[X] Close

எங்க ஊருல யாரும் பசியா இருக்கக் கூடாது- 2 ரூபாய்க்கு இட்லி தரும் ‘அய்யா உணவகம்’


ayya-unavagam

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 16:09 pm
  • அ+ அ-

ஒரு கப் டீ பத்து ரூபாய் விற்கும் இந்தக் காலத்தில், 2 ரூபாய்க்கு இட்லி கிடைக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அப்படி ஒரு இட்லிக் கடையும் இருக்கிறது நம்புங்கள்! ஆனால், இது அம்மா உணவகம் அல்ல... ‘அய்யா உணவகம்’!

அம்பாசமுத்திரம் - பாபநாசம் சாலையில் மூன்றாவது கிலோமீட்டரில் வருகிறது அடையகருங்குளம். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ரெண்டு ரூபாய் இட்லிக் கடை எனக் கேட்டால் பட்டென வழி சொல்கிறார்கள். கடை அவ்வளவு பிரபலம்! நாம் சென்றிருந்த நேரத்தில் கடை வாசலில் சுடச்சுட வடை போட்டுக்கொண்டு இருந்தார் கடையின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன். அவரது மனைவி மாரியம்மாள் பார்சல் கட்ட, பரிமாற என ஓடவும் நடக்கவுமாய் இருந்தார்.

உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காலை டிபன் சாப்பிட்டுச் செல்கிறார்கள். நாம் அங்கிருந்த 40 நிமிடங்களில் 20 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டவர்கள் யாருமே இல்லை. வயிறு முட்டச் சாப்பிட்டாலும் 15 ரூபாய்க்குள் அடங்கிப் போகிறது பசி. ஒரு பெரியவர், சாப்பிட்டுவிட்டு “அஞ்சு இட்லி, ஒரு பருப்புவடை’’ என உரக்கச் சொல்கிறார். “12 ரூபாய்” என மாரியம்மாளிடம் இருந்து பதில்வர, கொடுத்துவிட்டு நகர்கிறார் பெரியவர். ஒரு நடுத்தர ஓட்டலில் ஆறு முதல் பத்து ரூபாய் கொடுத்து நாம் சாப்பிடும் இட்லி என்ன அளவில் இருக்குமோ அதே அளவில் இருக்கிறது. வடை மட்டும் சற்று சிறியது!

எண்ணெய் சட்டியில் போட்டிருந்த வடைகளை எடுத்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார் கோபாலகிருஷ்ணன். “இந்தக் கடை ஆரம்பிச்சு இருபது வருசம் ஆச்சு. ஆரம்பத்துல இட்லி 1 ரூபாய், வடை 1 ரூபாய்ன்னு தான் நடத்துனேன். கடைக்கு ரெகுலராக சாப்பிட வர்றவங்களே, ‘உனக்கும் கொஞ்சமாச்சும் கையில் காசு நிக்க வேணாமாப்பா’ன்னு சொல்லி இட்லிக்கு 2 ரூபாய் வச்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஒருதடவை, நெல்லையில் இருந்து சாப்பிட வந்த ஒரு குடும்பம், இட்லி ஒரு ரூபாய்ன்னதும் அதிர்ச்சியாகிட்டாங்க. அவுங்களும் 2 ரூபாய் வச்சு கொடுத்தாங்க. அதுக்குப் பின்னாடிதான் நானே இட்லியை ரெண்டு ரூபாய் ஆக்கினேன். விலையைக் கூட்டி 6 வருசம் ஆச்சு.

எங்க கடையில எதுக்குமே வேலைக்கு ஆள் வைக்கலை. நானும், என்னோட மனைவியுமே எல்லா வேலையும் செஞ்சுருவோம். அதனால் தான் இது கட்டுப்படியாகுது. காலையில் இட்லி, ஆப்பம், பொங்கல் மூணும் இருக்கும். இட்லியும், ஆப்பமும் ரெண்டு ரூபாய். இதுக்கு தேங்காய், புதினா சட்னிகளும், சாம்பாரும் கொடுப்போம். பொங்கல் மட்டும் பத்து ரூபாய். ராத்திரிக்கு இட்லி மட்டும்தான். விலை அதே இரண்டு ரூபாய்தான்!’’ என்றவரிடம், “இது எப்படிக் கட்டுப்படியாகுது?”எனக் கேட்டேன்.

“எனக்கு ரெண்டு பெண்ணும், ஒரு ஆணுமா மூணு பிள்ளைங்க. வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வித்துத்தான் ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தேன். சொந்தமா வீடு கட்டுனேன். பையனை இன்ஜினீயரிங் படிக்க வச்சேன். அவன் இப்போ சென்னையில் வேலை செய்யுறான். இத்தனையையும் இந்த சின்ன ஹோட்டலை வெச்சுத்தான். சொந்தக் கடையா இருக்கறதால வாடகை, அது இதுன்னு எந்தச் சிக்கலும் இல்லை. இப்போ ரெண்டு ரூபாய்க்கு விக்குறதே எங்க வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்கு. விலை குறைவா வச்சு விக்குறதால கடைக்கு நிறைய பேரு சாப்பிட வருவாங்க. அது திருப்தியா இருக்கு.

நான் அய்யா வழி பக்தன். வசதியுள்ள பலரும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு பணத்தால் தர்மம் செய்வாங்க. நானும், என் மனைவியும் உடல் உழைப்பால இந்த வகையில் தர்மம் செய்கிறோம். குறைவான விலைக்கு குடுக்குறதால எங்களுக்கு தினசரி வேலைக்கான சம்பளம் மாதிரி சின்னதா லாபம் கிடைக்கும். ஆனால் ஒருநாளும் கைபிடிப்பு வந்ததில்லை” என்றார் கோபாலகிருஷ்ணன்.

பார்சல் கட்டிக்கொண்டே நம்மிடம் பேசிய மாரியம்மாள், “ரெண்டு பொண்ணுகளும் கல்யாணம் முடிஞ்சு போயிட்டாங்க. பையனுக்கு சென்னையில் வேலை. எல்லாரும் வீட்டுல இருந்தப்ப குடும்பமா இறங்கி நின்னு, ஆளுக்கொரு வேலையா செய்வோம். அப்ப 1 ரூபாய்க்கு பூரியும் போடுவோம். இப்ப நாங்க இரண்டு பேருதான் இருக்குறதால வேலையைக் குறைக்கணும்ன்னு இட்லியை பிரதானமாக்கிருக்கோம். தினமும் 4 கிலோ மாவுல இட்லி, 3 கிலோ மாவுல ஆப்பம், 4 கிலோ அரிசியில் பொங்கலும் தயார் செய்வோம். எங்க கடையில் பார்சல்தான் மெயின். பார்சல் கட்டிக்கிட்டே நிக்குற மாதிரி பிசியாகத்தான் இருப்போம். கையில காசில்லையேன்னு எங்க ஊருக்குள்ள யாரும் பசியா இருக்கக் கூடாது. அதுக்காகவும் இதை சேவையா செய்கிறோம்” என்றார்.

உள்ளூர் மக்களுக்கு இது அய்யா உணவகம். அம்பை_பாபநாசம் வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கோ இதுதான் அம்மா உணவகம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close