[X] Close

நண்பர்கள் வாழ்க! - இன்று நண்பர்கள் தினம்


frinenshipday

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Aug, 2018 10:33 am
  • அ+ அ-

எல்லா விஷயங்கள் குறித்தும் அப்பாவிடம் பேசமுடியுமா. அப்படிப் பேசுகிற நிலை, எந்த அப்பா ஏற்படுத்தித் தருகிறாரோ... அந்த மகன்கள், ‘அவர் எங்கிட்ட அப்பா மாதிரியே நடந்துக்கமாட்டார். ஒரு ப்ரெண்டு மாதிரிதான் நடந்துக்குவார்’ என்று கொண்டாடுவார்கள். மனித வாழ்க்கையில், நண்ப ஸ்தானம் என்பது, தனித்த இடம். உயர்ந்த பந்தம். உன்னதமான சொந்தம்.

சமீபத்தில் கூட, நடிகர் பிரபுதேவா தான் எழுதிய தொடர் ஒன்றில், ‘இங்கே அப்பா இல்லாதவர்கள் இருப்பார்கள். அம்மா இல்லாதவர்கள் இருப்பார்கள். அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்று இல்லாதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கள் என்று எவருமே இருக்கமுடியாது’ என்பதாகச் சொல்லியிருப்பார்.

உண்மைதான். நட்புக்கு இடம்பொருள்ஏவலும் இல்லை. நல்லதுகெட்டது பாகுபாடுகளும் பிரித்துவிடமுடியாது.

ஒருவருக்கான நட்பு, குடியிருக்கும் தெருவில் இருந்து தொடங்குகிறது. வீட்டுத்தெருவில் உள்ள நண்பர்கள், அபார்ட்மெண்ட்ஸில் உள்ள நண்பர்கள் என அறிமுகமாகி, பரந்துவிரிகிறது. அவ்வளவு ஏன்... கில்லி விளையாட ஒரு நட்புக்கூட்டம், பட்டம் விட இன்னொரு நட்புவட்டம், விழுந்துவிழுந்து படிக்க ஒரு நட்புக்கூட்டம், விழுந்ததையும் எழுந்ததையும் பரிமாறிக்கொள்ள நட்புநெருக்கம் என வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நட்பு, உடலினுள்ளே இருக்கும் நரம்பென இழைஇழையாக வந்துகொண்டே இருக்கும்.

மாப்ளே, மச்சான், டேய், தோழர், நண்பா, கிச்சு, விச்சு, குண்ஸு என என்ன சொல்லி அழைத்தாலும் குதூகலித்துப் போய்விடுவதுதான் நட்பின் ஸ்பெஷாலிட்டி.

வீட்டில் ஒரு டம்ளரைக் கூட இங்கிருந்து அங்கே நகர்த்தமாட்டார்கள். ஆனால் நண்பனின் அக்காவுக்கோ அண்ணனுக்கோ கல்யாணம் என்றால், ஆளை பிடிக்கவே முடியாது. றெக்கைக் கட்டிப் பறப்பார்கள். மண்டபத்தில் டெகரேட் செய்வது, சாம்பார் வாளி தூக்குவது, குத்தாட்டம் போடுவது, எதிர்வீட்டாரை விழுந்துவிழுந்து கவனிப்பது என எல்லாவேலையையும் இழுத்துப்போட்டுச் செய்வது என்று அவ்வளவு பொறுப்புடனும் சிரத்தையுடனும் நேர்த்தியாகச் செய்வதன் பின்னணியில் எதிர்பார்ப்பற்ற நட்பு, கோலோச்சுகிறது.

திருமணம் என்றில்லை, மரணத்தையும் தன் துக்கமாகப் பார்க்கிற மனசு, நண்பனின் பிரச்சினையை தன் கவலையெனக் கொள்கிற புத்தி, நண்பனுக்காக அடிக்க கை ஓங்குகிற வீரம், காதலுக்குத் தூது போகிற பறவை, பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கிற நெருக்கம் என நட்பு சூழ் உலகத்தின் வைட்டமின் சம்பவங்கள் எல்லோருக்கும் உண்டு!

வீட்டுத்தெரு நண்பர்கள், பள்ளித் தோழர்கள், கல்லூரி நண்பர்கள், ஹாஸ்டல் ரூம் மேட் நண்பர்கள், மேன்ஷன் நண்பர்கள், சென்னை நண்பர்கள், சொந்த ஊர் நண்பர்கள், ஆபீஸ் நண்பர்கள் என்று எத்தனையெத்தனை நண்பர்கள் இருந்தாலும், அரைநிஜார் பருவத்திலிருந்தே நம் ப்ளஸ் மைனஸ் தெரிந்து பழகுகிற பால்ய நண்பர்களுக்கு எல்லோர் மனதிலும் வாழ்விலும் தனியிடம் உண்டு.

உறவுக்காரர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்பவர்களை விட, நண்பர்களிடம் பேசினால் மட்டுமே நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பார்கள். அது பேச்சில்லை. மனசின் ஓபன் டாக். ஈகோ இல்லாத இடமும் பொறாமை கொள்ளாத இடமும் நட்பு மட்டுமே. அப்படி இவையெல்லாம் எட்டிப்பார்த்தால், அங்கே நட்புக்கோ தோழமைக்கோ இடமே இல்லை.

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். நட்பின்றி... என்றும் போட்டுக்கொள்ளலாம்.

உலகின் எல்லா நண்பர்களுக்கும் எல்லாரின் நண்பர்களுக்கும் இந்த நண்பர்கள் தினத்தில்... வாழ்த்துகள்!    

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close