புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ தாக்குதல் மூலம் உலகுக்கு இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இந்தியா தனது இலக்கு என்ன என்பதில் உறுதியாக இருந்தது. அது பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ராணுவத்தை முடங்க செய்தது. அதனால் போர் நிறுத்தத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாத அமைப்புகளை தாக்கியது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இந்திய எல்லையோர பகுதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. அதை இந்தியா முறியடித்தது.
அதோடு இந்தியாவின் பதிலடி மிகவும் துல்லியமாக இருந்தது. எதிர் தரப்பின் 11 விமான தளங்களை இந்திய குறிவைத்ததாக தகவல். இதையடுத்து பாகிஸ்தானின் வான் படையின் திறன் பலம் மங்கியது. போர் தொடுக்கவும் முடியாது, வான் பாதுகாப்பு சார்ந்து செயலாற்றவும் முடியாத நிலை எழுந்தது.
நூர் கான் விமான, சர்கோதா விமான தளம், முரீத், சியால்கோட், ஜாகோதாபாத், சுக்கூர், பஸ்ரூர் உள்ளிட்ட விமான தளங்களை இந்தியா தாக்கியது. இந்த தளங்கள் பாகிஸ்தானின் விமானப்படையின் முக்கிய நிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. F-16s, JF-17, தண்டர்ஸ், மின்னணு பிரிவுகள் உள்ளிட்டவற்றை இந்த தளங்கள் கொண்டிருந்தன. இதனால் ஒரே இரவில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பலவீனமானது.
இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ என்ற அதிநவீன வான் பாதுகாப்பு கவச அமைப்பு அளித்த தகவல் மிகவும் முக்கியமானது. இந்த தகவலை கொண்டு எதிரியின் வான் அத்துமீறல்களை இந்தியா முறியடித்தது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலிலும் இந்தியாவின் முப்படைகளும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.