர்களை நோக்கி துப்பாக்கி நீட்டும் மனோபாவம், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கும் செயல். சர்வாதிகார சித்தாந்தம் மூலமாகத்தான் போராட்டங்களை ஒடுக்க முடியும் என்றவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பதை வரலாற்றின் பக்கங்கள் உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அழகு. அதைவிடுத்து, காக்கிச் சட்டைகளை ஏவிவிட்டு, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள நினைத்தால், அதைவிட கோழைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது!

x