ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 500-க்கும் மேற்பட்டார் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணம், பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் உள்ள சினா கன்டெய்னர் யார்டில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்பகுதியில் இருந்து கரும்புகை மற்றும் நெருப்பு பந்து எழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கட்டிடம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல கன்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. 4 பேர் உயிரிழந்ததாகவும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹார்மோஸ்கான் மாகாண நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
காஸ் டேங்கர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதில் அலட்சியம் இருந்ததும் இந்த விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் தேசிய எண்ணெய் பொருட்கள் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் தொட்டிகள், விநியோக வளாகங்கள் மற்றும் எண்ணெய் குழாய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இதே துறைமுகத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அங்கிருந்த கணினிகள் செயலிழந்து, பல நாட்களுக்கு போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டது.
புதிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே ஓமனில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது