[X] Close

உல்லாசம் பொங்கும் ‘அந்தக்கால’ தீபாவளி! 


andha-kaala-diwali

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 19:40 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 பண்டிகைகள் குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்தவை. பண்டிகைகளின் தல ... தீபாவளித் திருநாள்தான். புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள், ரீலீஸ் படங்கள் என பலவிதமான கொண்டாட்டங்களில் தீபாவளி வந்தது தெரியாமல், போவதும் தெரியாமல் தடாலென ஓடிவிடும். ஆனால் வருடம் முழுவதும் நினைப்புத் தித்திப்புகள் இனித்துக் கொண்டே இருக்கும்.

 எண்பது மற்றும் தொந்நூறுகளில் தீபாவளிக் கொண்டாட்டமே அலாதியானது என்கிறார்கள் ரசித்துத் திளைத்தவர்கள். அப்போதுதான் ரெடிமேடு ஆடைகள் சட்டையை மாட்டிக்கொண்டு மெள்ள மெள்ள வந்து தலைகாட்டிய காலம். ‘என்னதான் சொல்லு... நம்ம டெய்லர் மாமா தைச்சுக் கொடுக்கறா மாதிரி இந்த ரெடிமெடு டிரஸ் இல்லப்பா’ என்று கடையில் துணி வாங்கி, ‘இப்படித் தைக்கணும், அப்படித் தைக்கணும்’ என்று அளவு கொடுக்கும் ரகளையே தனிரசனை.

  தீபாவளிக்கு இரண்டு மாதம் முன்பாகவே டெய்லர் கடைகள் களைகட்டத் துவங்கிவிடும். ஒரு மாதம் முன்பே, ‘தீபாவளிக்குத் துணிகள் தைப்பது முடிந்து விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பல டெய்லர் கடைகளில், அறிவிப்புப் பலகை தொங்கும். பலருக்கும் தூக்கிவாரிப்போடும்.

  தீபாவளிக்கு முதல்நாள் நள்ளிரவில் கூட, டெய்லர் கடையில் இப்போ வருமோ... அப்போ வருமோ... என்று தைத்த துணிகளை வாங்கக் காத்திருப்பார்கள். வாங்கியதும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடியதெல்லாம் சொன்னால், இந்தக் காலத்துப் பசங்க, களுக்கென்று சிரிப்பார்கள்.

 தீபாவளிக்கு முதல் நாள் பஜாரைச் சுற்றுவது தனி போனஸ். விடிய விடிய பஜாரில் சுற்றிச் சுற்றி வருவார்கள். நேரமாக ஆக, பட்டாசு, ஜட்டி பனியன், கைலி சட்டை விலைகளெல்லாம் குறைந்து கொண்டே வரும். போர்வை தலையணை கூட விலை குறைந்து வாங்கலாம். விடியும்போது வீட்டுக்குள் நுழைந்து, தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து, காலரில் மஞ்சள் குங்குமமிட்ட சட்டையையும் முழுக்கால் டிரௌசரையும் போட்டுக் கொண்டு, வீதியில் ஒரு ரவுண்டு வரும் போது, ஏரியா ஹீரோ கணக்காக நடை இருக்கும். நண்பர்கள் சட்டையைத் தொட்டுத் தொட்டுப் பார்க்க, கிறுகிறுத்துப் போவோம்.

  பிறகு வீட்டுக்கு வந்த சுட்ட பலகாரங்களை தட்டில் வைத்து அம்மா தருவாள். எதிர்வீடு, அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கொடுத்து வருவோம். அவர்கள் தீபாவளிக் காசு தருவார்கள். விழுந்துவிழுந்து நமஸ்காரம் செய்தால், இன்னும் வெடிக்கக் காசு கிடைக்கும். ரிலீஸ் படத்தைப் பார்க்கலாம். காசு எண்ணும் போதே, மனம் கணக்குப் போடும். இப்படியான கொடுக்கல் வாங்கலெல்லாம் இல்லை இப்போது. காரணம்…வீட்டில் பட்சணங்கள் பண்ணுவது குறைந்து, கடையில் வாங்குவது அதிகரித்துவிட்டது.

 தீபாவளி ரிலீஸ் என்றாலே அது கூடுதல் ஸ்பெஷல். கமல், ரஜினி படங்கள் வந்தால், அந்த வருட தீபாவளி, எக்ஸ்ட்ரா எனர்ஜி. அந்த வருடமே சரித்திரப் பதிவாகிவிடும். ஸ்பெஷல் காட்சி போடுவார்கள். கமல் ரசிகன் ரஜினி ரசிகனுக்கும், ரஜினி ரசிகன் கமல் ரசிகனுக்கும் டிக்கெட் பரிமாறிக் கொள்வான். எட்டுப்பத்து நண்பர்கள் சேர்ந்து படம் பார்ப்பார்கள். போகும் போதே, முடிந்து போன லாட்டரிச் சீட்டுகளை அள்ளி சேகரித்து, அதை இரண்டாக நான்காக எட்டாகக் கிழித்து, கமல் மற்றும் ரஜினி என்ட்ரியின் போது விசிலுடன் சேர்த்து இதையும் பறக்கவிடுவார்கள்.

  எண்பதுகளில் 25 வயதுக்குள் இருந்தவர்களை இப்போது நிறுத்திக் கேட்டால், நூற்றுக்கு முப்பது நாப்பது பேர், தீபாவளி நாளில் மூன்று படங்களை வரிசையாகப் பார்த்திருப்பார்கள். நம்மைக் கட்டிப் போடும் டி.வி. நிகழ்ச்சிகளோ, நம்மையே மறக்கச் செய்யும் செல்போன்களோ அப்போது இல்லை. பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளுக்குச் சென்று பெரியவர்களிடம் குடும்பமாக விழுந்து ஆசி வாங்குவார்கள். சிறுவர்களுக்கு காசு, பட்டாசு தருவார்கள். அம்மாவின் அன்பு உணவாகவும் பண்டமாகவும், அப்பாவின் அன்பு  உடையாகவும் பட்டாசாகவும், நண்பர்களின் அன்பு பாராட்டாகவும் சினிமா டிக்கெட்டாகவும் பெரியவர்களின் அன்பு ஆசியாகவும் வாழ்த்தாகவும் கிடைத்த ,அந்தத் தீபாவளியை இப்போது நினைத்தாலும் தித்திப்புதான். மத்தாப்பு சந்தோஷங்கள்தான்!

   டிராயரில் இந்தப் பக்கம் பாக்கெட்டில் பண்டங்களும் அந்தப் பக்கப் பாக்கெட்டில் பட்டாசுகளும் வைத்துக் கொண்டு, தெருமுனையில் நண்பர்களுடன் வெடித்த காலமெல்லாம்... இப்போது புஸ்வாணமாகிப் போனது.

 எண்ணெய் கொதிக்கும் போதே வாசனை வீட்டைச் சூழும். முறுக்கு எடுக்கும் போதே நறுமணம் கமழும். நெய் வாசனையும் கார வாசனையும் கைகோர்த்து வீட்டை நிறைத்திருக்கும். இப்போது ரெடுமேடு ஸ்வீட்ஸ், ரெடிமேடு ஆடைகள். தனித்தனியே பட்டாசைத் தேர்வு செய்தது போய், பாக்ஸ் வாங்கி கௌரவம் சேர்க்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக்கிங். அமேசானில் ஜட்டிபனியன். போதாக்குறைக்கு, தீபாவளித் திருநாளில்... புத்தம்புது காப்பியாக ரிலீஸ் பட டௌன்லோடு.

  வாழ்த்துகளை நேரில் சொன்னது போய், செல்போனில் சொன்னது போய், இப்போது மெசேஜாகிவிட்டது. அதுவும் தீபாவளி என்று மெசேஜ் அனுப்பினால் காசு பிடுங்குவோம் என்று செல்போன் நிறுவனங்கள் எச்சரித்துவிடும். அதனால் ஒருவாரத்துக்கு முன்பில் இருந்தே வாழ்த்து மெசேஜ்கள் வரத் துவங்கிவிடும்.

  எக்கச்சக்க சேனல்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். டி.வி. க்கு எதிரே சிலையாகிவிடுகிறார்கள் பலரும். மாற்றி மாற்றி சேனல் பார்ப்பதால், ரிமோட் பட்டனே பழுதாகிவிடும். நல்லெண்ணெய் குளியலும் இல்லை. டி.வி.யால் கண்ணும் எரிச்சலாகிப் போகும். போதாக்குறைக்கு பையன் தியேட்டருக்கு போகும் போது டி.வி.யில் ஆரம்பித்த படம், எக்குத்தப்பான விளம்பர இடைவேளைக்குப் பிறகு என ஏகப்பட்டதுகளைக் கடந்து, படம் பார்த்துத் திரும்பி வந்தவன் வீட்டுக்குள் நுழையும் போது, முழுசாக மூணு ரீல் கூட ஓடியிருக்காது. இதிலேயே அயர்ச்சியாகிவிடுவார்கள் மிடில் க்ளாஸ் அன்பர்கள்.

  விதம்விதமாக, ரகம் ரகமாக, தினுசு தினுசாக இணையதளத்தில் திரி கொளுத்தலாம். வெடிக்கலாம். அதை நண்பர்களுக்கு ஷேர் செய்து தீபாவளி வாழ்த்துச் சொல்லலாம். அவர்களும் இணையதளத்தில் வெடிப்பார்கள். புஸ்வாணம் வைப்பார்கள். சங்குச்சக்கரம் போடுவார்கள். அதை இன்னும் இன்னும் ஷேர் செய்வார்கள். இப்போது வெடிக்க இரண்டு மணி நேரம் என்று  வேறு சொல்லிவிட்டது சட்டம்.

அடுத்தடுத்து, எண்ணெய் வைத்துக் கொள்ளும் அளவு, ஸ்வீட் சாப்பிடும் நேரம், எவ்வளவு ஸ்வீட் சாப்பிடவேண்டும், எந்தக் கலரில் ஆடைகள் வாங்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்களோ என்னவோ?

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close