4,500 உறுப்பினர்களை கொண்ட என்எல்சி ஓபிசி பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுமா?


நெய்வேலியில் உள்ள என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெய்வேலி நகரில் என்எல்சி ஓபிசி பணியாளர் நலச்சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 4,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சங்கத்தின் தேர்தல் நடத்தப்படாத நிலையில், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், தேர்தல் நடத்த வேண்டும்; வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; வி.பி.சிங் அரங்கத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து பிப்ரவரி 13ம் தேதி தேர்தல் நடத்த திட்டமிட்டனர். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு காரணமாக நிர்வாகிகள் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ரகசிய வாக்கெடுப்பு முடிந்து இதுவரை தேர்தல் நடத்தப்படாதது குறித்தும், சங்க சந்தா தொகைகள் வரவு செலவுகள் குறித்தும், சங்கத்தின் உறுப்பினர் மதியழகன் கேள்வி எழுப்பியதோடு, அதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து அவர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட மதியழகன் என்எல்சி கண்காணிப்பு மற்றும் மாவட்டப் பதிவாளிரிடம் சங்க முறைகேடுகள் குறித்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் நாராயணசாமி என்பவரும் சங்க நிர்வாகிகள் மீது புகார் அளித்ததால் நீக்கப்பட்டு, பல்வேறு பரிந்துரைகளுக்குப் பின் மீண்டும் சங்கத்தில் இணைக்கப்பட்டார்.

இது தொடர்பாக சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.பினுக்குமார் கூறுகையில், “இந்த சங்கத்தை பல்வேறு இக்கட்டான சூழலைக் கடந்து நிலைநிறுத்தினோம். தற்போது சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். சங்கத்திற்கு உறுப்பினர்களிடம் இருந்து சந்தா மற்றும் வி.பி.சிங் அரங்கம் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து கேள்வி எழுப்பியவரை எவ்வித விளக்கமும் கேட்காமல் தன்னிச்சையாக நீக்கியது தவறு.

சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சத்திற்கு மேல் சந்தா பணம் வருகிறது. ஆனால் சங்கத்திற்கான மின் கட்டணத்தை லட்சக்கணக்கில் நிலுவை வைத்திருப்பதாக அறிகிறேன். எனவே மின் கட்டணத்தை நிர்வாகம் மாதாமாதம் சந்தா பணத்தில் பிடித்தம் செய்துகொள்ள வேண்டும் என கடிதம் அளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தற்போதைய சங்க செயலாளர் அழகுராஜிடம் கேட்டபோது, “சங்க வரவு செலவுகளை கணக்கிட்டு, பதிவாளரிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும் சங்க புதுப்பிப்பு பணிகள் முடிந்தவுடன் முறையாக தேர்தல் நடத்தப்படும். அலுவலக மின்கட்டணம் அண்மையில் செலுத்துப் பட்டுள்ளது. சங்கக் கட்டுப்பாட்டை மீறியதால் மதியழகன் நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.

மாவட்ட பதிவாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, “சங்க புதுப்பிப்பு தொடர்பாக தணிக்கை முடிந்தவுடன், அதனடிப்படையில் தாமதப் புதுப்பிப்பு க் கட்டணம் நிர்ணயித்து புதுப்பிக்கப்படும். மேலும் சங்கத்தில் நிலவும் முறைகேடு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் புகார் குறித்து சொசைட்டிக்கு பரிந்துரைத் துள்ளோம். அவர்கள் அறிக்கை அளித்தப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x