கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுகிறது!


படம்: ஜெ.மனோகரன்

கோவை: ஆர்.எஸ்.புரத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற விளையாட்டு ஆர்வலர்களின் 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுகிறது.

கோவையில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு, விளையாடுவதற்கு பெரிய அளவிலான ஹாக்கி மைதானங்கள் இல்லை. எனவே, கோவையில் சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக ஹாக்கி வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இச்சூழலில், கடந்த அதிமுக ஆட்சியில் ஆரோக்கிய சாமி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டன. ஆனால் தொடரவில்லை.

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஹாக்கி வீரர்கள், மக்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஹாக்கி மைதானம் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மைதானத்திலேயே சர்வதேச தரத்தினால் ஆன செயற்கை புல் வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணியை தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ”72-வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பள்ளியின் 7.02 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் அஸ்ட்ரோ டர்ப் எனப்படும் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி தளம், இருபுறமும் பார்வையாளர்கள் அமரும் மாடம், வீரர்கள் உடை மாற்றும் அறைகள், குடிநீர், கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன” என்றனர்.

தமிழ்நாடு ஹாக்கி சங்க பொதுச் செயலாளரும், கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளருமான செந்தில் ராஜ் குமார் கூறும்போது, ”கோவையில் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் 2,500 பேர் உள்ளனர். இவர்கள் பயிற்சி மேற்கொள்ள பொதுவான ஹாக்கி மைதானம் எதுவும் இல்லை.

இவர்கள் ‘டர்ப்’ களத்தில் போட்டிகளில் பங்கேற்ற பயிற்சி செய்ய வேண்டும் என்றாலே மதுரை, கோவில்பட்டி போன்ற இடங்களுக்கு சென்று வரும் சூழல் உள்ளது. எனவே, கோவை ஹாக்கி வீரர்களின் பயன்பாட்டுக்கு ஹாக்கி மைதானம் அமைத்து தர வேண்டும் என 25 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. விரைவில் திட்டப் பணியை முடித்து பயன்பாட்டு க்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.

x