காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையில் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பிரச்சினையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாள் நீடித்தது. இதில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன் பின் இந்த போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் உறுதி செய்தன.
இந்த அறிவிப்பு வெளியான 16 மணி நேரத்துக்கு பிறகு அதிபர் ட்ரம்ப் ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: வலிமை, ஞானம் மற்றும் மனஉறுதி உடைய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்கள், தற்போதைய மோதலை நிறுத்தி கொள்ள முடிவு செய்தனர். இல்லையென்றால் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பர். உங்களின் துணிச்சலான செயலால் உங்களின் மரபு உயர்ந்திருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்க அமெரிக்காவால் உதவ முடிந்ததை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். ஆலோசிக்கவில்லை என்றாலும், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நான் கணிசமாக உயர்த்தவுள்ளேன். மேலும், நீண்ட காலமாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்பதில் நான் உங்களுடன் இணைந்து செயல்படுவேன். சிறப்பான செயலை செய்த இரு நாட்டு தலைவர்களையும் கடவுள் ஆசிர்வதிப்பார். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதில் மூன்றாம் நாடு மத்தியஸ்தம் செய்ய எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா, அமெரிக்க அதிபரின் இந்த கருத்துக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை