[X] Close

ஒழுக்க நாயகன் சிவகுமார் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகுமார் சார்!


sivakumar-birthday

நடிகர் சிவகுமார்

  • kamadenu
  • Posted: 27 Oct, 2018 13:55 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இங்கே, மனிதத்தோடும் தனிமனித ஒழுக்கத்தோடும் வாழ்வதே வியப்பாகவும் மலைப்பாகவும் பார்க்கத் தொடங்கிவிட்ட காலம் இது. இங்கே மனிதம் குறைந்துவிட்டது. தனிமனித ஒழுக்கம் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் அதையே தன் சுவாசமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிற நடிகர் சிவகுமார், இன்றைய இளைஞர்களுக்கான ரோல்மாடல்.

அழகும் இளமையும் துடிப்பும் கொண்ட அந்த இளைஞன், காக்கும் கரங்கள் எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் காலெடுத்து வைத்தார். ஏவிஎம்மின் இந்தப் படம், உயர்ந்த மனிதன், ஜெமினியின் மோட்டார்சுந்தரம் பிள்ளை, ஏபி.நாகராஜனின் கந்தன் கருணை என்றெல்லாம் நடித்தார். கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறினார்.

இயக்குநர் கே.பாலசந்தரின் எதிரொலியிலும் நடித்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் படங்கள் இவருக்கு தனி அடையாளத்தைக் காட்டின. வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. நல்ல நடிகர் என்ற பெயரை சம்பாதித்துக்கொண்டே இருந்தார்.

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியின் நாயகனாக வாத்தியார் கேரக்டர், இவருக்கு மிகப்பெரியப் பெயரைத் தந்தது. கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, பத்ரகாளி என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரியான படங்களாக அமைந்தன. இவரின் நூறாவது படமாக வந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரியையும் செம்பட்டையனையும் ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். வண்டிச்சக்கரம் படமும் அப்படித்தான். மிகப்பெரிய ஹிட்டடித்த படம் இது.

இவரின் வசன உச்சரிப்பும் உடல்மொழியும் முகபாவங்களும் எல்லோரையும் கவர்ந்தன. அந்த சமயத்தில்தான் மீண்டும் இயக்குநர் சிகரத்தின் இரண்டு படங்கள் இவருக்குக் கிடைத்தன. அக்னிசாட்சியையும் அந்த, கனாக்காணும் கண்கள் மெல்ல சரிதாவையும் மறக்கவே முடியாது.

அடுத்தது… ஜேகேபி. ஜரிகை வேஷ்டி, ஜிப்பா, விபூதி, குங்கும சந்தன நெற்றி, சால்வை என மிகப்பெரிய சங்கீதக் கலைஞராக ஜேகேபியாக வாழ்ந்துகாட்டினார் சிவகுமார். மரிமரிநின்னே பாடும்போது ஒரு செருக்கு, மோகம் எனும் தீயை நானும் கொன்றுபோடவேண்டும் என்று பாடும் போது, ஒரு விரக்தி, பூமாலை வாங்கி வந்தேன் பாடும்போது ஓர் அவலம், தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் என்று பாடும்போது அவமானம் மறந்த நிலை, கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் பாடும்போது, ஒரு கம்பீரப்பெருமிதம், சுலக்‌ஷனாவிடம் அன்பு, சுஹாசினியிடம் பிரமிப்பு, டெல்லிகணேஷிடம் கறார் என காட்சிக்குக் காட்சி ரவுண்டுகட்டி விளையாடியிருப்பார் சிவகுமார் எனும் ஜேகேபி.

நான் பாடும்பாடல், உன்னை நான் சந்தித்தேன், உனக்காகவே வாழ்கிறேன், மனிதனின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம் என விதம்விதமான, ரகம்ரகமான படங்கள். இதையடுத்து இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார். பூவெல்லாம் உன் வாசம் கேரக்டரும் மறுபக்கம் படமும் காதலுக்கு மரியாதையும் சேதுவும் மறக்க முடியாத  நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.

இன்றைக்கு இரண்டு மகன்களும் நடிக்கிறார்கள். அப்பா எட்டடி என்றால், இருவரும் சேர்ந்து எட்டுஎட்டாய் வைத்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அறக்கட்டளை அமைத்து அன்பையும் உதவியையும் காக்கும் கரங்களென வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிவகுமாருக்கு ரசிகர்கள் இருந்தாலும் இன்றைக்கும் சிவாஜியின் கடைக்கோடி ரசிகன் போல் அவர் வசனங்களையும் கலைஞர் வசனங்களையும் அப்படியே ஏற்ற இறக்கத்துடன் பேசுகிறார். ஓவியங்கள் இன்னமும் வரைந்துகொண்டிருக்கிறார். பண்டிகை நாளென்றால், இவரின் கம்பராமாயண சொற்பொழிவு தேனமும்து டிவிக்களில் நிச்சயம். இவரின் ஒழுக்கமும் உடல்பேணுதலும் வியக்கவைக்கும்.

இவரை மார்க்கண்டேயன் என்பார்கள். என்றும் பதினாறு என்று போற்றுகிறார்கள். அவரைப் பார்க்கும்போதெல்லாம் வரும் ஆச்சரியம்…. இத்தனை வயதாகியும் இன்னமும் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்டுக்கு வரும் சிவகுமார் மாதிரியே இருக்காருப்பா என்பதுதான்!

அது ஒழுக்கத்தின் பரிசு. உண்மையின் கெளரவம். உடல் பேணுதலின் விளைவு. இவையெல்லாம் சிவகுமாரிடம் இருக்கிற கொடைகள். இவையெல்லாம் சிவகுமார் நாம் இனிதே வாழ்வதற்கான சொல்லிக்கொடுத்திருக்கும் கொடைகள்!

இன்று சிவகுமாருக்குப் பிறந்தநாள். திரையுலக மார்க்கண்டேயருக்குப் பிறந்தநாள். 77வது பிறந்தநாள் (27.10.18). இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடன் பேரன்புடனும் வாழ, சிவகுமாரை வாழ்த்துவோம்; போற்றுவோம்!

வாழ்க சிவகுமார்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close