டெல்டாவில் குறுவை சாகுபடி மும்முரம் - பயிர் காப்பீடு அறிவிக்க எதிர்பார்ப்பு


மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருப்பதால், இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1,52,646 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு 1.93 லட்சம் ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேவையான உரங்கள், விதை நெல் வேளாண்மை துறை சார்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 97,965 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 1.72 லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்தாண்டு 4,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு 61,404 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்தாண்டு 96,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 97,000 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான ஆடுதுறை-53, கோ-51, கோ-55, ஏஎஸ்டி-16, ஏஎஸ்டி-21, டிபிஎஸ்-5 ஆகிய ரக விதைநெல் போதுமான அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 336 டன் விதைநெல் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பற்றாக்குறை இல்லாத மும்முனை மின்சாரம்: குறுவை சாகுபடியை பெரும்பாலும் பம்புசெட் மூலமே விவசாயிகளே மேற்கொண்டு வருகின்றனர். தாளடி அறுவடை முடிந்த பின்னர், கோடை உழவு செய்த விவசாயிகள் தற்போது, பம்புசெட் மூலம் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். வயலுக்கு உரம் இடுதல், வரப்புகளை சீரமைத்தல், நாற்றங்கால் அமைத்தல், நாற்று விடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு ள்ளனர். இதுமட்டுமின்றி, விவசாயப் பணிக்கு இந்தாண்டு மும்முனை மின்சாரம் பற்றாக்குறை இல்லாமல் கிடைத்து வருவதாலும், ஏப், மே மாதங்களில் அவ்வப்போது பெய்த மழையாலும் குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உரம் மானியம் வேண்டும்: குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இதில், குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஏக்கருக்கு உரம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதை யூரியா, பொட்டாஷ், டிஏபி என உரமாக வழங்கியதால் விவசாயிகளுக்கு நேரடியாக பயன்கிடைத்து வந்தது. இதனால், சிறு, குறு விவசாயிகள் பலரும் பயன் பெற்றனர்.

ஆனால், கடந்தாண்டு உரமானியத்துக்கு பதில் இயந்திர நடவை ஊக்குவிக்கும் விதமாக நடவு மானியம் வழங்கப்பட்டது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டதால், இயந்திர நடவை செய்த பெரு விவசாயிகள் மட்டுமே பயனடைந்தனர். விவசாயத் தொழிலாளர்களை கொண்டு நடவு செய்த சிறு விவசாயிகளுக்கு இந்த மானியம் கிடைக்காததால், கடந்தாண்டு குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளி டேயை சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்தாண்டு உரம் மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எல்.பழனியப்பன் கூறியது: பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி பணிகள் தற்போது டெல்டா மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. அதேபோல, முன் கூட்டியே சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக வாய்ப்புள்ள விவசாயிகள் பலரும் நாற்றங்கால்களை அமைத்து பிற விவசாயிகளுக்கு நாற்றுகள் வழங்க முடிவு செய்துள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம், குறுவைக்கான பயிர்க் காப்பீடு திட்டம் ஆகியவற்றையும் இந்தாண்டும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியது: டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடியின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதற்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பம்பு செட் மூலம் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றாலும், ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்ததும், சாகுபடி பணிகள் மேலும் தீவிரமடையும் என்றனர்.

x