[X] Close

பரவாக்கோட்டை அரசுப் பள்ளியை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்


old-students-organised

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 10:51 am
  • அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியை ரூ.7.22 லட்சம் நிதியில் சீரமைத்த முன்னாள் மாணவர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 90 ஆண்டுகள் பழமையானதாகும். இப்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள், தற்போது பல்வேறு துறைகளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து, 'நலத்திட்ட நண்பர்கள் குழு' எனும் அமைப்பை உருவாக்கி தாங்கள் பயின்ற பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியில் ரூ.7.22 லட்சம் மதிப்பில் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். இதில், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், மின்விசிறிகள், சத்துணவுக் கூடத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள், ஜெராக்ஸ் இயந்திரம், கணினி, பள்ளி கட்டிடத்துக்கு வண்ணம் பூசுதல், கழிவறைகளை சீரமைத்தல் மற்றும் ஆங்கிலவழிக் கல்வி ஆசிரியைகள் இருவருக்கு மாத ஊதியம் வழங்குதல் என பல்வேறு உதவிகளை செய்தனர். இதன் நிறைவாக பள்ளியின் நுழைவு வாயிலையும் புதிதாகக் கட்டியுள்ளனர். இதற்கான திறப்பு விழா நேற்று அப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நலத்திட்ட நண்பர்கள் குழு டி.கே.பி.லெனின் வரவேற்றார். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரெங்கநாதன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மலராஜ் நுழைவு வாயிலை திறந்து வைத்து பேசியபோது, “பழைய மாணவர்கள் இதுபோன்று கல்வி பயின்ற பள்ளிகளை சீரமைப்பது பாராட்டுக்குரியது. இந்த எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் விஜயா, வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தம்பிராஜ், நலத்திட்ட நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாணிக்க வாசகம், சீராளன், அருள்ராஜ், பள்ளி தலைமையாசிரியர் பிரேமா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் பாலமாணிக்கம் நன்றி கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close