[X] Close

ஆச்சி... தனியாட்சி!


manorama

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Oct, 2018 12:24 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

-மனோரமா நினைவு தினம்  (10.10.18) இன்று.

  ஒரு பெண், அம்மாவாகவும் இருப்பாள். அத்தை, சித்தி, பெரியம்மா, மகள் என எந்த வடிவமும் கொண்டிருப்பாள். தமிழ்த் திரையுலகில், துறுதுறுவென இளம் வயதில் வந்த போது, எல்லா வடிவத்திலும் விஸ்வரூபம் எடுப்பாரென்றோ, அவரின் ஆட்சிக்காலம் பல தலைமுறைகள் கடந்தும் நீட்டிக்கும் என்றோ எவரும் அறிந்திருக்கவில்லை. அப்படி காலங்கள் கடந்தும் ஆட்சி செய்தவர் ஆச்சி என அன்புடன் அழைக்கப்படும் மனோரமா!

சோழ தேசம் மன்னார்குடியில் பிறந்த கோபிசாந்தாவுக்கு, அவ்வையார் சொன்ன கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்பது அப்படிப் பொருந்திற்று. ஒருகையில் நம்பிக்கையும் இன்னொரு கையில் கோபிசாந்தாவையும் அழைத்துக்கொண்டு, செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்கு வந்தார். அந்தப் பள்ளத்தூர்தான் பின்னால், தன்னை மேட்டுக்கு இட்டுச் செல்லும் என்பது அப்போது யாருக்குத்தான் தெரியும்?

தெருவோரத்தில், பலகாரக்கடை போட்டு வியாபாரம். அங்கே இருந்த செட்டிமார்களின் வீட்டில் சின்னச்சின்னவேலை. ஆனாலும் கைக்கும்வாய்க்கும் போதவில்லை. படிப்புக்கு சுத்தமாக வழியே இல்லை. கோயிலும் கூத்தும்தான் பொழுதுபோக்கு. பார்த்துப்பார்த்து அதையெல்லாம் பாடிக்கொண்டிருந்தார் கோபிசாந்தா.  மேடையில் செய்ததைக் கண்டு, அப்படியே வீதியில் நடித்தபடி இருந்தார். ‘அட... இந்தப் பொண்ணு பாட்டும் நடிப்பும் நல்லா வருதே. குரல் நல்லா இருக்குதே...  பலகாரச் சுவை போலவே இதுலயும் ஒரு சுவை இருக்கு’ என்று கேட்டவர்களும் பார்த்தவர்களும் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு, அக்கம்பக்க ஊர்களின் நாடகங்களின் மேடையில் இடமும் கதையில் ஓரிடமும் கிடைக்கக் காரணமாக இருந்தது.

சின்னப்பெண்ணுக்கு உண்டான சுட்டித்தனமும் குரல்வளமும், அந்தக் கண்களில் தெரியும் தீட்சண்யமும் உதட்டோரத்து மச்சமும் எப்போதும் தொக்கி நிற்கும் புன்னகையுமாக இருந்தவரை, எல்லோருக்கும் பிடித்துப் போனது.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். இவரின் திறமை அறிந்து நாடகங்களில் வாய்ப்பு வழங்க, கவியரசு கண்ணதாசன், திரையில் அறிமுகப்படுத்தி, நகைச்சுவை நாயகி எனும் அடையாளத்துடன் வந்தார், கோபிசாந்தா என்கிற மனோரமா. பிறகு அந்த நகைச்சுவை பட்டத்தையெல்லாம் கடந்து நின்றதுதான் மனோரமாவின் ஆகப்பெரும் சாதனை.

சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக முன்னுக்கு வந்தார். காமெடி நடிகையாகத்தான் பார்க்கப்பட்டார். ஆனாலும் டூயட் பாட்டும் வெரைட்டி பாட்டும் பாடுகிற நடிகை என்பது தனித்துவம். ‘முத்துக்குளிக்க வாரீயளா’ என்று தூத்துக்குடி பாஷையில் நாகேஷுடனும் ‘ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாபேட்டை கொக்கு’ என்று மெட்ராஸ் பாஷையில் சோவுடனும் ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்று ஒரு மாமியைப் போல் வேஷம் கட்டிக்கொண்டும் ஆடியதும் அவரே சொந்தக் குரலில் பாடியதும் அவரின் பிந்நாளைய அசுர வளர்ச்சிக்கான, அடித்தளங்கள்.

காமெடி பண்ணிக்கொண்டிருக்கும் போதே வெரைட்டி காட்டினார் மனோரமா. நாகேஷ், சோ, சுருளிராஜன், தேங்காய்சீனிவாசன் என ரவுண்டு வந்தார். கமலுடன் கூட்டு சேர்ந்து அதகளம் பண்ணினார். ரஜினியுடன் சேர்ந்து நடித்து, ஸ்டைல் காட்டினார். பாண்டியராஜனுடன் பாட்டியாய் நடித்து, அட்வைஸ் மழையும் சிரிப்பு மழையும் பொழிந்தார். அட... கம்முன்னு கம்மு. கம்மு நாட்டி கோ..’ என்று கண்ணம்மாவாக, சம்சாரம் அது மின்சாரம் படத்தில், 440 வாட் பாய்ச்சலில் காமெடி ரவுசு பண்ணியதெல்லாம், இன்னும் ஏழு தலைமுறைக்கு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்.

சின்னக்கவுண்டரில் தெத்துப்பல் கவுண்டரம்மா, இந்தியனில் செருப்பு தைப்பவரின் மனைவி, வெற்றிக்கொடி கட்டு படத்தில் முரளியின் அம்மா, சின்னதம்பி பிரபுவின் அம்மா, அபூர்வசகோதரர்கள் கமலின் அம்மா... என நடித்து நடித்து, வெரைட்டி காட்டிக்கொண்டே இருந்தவர், எப்போதும் திரையுலகில் ஆச்சியானார். அவரின் ஆட்சி, தனிஆவர்த்தனம்.

இட்லியாகவும் தோசையாகவும் ஊத்தப்பமாகவும் இட்லி உப்புமாவாகவும் மாறிவிடுகிற ரசவாதம் ஆச்சியின் தனியாட்சி. அந்த இடத்தை இட்டு நிரப்ப, இப்போது மட்டும் அல்ல, எப்போதும் எவருமில்லை.

அந்த தில்லானா மோகனாம்பாளின் ஜில்ஜில் ரமாமணி கேரக்டரைச் செய்ய, திரும்பவும் மனோரமாவே வந்தால்தான் உண்டு.

இன்று ஆச்சி மனோரமாவின் நினைவுநாள் (10.10.18). அவரைப் போற்றுவோம். ஆச்சியை மனதார நினைப்போம்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close