[X] Close

அதான் நாகேஷ்!


nagesh-birthday

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Sep, 2018 12:35 pm
  • அ+ அ-

ஒரேயொரு நிமிடத்தில், ஒற்றை வார்த்தையில், ஒரேயொரு பார்வையில், அவ்வளவு ஏன்... பார்க்காமலேயே கூட ஒருவரை அழவைத்துவிடமுடியும். ஆனால் சிரிக்கவைப்பது லேசுப்பட்டதல்ல. மனசை லேசாக்கிவிடுகிற மாமருந்தான சிரிப்பை, நகைச்சுவையை நமக்குக் கடத்துவது மிகப்பெரிய கலை. அப்படியொரு கலையில், வித்தகர் நாகேஷ்.

அவரின் இயற்பெயருக்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. ஆமாம் ஒல்லி உடம்பு நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ்.

நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த நாகேஷ், தாமரைக்குளம் படத்தில் அறிமுகமானார். அன்றைக்கு இவர் அறிமுகமான போது இருந்த இயக்குநர்களுக்கும் அதையடுத்து வந்த இயக்குநர்களுக்கும் நாகேஷ், ரொம்பவே பயன்பட்டார்.

ஒருபக்கம் ஸ்ரீதரின் படங்களில் நாகேஷ் இல்லாமல் இருக்கவே மாட்டார். அதேபோல், எம்ஜிஆர் படங்களின் ரிலாக்ஸ் இடத்தையும் சிவாஜி படங்களின் கனத்த கதையில் இருந்து சிரித்து மகிழவுமான விஷயங்களை நாகேஷைக் கொண்டே செய்தார்கள்.

இந்தப் பக்கம் எம்ஜிஆர், அந்தப் பக்கம் சிவாஜி மட்டுமின்றி, ஜெமினியுடன் வலம் வருவார். ஜெய்சங்கருக்கு ஏற்ற ஜோடியாக இருந்தார். இயக்குநர்களுக்கு இணக்கமான நடிகராக வலம் வந்தார்.

ஏபி.நாகராஜன் என்ன படமெடுத்தாலும் அதில் நாகேஷ் தவறாமல் இடம்பெறுவார் என்பது மட்டும் அல்ல. மிக முக்கியமான கதாபாத்திரம் தாங்கி வந்து, தூள்கிளப்பி அசத்திவிடுவார். ஏபி.நாகராஜனின் திருவிளையாடல் தருமியும் தில்லானா மோகனாம்பாள் வைத்தியும் நம்முள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள் இன்னமும்.

அதேபோல, இயக்குநர் சிகரம் பாலசந்தர், தெய்வத்தாய் படத்துக்கும் சர்வர் சுந்தரம் படத்துக்கும் கதைவசனம் எழுதினார். முதன்முதலாகப் படம் இயக்கினார். நீர்க்குமிழி. அதில் நாகேஷ் நடித்திருந்தார். சொல்லப்போனால், முதல் படத்திலேயே நாகேஷைத்தான் நாயகனாக்கியிருந்தார்.

அதன் பிறகு வந்த பல படங்கள். பாலசந்தர், நாகேஷின் நடிப்புத்திறமை மொத்தத்தையும் கொண்டு வந்து நமக்குச் சேர்த்தார். ’நாகேஷ், எனக்குள்ளேயே இருக்கிறான். ஒவ்வொரு முறை படம் பண்ணும்போதும் நாகேஷ் அவனுக்கான கேரக்டரை அவனே எடுத்துக்கொள்கிறான்’ என்று பாலசந்தர் சொன்னது, அவருக்கும் நாகேஷுக்குமான பந்தத்தைக் காட்டுகிறது.

பாலசந்தரின் எதிர்நீச்சல் மாடிப்படி மாதுவை யாரால்தான் மறக்கமுடியும். அவரின் மேஜர் சந்திரகாந்த், பாமாவிஜயம், அனுபவி ராஜா அனுபவி, நவக்கிரகம், சர்வர்சுந்தரம் என பல படங்களில் நாகேஷின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பரிணாமத்தையும் பார்க்கமுடியும். பிரமிக்கமுடியும்.

ஸ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்தில் அப்படி பயன்படுத்தியிருப்பார். ஊட்டி வரை உறவு படத்தில் அவரின் காமெடி ரகளை பண்ணும். அங்கே பாலையாவுக்கு கதை சொல்லும் சீன் ஏக்ளாஸ். இங்கே, விளம்பரப் பேப்பரை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள், வயிற்றைப் பதம் பார்க்கும்.

சிவாஜிகணேசனுடன் கலாட்டா கல்யாணம் படத்திலும் சுமதி என் சுந்தரி படத்திலும் வார்த்தைக்கு வார்த்தை காமெடி அதகளம் பண்ணியிருப்பார்.

நாகேஷ் காமெடியில் உச்சம் தொட்டவர். காமெடி மட்டுமா? அவரின் நடனம்... அவருக்கேயான தனி ஸ்டைல். அந்த நடனத்தை ஆட, இதுவரை ஒருவர் வரவில்லை. காமெடியும் கூடத்தான்!

அப்பேர்ப்பட்ட நாகேஷை, அபூர்வசகோதரர்கள் படத்தில், வில்லனாக, மெயின் வில்லனாக காட்டியிருப்பார் கமல். மகளிர்மட்டும் படத்தில் பிணமாகவே நடித்து மிரட்டியெடுத்திருப்பார் நாகேஷ். நம்மவர் படத்தில் பேராசிரியராக அழவைக்கும் நாகேஷ், அவ்வைசண்முகியில் மேக்கப்மேனாக வந்து, மேக்கப் கிழிய நம்மை சிரிக்கவைத்திருப்பார்.

நாகேஷின் முகபாவனைகள், உடல்மொழிகள், அவரின் டயலாக் டெலிவரி என சகலமும் ஒன்றுசேர, தனி ராஜபாட்டை நடத்தியிருப்பதில் அவருக்கு நிகர் நாகேஷ்தான்.

நாகேஷுக்கு முன்பு எத்தனையோ காமெடி நடிகர்கள் உண்டு. அவருக்குப் பிறகு இதுவரை எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். இன்னும் வருவார்கள். ஆனால், நாகேஷ் அளவுக்கு நம் மனதில் இடம்பிடித்த கலைஞன் எவருமில்லை. அந்த இடம் நாகேஷுக்கு மட்டுமேயானது!

ஒவ்வொரு நடிகருக்கும் அடைமொழி உண்டு. பட்டம் போல் ஒருபெயர் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால் நாகேஷின் தனி ஸ்பெஷலே... நாகேஷ் என்பது மட்டும்தான்!

அந்த மகாகலைஞன் நாகேஷின் பிறந்தநாள் இன்று (27.9.18). அவரைப் போற்றுவோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close