கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பருத்தி அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் கோட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச்சில் விதை தெளித்து ஜூன் முதல் வாரத்தில் பருத்தி பறித்து, 3 வட்டங்களில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலம் பருத்தி விவசாயிகள் விற்பனை செய்வார்கள். இந்நிலையில், அண்மைக்காலமாக இரவில் மழை பெய்வது, பகலில் கடும் வெயில் அடித்து வருகிறது. பருத்தி செடியில் பூ, காய்கள் காய்க்கும் நிலையில் இதுபோன்ற காலநிலை மாற்றத்தால், 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, பருத்தி பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, பருத்தி விவசாயி குளஞ்சியப்பன் கூறியது: கும்பகோணம் கோட்டத்தில் பல ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்காலமாக போதிய விலை கிடைக்காததால், பருத்தி சாகுபடி பரப்பு 50 சதவீதமாக குறைந்து விட்டது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், பெரும்பாலான பருத்தி விவசாயிகள் மாற்றுப் பயிருக்குச் சென்று விட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பருத்தி செடிகள், தற்போது பூ, காய் காய்க்கும் பருவத்தில் உள்ளன.
இந்நிலையில், அண்மைக்காலமாக பகலில் வெயில், இரவில் மழை மற்றும் குளிர்ந்த காற்று பலமாக வீசுகிறது. இந்த காலநிலை மாற்றத்தால், பருத்தி செடியி்ல் உள்ள பூ உதிர்ந்து விடுகிறது. வெடிக்கும் பருவத்தில் உள்ள காய்களுக்குள் மழைநீர் உள்வாங்கினால் பருத்தி நிறம் மாறி, சரியான நிறம் இல்லாமல் போனால், அந்த பருத்தி அடிமாட்டு விலைக்கு கூட விற்பனை ஆகாது. மேலும், கடும் வெயிலால் பருத்தி செடி சாய்ந்து விடுவதால், அவை வளராமல் குன்றி விடுகிறது.
இதுபோன்ற பாதிப்பு கும்பகோணம் வட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்திகளில் காணப்படுகின்றன. இதனால் 1 ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், பருத்தி நல்ல விளைச்சலானால் அனைத்து செலவும் மீதம் சொற்ப தொகை தான் லாபமாக கிடைக்கும். ஆனால், காலநிலை மாற்றத்தால், பருத்தி செடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், சாகுபடிக்காக செலவு தொகையாவது கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
நிகழாண்டு பருத்திக்கு போதிய விலை கிடைக்காவிட்டால், வரும் ஆண்டுகளில் பருத்தி சாகுபடி பரப்பு மேலும் குறையும். விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செல்வது உறுதியாகி விடும். எனவே, தமிழக அரசு, பருத்தி சாகுபடியை ஊக்கவிக்க வேண்டும். அதற்கான விளை பொருட்களை மானியத்தில் வழங்குவதுடன், காப்பீடும் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.