[X] Close

த்ரிஷாவுக்கு... ரசிகனின் மனம் திறந்த மடல்


trisha-rasikan-letter

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 18:36 pm
  • அ+ அ-

அன்புள்ள த்ரிஷா,

உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. இந்தக் கடிதத்தில் உங்களது தீவிர ரசிகனாகிய நான் வைத்திருக்கும் செல்லப் பெயரைக்கூட பயன்படுத்தலாமா என்று தோன்றியது. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நான் எந்தச் செல்லப் பெயரும் வைத்ததில்லை. த்ரிஷா என்ற பெயர் தரும் புத்துணர்ச்சியை வேறெந்த செல்லப் பெயரும் தந்துவிட முடியாது என்று என் ஆழ்மனம் அறிந்திருப்பதுதான் காரணம்.

விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த வாரம் உங்கள் நடிப்பில் வெளியான ‘96’ படம் எல்லோரையும்  பெரிதும் ஈர்த்திருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தைவிட படத்துக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நடிப்பையும் அழகையும் திறமையையும் விமர்சகர்கள் உட்பட எல்லோருமே பாராட்டிவருகிறார்கள். என்னைவிட இளையவர் நீங்கள் நடித்ததால்தான் ‘96’ படம் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கேட்டபோது அவ்வளவு மகிழ்ந்தேன். யாராவது எதற்காகவாவது என்னைப் பாராட்டினால்கூட அவ்வளவு மகிழ்வேனா என்று தெரியவில்லை.

ஆனால் பாவம்…. இவர்களுக்கெல்லாம் உங்கள் அருமையைப் புரிந்துகொள்ள ஒரு ‘96’, ஒரு ’விண்ணைத் தாண்டி வருவாயா’ தேவைப்படுகிறது.

ஆனால் நான் அப்படி இல்லை. உங்களது முதல் படத்தைப் பார்த்ததிலிருந்து இன்றுவரை உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும் திரையரங்கில்தான் பார்ப்பேன். முதலில் நான் எப்படி உங்களுக்கு ரசிகனானேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

ஆட்கொள்ளப்பட்ட தருணம்

அது 2003-ம் ஆண்டு. அப்போது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘தமிழ்’ ஆகிய படங்களைப் பார்த்து சிம்ரன் ரசிகனாக ஆகியிருந்தேன். ஒரு விடுமுறை நாளில் என் ஆசிரியர் வீட்டில் ட்யூஷன் வகுப்பில் ஆசிரியர் வருவதற்கு முன் நானும் என் நெருங்கிய நண்பனும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது சிம்ரனை நான் பாராட்டிக்கொண்டிருக்க, சிம்ரன் பிடிக்காத அவன், அருகில் இருந்த தந்தி பேப்பரில் சினிமா விளம்பரங்களுக்கான இணைப்பிதழை எடுத்துக் காட்டினான். ‘மெளனம் பேசியதே’ படத்தின் விளம்பரம்… அதில் நீங்கள் அடர் பச்சை நிற சுடிதார் அணிந்துகொண்டிருந்தீர்கள். “இவ(ங்க)ள விடவா சிம்ரன் அழகு” என்று கேட்டான். அவன் அந்த விளம்பரத்தைக் காட்டியதும் அப்படிக் கேட்டதும் என்னை சீண்டத்தான். ஆனால் நான் அந்த படத்தில் உங்களைப் பார்த்த தருணத்திலிருந்து உங்களால் ஆட்கொள்ளப்பட்டேன் என்பதை நான் அப்போது உணரவில்லை.

அந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று. தேவிகலா திரையரங்கில் ‘மெளனம் பேசியதே’ பார்க்க டிக்கெட் வாங்கினேன். அந்தப் படம் பார்த்ததிலிருந்து ‘இனி சிம்ரனோடு சேர்ந்து இவருக்கும் நாம் ரசிகன்’ என்று முடிவு செய்துவிட்டேன்.

தொடர்ந்து ‘சாமி’ படத்தின் ட்ரைலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது இமைகொட்டாமல் பார்த்தேன்.  என் வீட்டிலிருந்தவர்கள் என்னைக் கிண்டலடித்தபோதுதான் உங்களது தீவிர ரசிகனாகிவிட்டதையே உணர்ந்தேன். ’சாமி’ படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்கில் டிக்கெட் எடுக்க ஆல்பட் திரையரங்குக்குச் சென்றபோது அப்போது அங்கே நீங்கள் நடித்த ‘மனசெல்லாம்’ ஓடிக் கொண்டிருந்தது. சாமி படத்துக்கு டிக்கெட் எடுத்த கையோடு ‘மனசெல்லாம்’ படத்தையும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அந்தப் படத்தில் நிரம்பி வழிந்த சோகத்தைத் தாண்டி உங்களது அழகால் சொக்கிப் போவதற்கான தருணங்களும் இருந்தன. குறிப்பாக ஃப்ளாஷ்பேக் பகுதியில் ஒரு காட்சியில் வெளிர் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்துகொண்டு வருவீர்கள். முதல்முறையாக உங்களை சேலையில் பார்த்த நொடியில் உலகையே மறப்பதுபோல் படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் நடித்திருப்பார். நான்… நடிக்கவில்லை. அந்தக் காட்சியின் புகைப்படம் ஏதோ பத்திரிகையில் வெளியானபோது அதை வெட்டி எடுத்து ஒரு பெரிய சைஸ் 192 பக்க நோட்டுப் புத்தகத்தில் ஒட்டிவைத்தேன். பிறகு அது உங்களது புகைப்படங்களின் பிரத்யேக ஆல்பமாக எனக்கானதாக மாறியது. கூகுளில் ஒரு நடிகையின் பெயரைத் தட்டினால் அவரது லட்சக்கணக்கான புகைப்படங்கள் கொட்டிவிடும் காலத்தில் ஃபேஸ்புக். வாட்ஸ் அப்பில் தினம் ஒரு ப்ரொஃபைல் பிக் மாற்றும் இளைஞர்களுக்கு இந்த ’ஆல்பம்’களின் அருமை தெரியாது.

கட்சி தாவாத ரசிகன்

‘சாமி’ உங்களது முதல் பிளாக்பஸ்டர் படம். ராசியான நடிகை என்று பெயர்பெற்றீர்கள். அதை அடுத்து 2004 கோடை விடுமுறைக்கு வெளியான ‘கில்லி’ முதலான படங்கள் உங்களை நம்பர் ஒன் கதாநாயகி ஆக்கின. அதேகாலத்தில் வெளியான மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தின் மூலம் நீங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் தமிழ் இளைஞர்களையும் சென்றடைந்தீர்கள். இடையில் தெலுங்கில் வெளியான ‘வர்ஷம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தெலுங்கிலும் அழுத்தமாகக் கால்பதித்தீர்கள். பெரும் ரசிகர் பட்டாளம் உங்களுக்கு உருவானது. .

ஆனால் சில மாதங்களில் அவர்களில் பலரும் ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் அறிமுகமான அசின் பக்கம் திரும்பினார்கள். அப்போது ஒரு பிரபல வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில்கூட அசினுக்கு 66% இளைஞர்களும் உங்களுக்கு 44% இளைஞர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை நான் பல விஷயங்களில் மைனாரிட்டி ஒப்பீனியனையே பிரதிபலித்திருக்கிறேன்.  அன்றிலிருந்து யாரிடமும் உங்களை விட்டுக்கொடுக்காமல் வாதாடி வருகிறேன். .

சென்னையில் வெளியான ‘அத்தடு’, ‘அல்லரி பொல்லடு’, ‘பெளர்ணமி’, ‘ஆடவாரி மாடலு அர்த்தாலே வெருலே’ போன்ற தெலுங்குப் படங்களையும் திரையரங்கில் பாத்தேன். அப்போது நான் மாலை நேரக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் அதே காலக்கட்டத்தில் நீங்கள் வெறும் கதாநாயகனின் காதலியாக சுருங்கிவிட்டீர்கள். வெற்றிப் படங்களில் நடிப்பதே உங்களது தேர்வாக இருந்தது. அரிதாக உங்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்த ‘அபியும் நானும்’ மாதிரியான படங்கள்கூட பெரிய அளவில் கவனம் ஈர்க்காமல் கடந்து சென்றன. எனக்கு நீங்கள் ஒரே ஒரு காட்சியில் வந்தால்கூடப் போதும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இல்லையே. எனவே உங்களது ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது.

’ஜெஸி’ என்னும் மறு பிறப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் 2010-ல் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உங்களை ஜெஸியாக ரசிகர்களுக்கு மறு அறிமுகம் செய்தது. ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் ஜெஸியையும் ஜெஸியாக நடித்த உங்களையும் கொண்டாடித் தீர்த்தது.

இதையும் நீங்கள் முறையாக பயன்படுத்தத் தவறினீர்கள் என்பது எனக்கான ஆகச்சிறந்த வருத்தம். நீங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் 2015-ல் வெளியான ‘என்னை அறிந்தால்’. அதிலும் நீங்கள் ஃப்ளாஷ் பேக்கில் மட்டும்தான் வருவீர்கள் என்பதால் உங்களது திரைவாழ்வில் பெரிய கவனம் செலுத்தவில்லையோ என்று நினைக்கிறேன். இடையில் ‘கொடி’ படத்தில் நீங்கள் முதல்முறையாக முயற்சித்துப் பார்த்த வில்லி கதாபாத்திரமும் கலவையான எதிர்வினையாற்றியது இன்னொரு சோகம் எனக்கு!

ஆனால் ஆணாதிக்கம் நிரம்பிய தமிழ் சினிமாவில் 30 வயதைக் கடந்தும் கதாநாயகியாகவே நீடிக்கும் அரிதான சாதனையை  நீங்கள் மட்டுமே நிகழ்த்தினீர்கள். உங்களை நிராகரிப்பவர்கள்கூட  உங்களுக்கான அந்த இடத்தை மறுக்க முடியாது.

திரை ஆளுமையைத்தாண்டி..

உங்களின் திரை ஆளுமையைத் தாண்டி உங்களிடம் ரசிக்கப் பல விஷயங்களும் விமரிச்க்கச் சில விஷயங்களும் உள்ளன.

தொடக்கத்திலிருந்தே உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவராகவும் துணிச்சலானவராகவும் வெளிப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் நடிக்க வந்த புதிதில் ஒரு பேட்டியில் “உங்களை எந்த ஆணாவது நிஜத்தில் அடித்திருக்கிறாரா” என்ற கேட்கப்பட்டதற்கு “நெவர்” என்று சொன்ன விதத்திலேயே உங்களது சுயமரியாதை உணர்வு வெளிப்பட்டது.

காலில் விழும் கலாச்சாரத்தை நீங்கள் பெரிதும் மறுதலித்திருக்கிறீர்கள். 2007-ல் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த இயக்குநர் ஒருவரது காலில் அனைவரும் விழுந்தார்கள். நீங்கள் அவரைப் பார்த்தவுடன் ஸ்நேகமான புன்னகையோடு ‘ஹலோ’ சொல்லி நிறுத்திக்கொண்டீர்கள். உங்களது சுயமரியாதையும் அவர் மீதான உண்மையான மரியாதையும் வெளிப்பட்டது. அண்மையில் ‘சாமி 2’ படத்தில் உங்களது கதாபாத்திரத்துக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டீர்கள் என அறிந்தேன். உங்களது சுயமரியாதை உணர்வு அப்படியேதான் இருக்கிறது.

அடுத்ததாக குளியல் வீடியோ, சக நடிகர்களுடன் தொடர்பு, போதைப் பழக்கம், நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமண முறிவு ஆகியவற்றின் தொடர்பாக உங்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நீங்கள் தாங்கி நின்ற அளவுக்கு வேறு எவரும் நின்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை. பொது உரையாடலில் அவை உங்களைத் துளியும் பாதிக்கவில்லை என்பதைப் போல் நடந்துகொண்டது மற்ற நடிகைகளுக்கும் திரைப்படத் துறைப் பெண்களுக்கும் பாடம் என்றே சொல்லலாம்.

மூன்றாவதாக இந்த ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பிரத்யேகத் திறமை என்று எதுவும் அறியப்படாமல். நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களையும் மிக அரிதாகவே பெற்று இத்தனை ஆண்டுகள் கதாநாயகியாக நீடிக்கிறீர்கள். 50, 60களைத் தொட்ட கதாநாயகர்களை ஏற்கும் தமிழ் ஆண் மனம் நடிகைகளுக்கு மட்டும் வயதாகவே கூடாது, 30ஐத் தொட்டுவிட்டால் திரையுலகில் இருந்து விலகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அவதூறுகளைப் போலவே இந்தக் கிண்டலையும் ஒதுக்கித் தள்ளி தொடர் வெற்றிகளையும் பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தயவு செய்து தமிழ் பேசுங்கள்

இந்த நேரத்தில் உங்கள் மீதான சில விமர்சனங்களையும் முன்வைக்கத் தோன்றுகிறது. தமிழ்ப் பெண்ணான நீங்கள் படங்களில் சொந்தக் குரலில் பேசத் தயங்குவது பெரும்குறைதான். ’96’ படத்தில்கூட நீங்கள் உங்கள் குரலை அளிக்காதது உங்களது ரசிகர்களையும் வருந்தச் செய்கிறது என்பதை உணர வேண்டும். தவிர பொது உரையாடலிலும் தமிழ் பேசத் தயங்குகிறீர்கள். நீங்கள் பேசும்போது ஐந்தில் மூன்று வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்கள். மொழிதான் மனிதர்களை மனதுக்கு நெருக்கமாக்கும் முக்கியமான பாலம். நீங்கள் சரளமாகத் தமிழ் பேசாதவரை தமிழர்களுக்கு நீங்கள் கொஞ்சம் அந்நியமாகவே இருப்பீர்கள் என்பதை உணர வேண்டும். தமிழ் பேசிப் பழகுங்கள்.

இரண்டாவதாக ‘96’ போன்றவை அரிதான படங்கள் என்று அனைவருக்கும் தெரியும். எல்லா படமும் அப்படி அமைந்துவிடாது. ஆனால் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடிக்கும் ஆர்வத்தில் ‘நாயகி’, ‘மோகினி’ போன்ற படங்களில் நடிக்காமல் இருக்க நீங்கள் உங்களது கதைத் தேர்வில் இன்னும் கவனம் செலுத்துங்கள்.

இதையெல்லாம் விமர்சனமாகப் பார்க்காதீர்கள். எந்தச் சூழலிலும் உங்களை விட்டுக்கொடுக்காத ரசிகனின் வேண்டுகோள் இவை. பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close