கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடர் ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவன் அரோனியனுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
9 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா மற்றும் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர்களான மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோர் தலா 5.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க இவர்களுக்குள் டை பிரேக்கர் நடத்தப்பட்டது.
இதில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரூஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அலிரேசா ஃபிரூஸ்ஜா, மாக்சிம் வச்சியர்-லக்ரேவ் மோதிய 2-வது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.
கடைசி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, மாக்சிம் வச்சியர்-லக்ரேவின் டிஃபன்ஸை உடைத்து வெற்றி பெற்றார். பிளிட்ஸ் ஆட்டத்தின் முடிவில் பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் செஸ் டூரில் பிரக்ஞானந்தா பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு இதே கட்டத்தில் பிளே ஆஃபில் அனைத்து ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்திருந்தார்.
பிரக்ஞானந்தா கூறும்போது, கடந்த முறை நான் சிறப்பாக செயல்படவில்லை. டைபிரேக்கர் ஆட்டத்துக்கு முன்னதாக சில மணி நேரம் ஓய்வு இருந்தது. இது உதவியாக இருந்தது” என்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.66 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.