[X] Close

கலைஞர் 95: வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல, வார்த்தைகளுக்குள் அடங்காத வாழ்க்கை அது!


kalaingar-95

  • பால்நிலவன்
  • Posted: 07 Aug, 2018 20:40 pm
  • அ+ அ-

இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில் இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா.. நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா? என்று அண்ணாவின் மரணத்தை ஆற்றொணாமல் கவிதை பாடிய கலைஞரையே இன்று மரணம் ஆட்கொண்டுவிட்டது.

பலமுறை கதவைத் தட்டிய மரணம் இன்று மாலை எப்படியோ உள்ளேநுழைந்துவிட்டது கலைஞர் வாழ்க்கைக்குள்...... கலைஞர் கருணாநிதியின் சுயசரிதை நூலான 'நெஞ்சுக்கு நீதி'யின் முதல் பாகத்தில் முதல் வரி இப்படி தொடங்குகிறது, '1924ல் அடால்ப் இட்லர் சிறையில் அடைக்கப்பட்டு தனது மெயின் காம்ஃப் நூலை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் நான் பிறக்கிறேன்'.

தான் பிறந்ததையே ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புபடுத்துகிறார். தான் பிறந்தததைப் பற்றி குறிப்பிட்டது வேண்டுமானால் மிகை நவிற்சியாக இருக்கலாம். அடுத்தடுத்து அவர் வாழ்வில் நிகழ்ந்த பலவும், நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களோடு அவர் பிணைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. ஒரு நூற்றாண்டின் முக்கிய தலைவர்களை யெல்லாம் சந்தித்து கடந்துவந்துகொண்டிருக்கும் வாழ்க்கை அவருடையது.

திராவிட இயக்க வரலாற்றுப் பாதையின் ஒரு மைல்கல்லில், மீசை முளைக்காத வயதில் 'முரசொலி' இதழை தொடங்கிய கருணாநிதி எனும் இளைஞனை அரவணைத்துச் செல்கிறது திராவிட நாடு இதழும் விடுதலை இதழும். சமூக விடுதலைக்காக போராடிய பெரியாரும், வெறும் இயக்கமாக மட்டுமின்றி மக்களாட்சிக்கான அதிகார அங்கீகாரமும் வேண்டுமென முழக்கமிட்ட அண்ணாவும் கருணாநிதிக்கு போட்டுக்கொடுத்த பாதை ரத்தினக் கம்பளத்தால் ஆனதல்ல....

வசனகர்த்தாவாக தமிழ்த் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பவர்கள் கூட நடிகர்கள் என்ற பட்டியலில் இடம்பெற, வசனம் கலைஞர் கருணாநிதி என்று தனி கார்டில் திரையில் மிளிர்ந்த பெருமைக்குச் சொந்தக்காரராக கலைஞர் உருவானார். கோபமென்றால் பொங்குகின்ற எரிமலையாக, தாபமென்றால் தண்ணொளியின் நிலவாக, தேனூறும் இன்பத் தமிழில் திரையிலும் எழுத்திலும் உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியத் தமிழைத் தீட்டி மக்களை மகிழ்வித்தவர் கருணாநிதி. பூம்புகார் படத்தில் அவர் எழுதிய ''மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்குகள் ஊர்சுற்றும்'' என்ற வாசகங்கள் ஏதோ மகாவாக்கியம் போல அமைந்துவிட்டது. இன்றுவரை பலரும் அதை பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்தாள்வதை பார்க்கமுடிகிறது.

கவிஞராக கலைஞரின் கவிதை என்பது நீரோடையாக பாய்ந்து செல்வது. அண்ணா மறைவின்போது கலைஞர் உருக்கமாக வாசித்த கவிதைகளில் மூன்றெழுத்து கவிதை ஒலிபெருக்கிகளில் தமிழ் மண்ணின் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிடமுடியாது. அன்புக்கு மூன்றெழுத்து-அந்த அன்புக்கு துனைநிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து அறிவார்ந்தோர் இடையில்எழும் காதலுக்கு மூன்றெழுத்து காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து வீரம் விளைக்கின்றகளம் மூன்றெழுத்து களம் சென்று காண்கின்ற வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு ஊக்குவின்ற அமைதிமிகு அண்ணா மூன்றெழுத்து! வாசகனாக எண்பதுகள் என்று நினைவு...

விகடனில் ஒரு இளங்கவிஞர் எழுதிய கவிதைக்கு ஒரு வாசகனாகவும் கருத்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதினார் கலைஞர். வார இதழில் இளம் பெண்கவிஞர் இப்படி எழுதுகிறார்.... ''தமிழ்த்தாயே உனக்குக் கூட கருணை இல்லையா விதவை என்ற சொல்லின் நெற்றியில்கூட பொட்டுவைக்க இடம் தரவில்லையே நீ'' (அச்சுஅசலா கவிதையல்ல...

நினைவிலிருந்து சொல்கிறேன்) அடுத்த வாரமே கவிதாயினியின் கேள்விக்கணை கவிதையின் புரிதல்குறைபாட்டை தகர்த்தெறிய கலைஞரது விளக்கம் பதில் கணையாக பாய்ந்து வந்து தாக்குகிறது. பண்பும் பட்டறிவும்கூடிய பதில் கணை இதோ: ''கடந்தவாரம் விகடனில் நிர்மலா சுரேஷ் என்பவரின் ஒரு கவிதை வாசித்தேன். தமிழ்த்தாயே உனக்குக் கூட கருணை இல்லையா என்று கேட்டுத் தொடங்கும் அந்த புதுக்கவிதையில் விதவை என்ற சொல்லின் நெற்றியில் கூட பொட்டுவைக்க இடம்தரவில்லையேயே என்று கேட்டுள்ளார். கவிதையில் எழு சமூக சிந்தனையை நான் மதிக்கிறேன்.

அதே வேளை விதவை என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல. அது வட சொல். கணவனை இழந்த பெண்ணுக்கு தமிழில் கைம்பெண் என்று பெயர். சமூகத்திற்கு வேண்டுமானாலும் கணவனை இழந்த பெண்ணை பொட்டு வைக்க அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனால் தமிழ் அன்னை ஒன்றல்ல இரண்டு பொட்டு வைத்து அழகுபார்க்கிறாள்... அப்படியென்றால் தமிழ்அன்னை எவ்வளவு கருணையுள்ளவள் பாருங்கள்'' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு அப்போதே அட ஒரு முகம்தெரியாத கவிஞரையும் மதித்து அந்த கவிதையின் பொருளை எடுத்து ஆராய்ந்து பதில் சொல்கிறாரே என்று தோன்றியது. அதனாலோ என்னவோ இன்றுவரையில் அந்தக் கவிதையும் கலைஞர் விளக்கமும் மறக்கமுடியவில்லை. முதலமைச்சராக பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் சிந்தனைகளை வெறும் வார்த்தை ஜாலத்திற்காக அல்லாமல் வாய்ப்பு கிடைத்தால் செயலிலும் சாதித்துக் காட்டியவர் கலைஞர்.

வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல, வார்த்தைகளுக்குள் அடங்கார வாழ்க்கை அவருடையது. கருணாநிதியின் திட்டங்களைப் பொறுத்தவரை அண்ணா தொடர்ந்து முதல்அமைச்சராகவே உயிரோடு இருந்திருந்தால் எப்படி கொள்கைப் பிடிப்போடு செயல்படுவாரோ, அதைப்போலவே, அதன் தொடர்ச்சியாகவே மக்களுக்கான மகத்தான பணிகளையே ஆட்சியின் திட்டங்களாக உருவாக்கினார் கருணாநிதி. கருணாநிதியிடமிருந்து முரண்பட்டு அண்ணா திமுகவைத் தோற்றுவிக்கிறார் எம்ஜிஆர். மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஆட்சியைப் பிடித்தபிறகு 13 ஆண்டுக்காலம் எதிர்கட்சியாகவே தாக்குபிடிக்கிறார் கருணாநிதி. அதன்பிறகு மீண்டும் தமிழக முதல்வராகிறார்.

ஆனால் காலச்சக்கரம் அவரை முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் மாற்றிமாற்றி அமரவைத்து வேடிக்கை பார்த்தது. ஆட்சி என்று வரும்போதும் பெண்ணுக்கு சொத்துரிமை, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், குக்கிராமங்களுக்கு மினி பஸ் என்றெல்லாம் மக்கள் நலத்திட்டங்களில் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட தன்வாழ்நாளில் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு ஒருமுறையும் தோற்றதில்லை என்பது வரலாறு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close