[X] Close

வீணான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ‘தூய்மை இந்தியா’ இலச்சினை சிற்பம்: காசியாபாத் இளைஞர்கள் சாதனை


clean-india-system

வீணான பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினை சிற்பம்.

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 09:11 am
  • அ+ அ-

டெல்லியை அடுத்த காசியாபாத் நகராட்சியின் முயற்சியால், வீணான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி ‘தூய்மை இந்தியா’ இலச்சினை (லோகோ) சிற்பத்தை உருவாக்கி 2 இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.

காசியாபாத் நகரை பாலிதீன் இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் முதல் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு சந்தைகளில் இருந்து வீணான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களைப் பறிமுதல் செய்யத் தொடங்கினர். ஜூலை மாதத்தில் 50 ஆயிரம் கிலோ பாலிதீன் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றை எப்படி அழிப்பது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதை அறிந்த சர்ப்ராஸ் அலி மற்றும் சாக் ஷி ஜா ஆகிய 2 இளம் கலைஞர்கள் நகராட்சி கூடுதல் ஆணையர் பிரமோத் குமாரை சந்தித்து, பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் இருந்து சிற்பங்கள் செய்ய முடியும் என்ற தங்கள் கருத்தை தெரிவித்தனர். இதற்கு ஆணையர் ஒப்புக் கொண்டார்.

இதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தை கருவாகக் கொண்டு சிற்பத்தை உருவாக்க திட்டமிட்ட அந்த இளைஞர்கள், நகராட்சி நிர்வாகத்திடமிருந்து 200 கிலோ பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். அதைப் பயன்படுத்தி, தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினை சிற்பத்தை உருவாக்கி உள்ளனர். 380 கிலோ எடை, 6 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட இந்த சிற்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரமோத் குமார் கூறும்போது, “இளைஞர்கள் உருவாக்கிய சிற்பம் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. அவர்களுடைய திறமையை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தி மேலும் இதுபோன்ற பல சிற்பங்களை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் அதை பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close