[X] Close

'என்கவுன்ட்டர் லிஸ்ட்'டில் இருந்து... 'எழுத்தாளர் லிஸ்ட்'டுக்குப் போனார்!- அலாவுதீனின் அற்புத விளக்கு போல, ரமேஷ்க்கு வாய்த்த புத்தகங்கள்!


annanagar-ramesh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Aug, 2018 17:56 pm
  • அ+ அ-

சில வழக்குகள் மட்டுமல்ல சிலரது வாழ்க்கையும்கூட விசித்திரமானதுதான். அப்படி ஒரு விசித்திரமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பி.ஆர்.ரமேஷ். 14 வயதில் சிறைக்குச் சென்று 20-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சிக்கி போலீஸ் என்கவுன்ட்டர் லிஸ்டில் பெயர் இடம்பெற்று ஓடி ஒழிந்து திரிந்தவர் இன்று தெளிந்த நீரோடை போன்றதொரு வாழ்க்கையை வசப்படுத்தியிருக்கிறார்.

வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலை நம்மில் பலரும் நிச்சயம் கேட்டிருப்போம். உங்களுக்கு அந்தப் பாடல் நினைவிருந்தால் 
"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்"

என்ற வரிகளை முணுமுணுத்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் ரமேஷுடன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என் மனதில் இந்தப் பாடல்தான் உரையாடலுக்கு பின்னணி இசையாக உலாவிக் கொண்டிருந்தது.

ரமேஷைப் பார்ப்பதற்காக மதுரை அண்ணா நகரில் ஸ்ரீ யோகி ஜென் வாடகை நூலகம் மற்றும் விற்பனை நிலையத்துக்குச் சென்றிருந்தேன். அந்த நூலகத்தில் காலை 11 மணிக்கே வாசகர்கள் ஆர்வத்துடன் வந்து சென்று கொண்டிருந்தனர். 
சாண்டில்யனின் கடல்புறா, சுந்தரம் ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, மேக்ஸிம் கார்கியின் தாய், பாவ்லோ கோல்ஹோவின் அல்கெமிஸ்ட், இன்னும் சில ஜெப்ரி ஆர்சர் புத்தகங்கள் அடுத்த வரிசையில் தெனாலி ராமன் கதைகள், டின்டின், ஹாரி பாட்டர், நான்சி ட்ரூ இன்னொரு புறம் ஓஷாவின் புத்தகங்கள் இன்னும் சில தத்துவ புத்தகங்கள் அத்துடன் பெரியார், மார்க்ஸ் புத்தகங்கள் என அந்த குட்டி நூலகம் அறிவுக் களஞ்சியமாக இருந்தது.
நூலகத்தை ஒரு சிறு நோட்டம்விடும்வரை காத்திருந்த ரமேஷ் நம்மை வரவேற்று அமரவைத்தார்.

நூலகத்துக்குள் அப்போது நுழைந்த பெண் ஒருவர் வணக்கம் சார் என்ற குரலை முன்னாள் அனுப்பிவிட்டு புத்தகங்களுடன் மேஜைக்கு வந்தார். "இதோ இவர் திருநகரில் இருந்து நமது நூலகத்துக்கு வருகிறார். கதைகள்தான் இவருக்குப் பிடிக்கும்" என்று சொல்லும்போதே ரமேஷ் ஒவ்வொரு உறுப்பினரையும் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

உங்களைப் பற்றி சொல்லுங்கள் ரமேஷ்?
ரமேஷ் இப்படி முன்பின் எந்த செருகலும் இல்லாமல் வெறும் பெயர் மட்டும் சொல்லி என்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்றுதான் நான் இத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டேன். இப்போது என்னைப் பலரும் பி.ஆர்.ரமேஷ் என்றுதான் அறிகின்றனர். நான் வன்முறையை விட்டு விலகியதற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு இதுதான். அண்ணாநகர் ரமேஷ்.. என்று என்னை கூப்பிட்டபோது காலரைத்தூக்கிவிட்டு கெத்து காட்டிய நான் ஒருகாலகட்டத்தில் அண்ணாநகர் ரமேஷ் என்று யாரேனும் கூப்பிட்டால் குறுகிப் போனேன். திருந்திய பிறகும் கூட சமுதாயம் நம் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.

அந்த கடந்த கால வாழ்க்கையைப் பற்றி..
அந்த கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டுமே. இப்போதுதான் என்னை இந்த சமூகம் எழுத்தாளர் பி.ஆர்.ரமேஷ், நூலக ரமேஷ் என்றெல்லாம் அடையாளப்படுத்தியிருக்கிறது. இதை அடைய நான் பெரும் பாடுபட்டுவிட்டேன்.

புரிகிறது. ஆனால், எழுத்தும் வாசிப்பும் எப்படி உங்களை வன்முறைப் பாதையிலிருந்து திருத்தியது என்பதை சமூகத்துக்கு சொன்னால்தானே நீங்கள் ஒரு ரோல் மாடலாக இருக்க முடியும்..
ரோல் மாடல் என்ற அளவுக்கு நான் எதுவும் சாதித்துவிடவில்லை. விவரம் அறியா வயதில் வழிதவறி சென்றுவிட்டேன். வழி தவறிவிட்டேன் என்று விவரம் தெரிந்தபோது அதிலிருந்து வெளியேற முடியவில்லை. சுப்பிரமணியபுரம் படத்தைப் பார்த்திருந்தீங்கன்னா "பழக்கத்துக்காக செஞ்சோம்னு" ஒரு வசனம் வரும். அப்படித்தான் பழக்கத்துக்காக செய்யப்போய் என் மீது 20 கொலை முயற்சி வழக்குகள் சேர்ந்தன.

14 வயதில் சிறைக்குச் சென்றேன். என் வன்முறைப் பாதைக்கான தளமே அங்கேதான் அமைந்தது. 9 வருட சிறைவாசம். அதன் பின்னர் போலீஸாரின் ரவுடிகள் லிஸ்டில் நிரந்தரப் பங்கு என்று திரிந்தேன். சிறையில் ஏற்பட்ட சகவாசம் கேடு விளைவித்தது. 

அதே சிறையில்தான் மனத்தெளிவும் பிறந்தது. ஒருகட்டத்தில் வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை உணர்ந்தேன். ஓடி ஓடி அயர்ந்துபோன எனக்கு சாதாரண மனிதனாக வாழ வேண்டும் என்ற வேட்கை வந்தது. அதன் விளைவு என் கூட்டாளிகள் அனைவருக்கும் நான் வெட்டுகுத்து வம்புச் சண்டை போட்டாபோட்டி என எல்லாவற்றையும் விட்டு நிரந்தரமாக ஒதுங்குவதாக அறிவித்தேன்.

ஆனால், அவ்வளவு எளிதாக நான் பிடித்த புலிவால் என்னை விட்டுவிடாது என்பதை சில காலத்திலேயே புரிந்து கொண்டேன். என்கவுன்ட்டர் துப்பாக்கி கனவிலும்கூட என்னைத் துரத்தியது. 

ஊடகங்கள் மட்டும் என் உள்ளக்குமுறலை திருந்தி வாழ விரும்பும் எனது ஆசையை சமூகத்துக்கு கொண்டு சேர்க்காவிட்டால் நான் எப்போது தோட்டாக்களுக்கு இரையாகியிருப்பேன். இன்றுவரை வன்முறை பாதைக்கு நான் திரும்பவே இல்லை. இனிமேலும் எப்போதும் வன்முறைக்கு திரும்பப்போவதில்லை. என்ன நேர்ந்தாலும் சரி.

நீங்கள் புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம், 6 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். தொலைந்த நேரங்கள், பாலைவனத்தின் நெற்கதிர்கள், ஒரு கல்லறை பேசுகிறது, கடவுளுக்கே ஒரு சாபம், போர்முனையில் ஒரு கனவு உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். 7 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவற்றை இன்னும் பிரசுரம் செய்யவில்லை. குடும்பம், நூலகம், எழுத்து, சமூகப் பணி என பி.ஆர்.ரமேஷாகிய நான் எப்போதும் பிஸியாகவே இருக்கிறேன்.

பி.ஆர்.ரமேஷாக எப்படி உணர்கிறீர்கள்?
7 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறை எனது பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. அப்போது வன்முறைக்கு வாக்கப்பட்டவன் விவாகரத்து பெற முடியாதா?! முடியும். பெற்றுவிட்டேன். எனது பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து காவல்துறை நீக்கிவிட்டது என்று ஒரு போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டினேன். நான் ரவுடி அல்ல காவல்துறை அங்கீகரித்ததை இந்த ஊரும் நம்ப வேண்டும் என்பதற்காக அந்த போஸ்டரை ஒட்டினேன். அன்று என் மனது எப்படி நிறைந்துபோனதோ அந்த நிறைவோடவே இன்றும் இருக்கிறேன்.

இந்தத் தொழில் உங்களுக்கு லாபமானதாக இருக்கிறதா?
இது தொழில் அல்ல. எனக்குத் தெரிந்ததை. எனக்கு அனுபவமானதை. எனக்குப் பிடித்தமானதை நான் செய்கிறேன். அதனால் இதை லாப நோக்கத்தோடு செய்யவில்லை. என் குடும்பத் தேவைகளை ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு எனக்கு பணம் கிடைக்கிறது. அதுபோதும். என்னால் இந்த நூலகத்தை நடத்த முடியாமல் போனால் இதை சமூக சிந்தனை உடையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேறு ஓர் உழைப்புக்குச் செல்வேனே தவிர இதில் லாபம் சம்பாதிக்க திட்டமிட மாட்டேன்.
நான் இந்த நூலகத்தை ஆரம்பிக்கும்போது டிவி சீரியல் மோகத்திலிருந்து பெண்களை மீட்க வேண்டும். வாசிப்பை அவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. ஆனால் இப்போது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இணைய போதையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது.
இதற்காகவே எனது நூலகத்தில் விதவிதமான புத்தகங்களை வாங்கிச் சேர்க்கிறேன். 40% புத்தகங்களே கதை சார்ந்ததாக இருக்கும். எஞ்சிய 60% புத்தகங்கள் முற்போக்கு சிந்தனை கொண்டதாக இருக்கும். சாதி மறுப்பும் கடவுள் எதிர்ப்பும் மட்டும்தான் முற்போக்கு என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், எல்லாவற்றையும் நடுநிலையாக இருந்து அணுகி முடிவு செய்தலே முற்போக்கு என நினைக்கிறேன். அப்படிப்பட்ட முற்போக்கு சிந்தனையை ஊக்குவிக்கும் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

 

உங்கள் நூலக சிறப்பு என்று எதைக் கூறுவீர்கள்?
எனது வாசகர்களுக்கு சில நேரம் நூலகம் வர இயலாமல் நோய் ஏற்படலாம் இல்லை வயது காரணமாக வர முடியாமல் போகலாம். அவர்களுக்கு நானே நேரில் சென்று அவர்கள் விரும்பும் புத்தகங்களை வழங்குவேன்.
எனது நூலகத்துக்கு விடுமுறை விடுவது என்றால் (வார விடுமுறையை தவிர்த்து) 10 நாட்களுக்கு முன்னதாகவே செல்ஃபோன் மெசேஜ் மூலம் தெரியப்படுத்திவிடுவேன்.

உலகமே சைபர்மயமான பின்னர் இணையத்தை மக்களிடமிருந்து பிரிப்பது அவ்வளவு எளிதானது என நினைக்கிறீர்களா? இணையத்தில்கூட புத்தகங்களைப் படிக்க வாய்ப்பிருக்கிறதே?
இணையமே கூடாது என நான் கூறவில்லை. 1 மணி நேரம் வரிசையில் நின்று இபி பில் கட்டுவதற்குப் பதிலாக ஆன்லைனில் அரை நிமிடத்தில் நீங்கள் அதை செய்ய முடிந்தால் அது இணையம் தந்த வரம். ஆனால், ஒரு பயணத்தின்போது பக்கத்தில் இருப்பவர் யார் என்றுகூட கவனிக்காமல், நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததுகூட ஓட்டுநர் நடத்துனர் தவிர உங்களையும் சேர்த்து அத்துனை பேரும் செல்ஃபோனில் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுதான் சீரழிவு. இந்த சீரழிவு மிக மிக ஆபத்தானது.

சரி வாசிப்பை அவ்வளவு எளிதாக பழக்கப்படுத்திவிட முடியுமா?
உடனே முடியாது. ஆனால் மாற்றம் வரும். கூழ் உண்பது வறுமையின் அடையாளம் எனப் பார்க்கப்பட்ட காலம் போய் காரில் வந்து ரோட்டோரக் கடையில் கூழ் உண்பது ஆரோக்கியத்தின் அடையாளம் என்று மாறிவிட்ட சமூகத்தில் இதுவும் மாறும். என் நூலகத்துக்கு வரும் குட்டி வாசகர்கள்தான் வயதான வாசகர்களைவிட ஆழமாக விசாலமாக வாசிக்கின்றனர். அந்த குட்டி வாசகர்கள்தான் சமூகத்தை மாற்றக் கூடியவர்கள். இப்போது ஐந்தாறு பேராக இருப்பவர்கள் நிச்சயம் 500 ஆயிரமாக மாறுவார்கள். 

குழந்தைகளிடம் வாசிப்பை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
குழந்தைகளிடம் முதலில் வாசிப்பைத் திணிக்காதீர்கள். என்னிடம் குழந்தைகளை அழைத்துவரும் சில பெற்றோர் ஒன்றிரண்டு மாதங்களிலேயே குழந்தை படிக்க மறுக்கிறான் என உறுப்பினர் சந்தாவை நிறுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். நீங்கள் வாசிப்பாளராக மாறுங்கள். நீங்கள் வீட்டில் புத்தகங்களைப் படியுங்கள். உங்களுக்கு சமையல் பற்றிதான் படிக்கப் பிடிக்கிறது என்றால் அதைப் படியுங்கள். நீங்கள் வாசிப்பாளராகும்போதுதான் உங்களால் இன்னொரு வாசிப்பாளரை உருவாக்க முடியும். உங்கள் குழந்தை காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கும். அப்புறம் சித்திரக் கதைகள் என அடுத்தடுத்து பயணிக்கும். அதைவிடுத்து வாசிப்பை திணிக்க நினைப்பது பலனற்ற செயல்.

இந்த நூலகத்தைத் தாண்டி உங்கள் இலக்கு என்ன?
நூலகம் என் வாழ்நாள் இலக்கு. அதைத் தாண்டியும் ஓர் இலக்கு இப்போது இருக்கிறது. சிறுவர் பூங்காக்கள் அமைக்க ஏற்பாடு செய்வது. பிள்ளைகள் செல்போனிலும் தொலைக்காட்சியிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள் என்று நாம் குறைகூறிக் கொண்டே இருக்கும் வேளையில் அது ஏன் என்பதையும் ஆராய வேண்டாமா?! சிறுவர்கள் விளையாட இடமில்லை. விளையாட இடமிருக்கும் இடத்தில் அவர்கள் விளையாடத்தான் செய்கிறார்கள். இங்கே எல்லா இடமும் கட்டிடம் ஆகிவிட்டது. அவர்கள் எங்கே சென்று விளையாடுவார்கள். ஊருக்கு நடுவே ஒரு பூங்காவை திறந்துவிட்டு அங்கே விளையாடச் சொன்னாலும் அங்கேயும் அவர்கள் கூட்டமாக இருந்தாலும் தனியாகத்தானே விளையாடுவார்கள் அந்த ஊர் பொது பூங்காவில் யாரை அவர்களுக்குத் தெரியும். அதனால், ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் ஒரு சிறுவர் பூங்கா உருவாக்க வேண்டும். அதற்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களை எல்லாம் கண்டறிந்து அங்கு பூங்கா அமைக்க மனு கொடுத்து வருகிறேன். எனது முயற்சியில் அண்மையில் செண்பகத் தோட்டம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இன்னும் இதுபோன்று பல பூங்காக்கள் அமைய வேண்டும். ஓடி விளையாடினால் அவர்களிடமிருந்து இணையமும் தொலைக்காட்சியும் ஓடி ஒளிந்துவிடும்.

இப்படி எல்லாக் கேள்விகளுக்கு பாசிடிவ் பதில்களையேக் கொடுத்த பி.ஆர்.ரமேஷ் இதே நேர்மறைச் சிந்தனையுடன் தனது எதிர்காலத்தில் பயணிக்க என்று வாழ்த்துவோம்.

-பாரதி ஆனந்த்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close