இலவச மின் இணைப்பு எப்போது? - பல ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருப்பு


தமிழகத்தில் 1989ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில், விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2003-ம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், விண்ணப்பித்த விவசாயிக ளுக்கு மின் இணைப்பு வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், 4.25 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தனர்.

இந்நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப் படும் என தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன் பிறகு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, 1.86 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் கூறியது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி வழங்கினார். அதன்பிறகு, 2022-23, 2023 - 24ம் ஆண்டுகளில் தலா 50 ஆயிரம் வீதம் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், 86 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. மீதியுள்ள 14 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளன.

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் மின் இணைப்பு பெறுவதற்கு தயார்நிலையில் இருக்கும்படி முன்னறிவிப்பு கடிதங்களை மின் துறையினர் வழங்கியுள்ளனர். இதனால், விவசாயிகள் பயன்படுத்தாமல் இருந்த தங்களின் ஆழ்துளை கிணறுகள், குழாய் களை சரி செய்து, மின்வாரிய அறிவிப்பின்படி ரூ.75,000 மதிப்பிலான புதிய மின் மோட்டார்களை வாங்கிவைத்துள்ளனர். பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு தேவையான மின்கம்பங்கள் வயல்வெளிகளில் நடப்பட்டு, மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. ஆனால், மின்மாற்றிகள் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை.

இதேபோல, ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2.39 லட்சம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்குவது குறித்த அறிவிப்பு தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் இதே நிலைதான் உள்ளது.

எனவே, கடந்த 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மின் இணைப்பு பெற்ற விவசாயிகளின் விவரங்களை மின் பிரிவு அலுவலகங்கள், மின் துறை இணையதளங்களில் வெளியிட வேண்டும். மேலும், 2.39 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து 2026, மார்ச் 31-ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால், அனைத்து மின் அலுவலக வாயில்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

x