திண்டுக்கல்: கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறவுள்ள பிரையண்ட்பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்குவதை சுற்றுலாபயணிகள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாத இறுதிவாரத்தில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும்நிலையில் பிரையண்ட்பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்க துவங்கிவிட்டது. இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் கோடைவிழாவில் படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி, விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் இணைந்து செய்துவருகின்றனர்.
மலர் கண்காட்சிக்கு தயார்நிலையில் பிரையண்ட்பூங்காவில் முன்னதாகவே பூக்கள் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளன. இங்கு சால்வியா, டெல்பினியம், பிங்ஆஸ்டர், ஆர்னித்தோகேலம், கஜானியா, பென்ஸ்டீமன், வெர்பினா, கொரியாப்சிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள் பூக்கத்துவங்கிவிட்டன. மேலும் மேரிகோல்டு, ஸ்டெட்டிஸ், டையாந்தாஸ் உள்ளிட்ட மலர்வகைகளும் பிரையண்ட்பூங்காவில் காணப்படுகிறது.
மலர் கண்காட்சிக்கு மேலும் அழகூட்ட மலர் கண்காட்சி நடைபெறும் நாளில் சுற்றுலாபயணிகளை கவரும்விதமாக பூக்களால் பல்வேறு உருவங்கள் தயார் செய்துவைக்கவும் தோட்டக்கலைத்துறையினர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலையும் நிலவுவதால் கடந்த சில தினங்களாக சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துகாணப்படுகிறது.
ஊட்டி கோடைவிழா மலர் கண்காட்சி நிறைவுபெற்றபிறகு, இதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ளது.