வர்த்தக போரை நிறுத்திக் கொண்ட சீனா- அமெரிக்கா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக மோதல், உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை சீர்குலைத்து நிதிச் சந்தைகளை பதம் பார்த்தது.
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை: ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மே-11 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத கலாசாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம்: ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில், இந்தியத் தரப்பில் மிகக் குறைந்த இழப்புகள் மட்டுமே ஏற்பட்டன எனத் தெரிவித்தார்.
மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதை அடுத்து, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் தணிந்துள்ள நிலையில், இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரால் ஈர்க்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் `சிந்தூர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.