[X] Close

ஊர் சுற்றலாம் வாங்க!- இன்று உலக சுற்றுலா தினம்


world-tourism-day

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Sep, 2018 10:32 am
  • அ+ அ-

ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான்.

ஆதலால்.. பயணம் என்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்கிறது. அதன் பரினாம வளர்ச்சிதான் சுற்றுலா. இருக்குமிடத்தைவிட்டு ஓய்வுக்காகவோ இல்லை ஆன்மீகத் தேடலுக்காகவோ இல்லை ஆராய்ச்சிக்காகவோ நாம் வேறிடத்துக்கு செல்வதுதான் அகராதி சொல்லும் சுற்றுலாவுக்கான அர்த்தம்.

21-ம் நூற்றாண்டில் பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு இடையே யாருக்குத்தான் குறைந்தது 4 நாட்களாவது ஓய்வு எடுக்க சுற்றுலா செல்ல விருப்பம் இருக்காது.

தனி மனிதனின் வருமானம் பெருக பெருக இப்போதெல்லாம் கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் அண்டை நாடான இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமாவது செல்வது இயல்பாகிவிட்டது. ஐரோப்பியர்கள் சுற்றுலா செல்வதில் கை தேர்ந்தவர்கள். தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வெளிநாட்டு சுற்றுலாக்காகவே என சேர்த்து வைக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. கண்டம் விட்டு கண்டம் சுற்றிப் பார்ப்பது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது வேறு ஒரு புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு. ஒரே உலகம் ஆனால், எத்தனை பாஷை எத்தனை உணவு எத்தனை எத்தனை பண்பாடுகள்.

அண்மையில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரம். அதில் முதல் கேள்வியே Why do you love the world? உனக்கு ஏன் உலகத்தைப் பிடிக்கும்? அதற்கு பயணிகளாக வரும் பலரும் கூறும் பதிலகள் இந்தக் கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானது.

பதில் 1: அது மிகவும் தத்துவார்த்தமான கேள்வி

பதில் 2: அதை எப்படி விவரிக்க முடியும்

பதில் 3: உலகம் மிக அழகானது

பதில் 4: ஏனென்றால் அதில் அத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். சேக்ஸ்பியரின் வார்த்தைகளைப் போன்றது..

பதில் 5: உலகை நீங்கள் சுற்றிப் பார்க்கும்போதுதான் உங்களது மனது திறக்கும். பரந்துபட்ட பார்வை கிடைக்கும்.

பதில் 6: உலகை சுற்றிப் பார்த்த பின்புதான் எனக்கு ஒரு புதிய நம்பிக்கை வந்திருக்கிறது. நான் எங்கிருந்தாலும் என்னை நானாகவே அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பதில் 7: இந்த உலகம் அற்புதமானது. நாம் அனைவரும் நம் தலைக்கு மீதான வானத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதில் 8: இந்த உலகம் மிகவும் பெரியது.

பதில் 9: இந்த உலகம் சிறியது

பதில் 10: இந்த உலகம் ஆச்சர்யங்களால் நிரம்பியது.

பதில் 11: உலகை சுற்றிப் பார்த்தால்தான் இந்த உலகம் உருண்டை என்பதே எனக்குத் தெரிகிறது.

பதில் 12:ஒவ்வொரு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு விதமான மக்கள் என்னை வசீகரிக்கின்றனர்

பதில் 13:மொத்த உலகமும் ஒரே குடும்பம்

பதில் 14: அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

பதில் 15: இந்த உலகில் அவ்வளவு அழகு இருக்கிறது. ஒரே ஒரு வாழ்க்கை அத்தனையையும் பார்க்க போதுமானதல்ல.

பதில் 16: எந்த மனிதனும் தனியாக இல்லை. உலகில் அத்தனை ஆயிரம் கலாச்சாரங்கள் இருக்கின்றன. அதில் நமது பங்கும் இருக்கிறது என்ற உணர்வைத் தருகிறது.

பதில் 17: நீங்கள் தனித்துவமானவர். உங்களைப் போல் யாருமில்லை. இதை நீங்கள் இந்த உலகைச் சுற்றிப் பார்க்கும்போது உலகு உங்களுக்கு உணர்த்தும்.

இந்த பதில்கள் ஓவ்வொன்றும் என்னைப் பொருத்தவரை ஒரு தத்துவம். மனிதன் ஏன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இதைவிட அழகாக தெளிவுரை கொடுக்க இயலாது.

சுற்றுலா வெறும் புத்துணர்ச்சிக்காக மட்டுமல்ல புதிய படிப்பினைகளுக்கானது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் உலகை விட்டு விண்வெளியை சுற்றிப்பார்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

அதனால்தானோ என்னவோ இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்துக்கான கருப்பொருள் "Tourism and the Digital Transformation" சுற்றுலாவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

உலா சுற்றுலா நாளின் வரலாறு:

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவோடு செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. 

சுற்றுலா என்பது பொருளாதாரம்:

சுற்றுலாவை மேம்படுத்த எல்லா நாடுகளும் தனித் துறையை வைத்திருக்கின்றன. ஏனெனில் சுற்றுலா என்பது பொருளாதாரத்தை வளர்க்கக் கூடியது. ஆசிய நாடுகளான இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. 

ஊர் சுற்றலாம்..
சுற்றுலா செல்வது அவசியம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் பள்ளிகளில் சிறு வயதில் ஆண்டு தேர்வு விடுமுறை விடும்போதெல்லாம் ஆசிரியர்கள், "விடுமுறை முடிந்து வரும்போது நீங்கள் சுற்றுலா சென்ற இடத்தைப் பற்றி கட்டுரை எழுதி வாருங்கள்" என்று சொல்வார்கள்.
இப்போதெல்லாம் பயணங்கள் கேட்ஜட்ஸ்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் ஸ்நேகம் என்றொரு வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம் பஸ், ரயில் என எதில் ஏறினாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. பேசுவத்திலை. செல்போன், லேப்டாப், டேப் என ஏதாவது உபகரணத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அருகில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. இவ்வளவு ஏன் இறங்குமிடத்தைக் கூட தவறு விடச் செய்துவிடுகிறது இந்த உபகரணங்களின் ஆதிக்கம்.

சுற்றுலா என்பது நீங்கள் வீட்டை விட்டு அந்தப் பயணத்துக்காக வாகனத்தில் ஏறுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வழி நெடுகிலும் காணும் மக்கள், பார்க்கும் விவசாய நிலங்கள், கேட்கும் வார்த்தைகள் பேச்சுக்கள் எல்லாமே சுற்றுலாவின் ஓர் அங்கமே.சுற்றுலா செல்லும்போது கண்களையும், காதுகளையும், மனதையும் திறந்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

சுற்றுலா செல்ல மிக முக்கியமானது பணம். எனவே, வாழ்க்கையில் தேவைகள் குறையப் போவதில்லை ஆனால் அதற்கும் இடையில் சேமிக்கும் பழக்கம் அவசியம். சேமிக்கும் பணத்தில் சிறிய தொகையை சுற்றுலாவுக்காக பயன்படுத்துவது அதைவிட அவசியம்.

குயின் போல சுற்றலாம்..

இந்தியில் குயின் என்றொரு படம் வந்தது. கங்கனா ரனாவத் நடித்திருப்பார். நின்று போன திருமணத்தின் சோகத்தை மறக்க தனியாக ஹனிமூன் செல்வார். உலகம் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும். உள்ளத்துக்கு ஆறுதல் தரும். புதிய தேடல்கள் புதிய வழிகளைக் காட்டும். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. உலகம் பெண்களுக்கானதும்தான். பெண்களும் சுற்றுலா செல்கின்றனர். தனியாக செல்கின்றனர். 

2007-ல் இலங்கையில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்  "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன". இப்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. பெண்களின் சுற்றுலாக்களும் பெருகிவிட்டன. சுற்றுலாவில் பாலின பேதம் வேண்டாம்.

ஒரு சினிமாப் பாடலில் வருவதுபோல் 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்'. உலகைச் சுற்றுவோம். முடியாவிட்டால் நம்மூருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்காவது சுற்றுலா சென்று உடலுக்கு உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியைக் கொடுப்போம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close