பாம்பன் கால்வாயை தூர் வாருவது எப்போது?


நாட்டில் மிகப் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இடங்களில் பாம்பன் துறைமுகமும் ஒன்று. கி.பி.1480-ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலின் காரணமாக, இயற்கையாகவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை இடையே பாம்பன் கால்வாய் பெரிதாக உருவானது. மேலும், பாம்பனும், மண்டபமும் பாம்பன் கால்வாய் மூலம் துண்டிக்கப்பட்டு, தனித் தீவாக ராமேசுவரம் உருவானது.

பாம்பனுக்கு அருகில் குந்துகால், குருசடை தீவு ஆகிய இரு கடல் எல்லைகளுக்கு இடையில் உள்ள நீர்ப்பரப்பிலிருந்து தொடங்கி, பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலங்களை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் வரை பாம்பன் கால்வாயின் வழித்தடம் உள்ளது. கால்வாயின் அகலம் 125 மீட்டராகவும், ஆழம் அதிகபட்சமாக 2.11 மீட்டராகவும் உள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1854-ம் ஆண்டில் முதன்முறையாக 4,400 அடி நீளத்துக்கு பாம்பன் கால்வாய் தூர்வாரப்பட்டது. பின்னர், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட தனுஷ்கோடி புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களின்போது, மணலால் மூடப்பட்ட பாம்பன் கால்வாய் வழித்தடத்தில் ஆழம் 2 மீட்டருக்கும் குறைவாகிவிட்டது.

பாம்பன் கால்வாய் மண் நிறைந்து காணப்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள் கால்வாயை கடப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், பல நேரங்களில் கப்பல்களும், படகுகளும் மணலில் சிக்கி விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், பாம்பன் கால்வாயை தூர்வாரவேண்டும் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையாக உள்ளது.

தரை தட்டி நிற்கும் கப்பல்: விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு, பாம்பன் பாக் நீரிணை பகுதியில் காத்திருந்த பார்ஜ் கப்பல், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கர்நாடக மாநிலம் கார்வார் செல்வதற்காக பாம்பன் ரயில் பாலத்தை கடந்தது. குந்துக்கால் அருகே பாம்பன் கால்வாயை கப்பல் கடக்கும்போது தரை தட்டி நின்றது. தற்போது, இந்த கப்பலில் கேப்டன் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாலுமிகளும் உள்ளனர். தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இழுவைக் கப்பல் மூலம் தரை தட்டி நிற்கும் இந்தக் கப்பல் மீட்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது: மன்னார் வளைகுடாவுக்கும், பாக் நீரிணைக்கும் இடையே இயற்கை யாகவே அமைந்த பாம்பன் கால்வாய் வண்டல் படிவு அதிகமாகக் கொண்ட பகுதியாகும். இதனாலேயே இந்தப் பகுதி விரைவில் தூர்ந்து போகக் கூடியதாக உள்ளது.

பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு மேல் தூர்வாரி ஆழப்படுத்தினால் தான் 30 ஆயிரம் டன் வரை எடையுள்ள இலங்கையைச் சுற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் கூட பாம்பனை கடந்து செல்வதுடன், பயணத் தொலைவும் குறைவாகும். பாம்பன் கால்வாயை தூர்வாருவதற்கு ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்த ஆய்வை முடித்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் கீழ், கால்வாயை தூர்வாருவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

x