‘அழகர் டாக்’ - கள்ளழகர் இருப்பிடத்தை அறிந்துகொள்ள உதவிய செல்போன் செயலி!


அரசு துறைகள் முயற்சி எடுக்காவிட்டாலும் மதுரை நகரின் வலைதளவாசிகளின் முயற்சியால் வெளியிடப்பட்ட ‘தூங்கா நகரம்’ என்ற செல்போன் செயலியால், சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் உலா வரும் இடங்களை பக்தர்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொண்டு பயனடைந்து ள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வுவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது திருவிழா நிறைவடையும் சூழலுக்கு வந்துள்ளது. கள்ளழகர் அழகர்கோவிலில் புறப்பட்டது முதல் இருப்பிடம் சேருவது வரை அவர் சென்ற ஒவ்வொரு மண்டகப் படிகளிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசிப்பதும், உற்சாகமாக பின் தொடர்வதும் வழக்கம். இதற்காக கள்ளழகர் எந்த சாலையில் செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பது தெரியாமல் பக்தர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் குடும்பம், குடும்பமாக படையெடுப் பார்கள். அப்போது பக்தர்கள் சிரமப்படுவதோடு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வாடிக்கை.

பக்தர்கள் சிரமத்தை போக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை எஸ்.பி. ஆக இருந்த மணிவண்ணன் முயற்சியில், கள்ளழகர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு பக்தர்கள் செல்லும் வகையில் மதுரை காவலன் செயலியில் ‘ட்ராக் அழகர்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பக்தர்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற்றனர். பல்லாயிரம் பேர் இதனால் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த செயலி முறை நடைமுறைப்படுத்தப்படாததால் பக்தர்கள் சிரமப் பட்டனர். மீண்டும் அந்த வசதியை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் அரசுத் துறைகளோ, அதிகாரிகளோ இக்கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த தூங்கா நகரம் என்ற வலைத்தளத்தை செயல்படுத்திவரும் இளைஞர்கள், அவர்களுடைய செல்போன் செயலியில் “அழகர் வழித்தடம்” என்ற சேவையை அறிமுகப்படுத்தி, கள்ளழகர் இருக்கும் இடம், அவர் செல்லும் இடங்களை பக்தர்கள் செயலி மூலம் தெரிந்துகொள்ள செய்தனர்.

இது குறித்து தூங்கா நகரம் வலைதள நிர்வாக இயக்குநர் முத்துகுமார் கூறியதாவது: 'இந்து தமிழ் திசை' நாளிதழில் சமீபத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட ‘ட்ராக் அழகர்’ செயலி பக்தர்களுக்கு பயனளித்தது பற்றியும், இந்த ஆண்டு அந்த வசதி செயல் படுத்துவார்களா? மாட்டார்களா? என்ற கேள்விகளுடன் செய்தி வெளியானது. நாங்கள் மதுரை மக்களுக்காக பரிசோதனை முறையில் முயற்சி எடுக்கலாம் என்று செயலி மூலம் ‘அழகர் வழித்தடம்’ என்ற வசதியை இந்த சித்திரைத் திருவிழாவுக்காக செயல்படுத்தினோம்.

இச்செயலியை நேரடியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி அம்மன்-சுவாமி ஊர்வலம், தேரோட்டத்தை தொடர்ந்து தற்போது கள்ளழகர் இருப்பிடத்தை பக்தர்கள் எளிதாக அறிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எங்களுடைய செயலியை பார்வையிடுகின்றனர். இதற்காக அழகர் மலையில் இருந்து இறங்கி தற்போது உலா வருவது வரை, ஷிப்ட் முறையில் 6 மணி நேரத்துக்கு 2 ஊழியர்கள் வீதம் சுவாமியுடன் பயணம் செய்கின்றனர், என்று கூறினார்.

அரசு துறைகள் கண்டுகொள்ளாத நிலையில், தன்னார்வத்துடன் களம் இறங்கி பக்தர்களுக்கு உதவும் வகையில் செயலி வெளியிட்ட தூங்கா நகரம் குழுவினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

x