[X] Close

விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


article-about-villupuram-enters-25-years

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:39 am
  • அ+ அ-

வெள்ளி விழா ஆண்டில் பெற்றதும்... பெறத் தவறியதும்...

1993 ஆம் ஆண்டு உருவான விழுப்புரம் மாவட்டம், 25ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

வெள்ளிவிழா காணும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன..? இன்னும் என்னென்ன செயல்படுத்தப்படவேண்டும் என்பதை மாவட்ட நலனில் அக்கறை உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

"என்ன நோக்கத்திற்காக விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறி விட்டதா என்றால் இல்லை என்பது தான் பதில்'' என்கிறார் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

"எழுத்தறிவு விகிதத்தில் விழுப்புரம் 29வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 80.09%. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 71.88% மட்டுமே. எழுத்தறிவு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் (91.75%) விழுப்புரம் மாவட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் கிட்டத்தட்ட 20%.

பத்தாம் வகுப்பு, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை கடைசி இடத்தைப் பிடித்திருப்பது விழுப்புரம் தான். இந்த அளவீட்டில் முப்பதாவது இடத்திற்கு மேல் விழுப்புரம் மாவட்டம் முன்னேறியிருந்தால் அது உலக அதிசயம் ஆகும்.

இத்தனைக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் கல்வித்துறை அமைச்சர்களாக இருந்தார்கள்.

இதற்கெல்லாம் காரணம் கல்வித்துறையில் விழுப்புரம் மாவட்டத்தை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் கல்வி ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் பணியாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், உள்ளூர்வாசிகளுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளித்தல் ஆகியவை தான். ஆனால், இதை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை.

அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற் சாலைகள் ஏராளமாக உள்ளன.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும்படி தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிக பரப்பிலான விளை நிலங்கள் வீட்டு மனைகளாக் கப்பட்டிருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம் சாதனை படைத்திருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் மது விற்பனை தான்.

டாஸ்மாக் மது விற்பனையில் தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.2200 கோடி முதல் ரூ.2500 கோடி வரை மது விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் உண்மையாகவே வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அது விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் பாசனத் திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும்; சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டம் தொடங்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டில் இந்த சீர்திருத்தங்கள் தொடங்கப்பட வேண்டும். இதுவே என் விருப்பம்'' என்கிறார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

''விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பல ரயில்கள் இயக்கப்பட்டன. திண்டிவனம் மேம்பாலம் அமைக்கப்பட்டதும், தற்போது பணிகள் நடைபெற்று வரும் காட்பாடி ரயில்வே மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்ததும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். மாவட்டத்தில் இருந்த சாரம் நூற்பாலை, அரசு நிதி உதவியுடன் விக்கிரவாண்டி அருகே இயங்கிய காட்டன் மில் போன்றவை மூடப்பட்டு விட்டன.

தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டபோதுதான் வீடூர் அணை, கோமுகி அணை எல்லாம் கட்டப்பட்டது.

விழுப்புரம் நகராட்சியை உருவாக்கியது பெருந் தலைவர் காமராஜர். ஒரு காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும், நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தங்கிய நகராட்சி சுற்றுலா மாளிகை இன்று கழிவுகளை அகற்ற பயன்படும் பெனாயில் போன்ற தளவாடப்பொருட்கள் வைத்திருக்கும் கிடங்காக உள்ளது.

கடலூரில் உள்ளது போல ஆடிட்டோரியம் ஆரம்பிக்கப்படும் என்றார்கள். ஆனால் இன்னமும் ஆடிட்டோரியம் அமைக்கப்படவில்லை. அரசு பெரிய விழாக்களை நடத்த, தனியார் கல்லூரிகளை நாடும் நிலை உள்ளது'' என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான முன்னாள் மாவட்டத் தலைவர் குலாம் மொய்தீன்.

மேலும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட நலனில் அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்களின் கருத்துகள் அடுத்தடுத்த நாட்களில்...

வளர்ச்சியும் பின்னடைவும்

"விழுப்புரம் மாவட்டம் உருவான பின்பு வளர்ச்சியும் உள்ளது பின்னடைவும் உள்ளது. இம்மாவட்ட மக்கள் பொருளாதார அகதிகளாக வெளி மாநிலங்களில் வாழ்கிறார்கள். 25 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள், இங்கிருப்பவர்களை குடி மக்களாக பார்க்காமல், வாக்காளர்களாகவே பார்த்து உள்ளனர். நீர் நிலைகளை அழித்து விட்டு வெளி மாநிலங்களில் தண்ணீருக்கு கையேந்துகிறோம்'' என்கிறார் ஏரி, குளம் நீர்வளப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்வேங்கை.

அரசு அருங்காட்சியகம் வேண்டும்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள், 3 ஆயிரம் ஆண்டுகளையுடைய தொல் பழங்கால பாறை ஓவியங்கள், சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ஊர்கள், பல்லவர்களின் முதற் குடைவரை, ஓவியம், சோழர் காலக் கலைக்கோயில்கள், சமணர் படுகைகள், தொல் தமிழ் எழுத்துகள், கோட்டைகள் என வரலாற்றுச் சின்னங்கள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நிறைந்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தடயங்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கும், இளைய தலைமுறைக்கு காட்சிப்படுத்தவும், அரசு சார்பில் அருங்காட்சியகம் விழுப்புரத்தில் இல்லை. இது, வரலாற்றுத் தேவையாகும். இதனை தொடர்ந்து வலியிறுத்தி வருகிறோம். இதன் அடுத்த கட்டமாக இதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியிருக்கிறோம்'' என்கிறார் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்.

மாவட்டத்தில் தொழிற்பூங்கா

"திண்டிவனம் அருகே பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ 52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 13ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

ஏற்கெனவே கடந்த 2010ம் ஆண்டு வெண்மணி யாத்துார் கிராமத்தில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் சிட்கோ தொழிற்பேட்டை துவக்கப்பட்டது. இந்த தொழிற்பேட்டையில் எதிர்பார்த்த அளவிற்கு தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. ஏதோ பெயருக்கு சில தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன.

உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நிறுவனம் உள்ளிட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் 40க்கும் மேற்பட்டவை இயங்கி வருகிறது.ஆனாலும் வேலை தேடி பெருமளவு இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலை இன்றும் தொடர்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close