மதுரையில் சித்திரைத்திருவிழாவையொட்டி, வலையங்குளம் தனி லிங்க பெருமாள் கோயிலில் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மெகா அன்னதான விருந்து நடந்தது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முதல் நாள் எதிர்சேவை நிகழ்ச்சியை காண வலையன்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கள்ளழகரை தரிசிக்க செல்வர். இதையொட்டி வளையன்குளத்தில் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோயிலில் பொது மக்களுக்கு மெகா அன்னதான விருந்து அளிப்பது வழக்கம்.
இதன்படி, நேற்று கள்ளழகர் எதிர்சேவையையொட்டி லிங்க பெருமாள் கோயிலில் மெகா அன்னதானம் நடந்தது. 18-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மெகா விருத்திற்கென கத்திரிக்காய் 1200 கிலோ, உருளைகிழங்கு 750 கிலோ, முருங்கை 500 கிலோ, மாங்காய் 300 கிலோ, கேரட் 250 கிலோ,பீன்ஸ் 200 கிலோ, முட்டை கோஸ் 300 கிலோ வாழைக்காய் 300 கிலோ என, மொத்தம் மூன்றரை டன் காய்கறிகள் ஆயிரம் கிலோ துவரம் பருப்பு சேர்ந்து சாம்பார் தயார் செய்யப்பட்டது. 130 மூடை அரிசியில் சாதம் சமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டி சின்னத்துறை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.