விவசாயிகளின் மின் மோட்டார்களை சோலார் மயமாக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. கூடுதல் மின்சாரத்தை மின் துறைக்கு விற்று விவசாயிகள் வருவாய் பெற ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
புதுவை அரசு 2017 ஏப்ரல் முதல், விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தும் மின் மோட்டாரின் மின் கட்டணத்தை அரசே மானியமாக ஏற்று மின் துறைக்கு செலுத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2023ல் மின்துறை விவசாயிகளின் மின் இணைப்பில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தனர். இதில் ஒரு மின் மீட்டரின் விலை ரூ. 13,570. இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு பல கோடியில் டிஜிட்டல் மீட்டர் பொருத்துவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து,'பொருத்தப்படும் மீட்டர் டிஜிட்டல் மீட்டர் அல்ல. இது எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவீடு செய்யும் ரீடிங் மீட்டர். இதனால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை' என அரசு தரப்பில் அறிவித்தனர்.
இதேபோல் புதுவை மின் துறை தனியார் மயமாக்கப் பட்டால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அச்சம் ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து இலவச மின்சாரம் தரப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் மின்மோட்டார்களை சோலார் மயமாக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "புதுவையில் மின் மோட்டார்களின் பம்ப் செட்கள் மீது சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு மோட்டார்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு மானியத் துடன் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சோலார் மயமாக்கினால் கூடுதல் மின்சாரத்தை மின் துறைக்கு விவசாயிகள் விற்று பயன்பெறவும் முடியும். இது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும். புதுவை மாநிலத்தில் 6,700 மின் மோட்டார்கள் உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் பயன் கிடைக்கும். இதனால் மின்சாரத்துறையிடம் மின்சாரம் பெறவேண்டிய தேவை விவசாயிகளுக்கு இருக்காது" என்றனர்.
விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலர் ரவி கூறுகையில், " புதுவை அரசு, விவசாயிகளின் மின் இணைப்பிற்கு சோலார் மின் உற்பத்தி சாதனங்களை பொருத்துவதாக அறிகிறோம். இதற்கு முன்பாக விவசாயிகளிடம் கருத்துகளை கேட்க ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும். ஏனெனில் சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தியாகாத நாட்களில் மின்துறையிடம் மின்சாரம் பெற்றால் கட்டணம் வசூலிப்பார்களா? என்பது உள்ளிட்ட சந்தேகங்களை தீர்க்க ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும்" என்றார்.