[X] Close

50 ஆண்டுகள் கடந்தும் மவுசு குறையாத தில்லானா மோகனாம்பாள்


thillana-mohanambal-50

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Jul, 2018 12:53 pm
  • அ+ அ-

தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரைக் கேட்டவுடனேயே சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் ஜில்ஜில் ரமாமணியாகிய மனோரமாவும் கண் முன்னே மின்னல் வேகத்தில் பளிச்சிடுவர். அந்தக் காலத்து மனிதர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி உபயத்தால் இந்தக் கால இளைஞர்களுக்கும் கூட இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பரிச்சியம்தான்.

நிகழ்த்துக் கலைஞர்களின் கலையையும் அவர்கள் வாழ்க்கையையும் சேர்த்து சுவாரஸ்யமாக ஒரு களம் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாளின் வெற்றி மந்திரம். தமிழ்த் திரையுலகில் அத்தகைய கலைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். 

தில்லானா மோகனாம்பாள் வழியில் கரகாட்டக்காரன் சங்கமம் என்று படங்கள் வந்திருந்தாலும் இனி எதிர்காலத்தில் வந்தாலும் இந்த அளவுக்கு மக்கள் கொண்டாடும் கலையாக இருக்குமா என்று இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியாது.
இரண்டு தேசிய விருதுகள் , 5 மாநில விருதுகள் 1968 ஜூலை 28-ல் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் அந்தத் திரைப்படத்துக்கான மவுசு சற்றும் குறையவில்லை. காரணம், கதையம்சம். கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதிய கதைதான் பின்னாளில் தில்லானா மோகனாம்பாள் என ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியானது. இந்தக் கதைக்கு கோபுலு ஓவியங்களை வரைந்திருப்பார். இன்றைக்குகூட அந்தத் தொடரை எடுத்துப் பார்த்தால் ஓவியமாக இருக்கும் வடிவாம்பாளும் வைத்தியும் திரைக்கதையில் வரும் சி.கே.சரஸ்வதியுடனும் நாகேஷுடனும் அப்படிப் பொருந்திப் போயிருப்பார்கள்.

காதலும் மோதலும் பின் சேர்தலும்..
நாதஸ்வர வித்வானான சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும் (சிவாஜி கணேசன்) பரதநாட்டியக் கலைஞரான மோகனாம்பாளுக்கும் (பத்மினி) பார்த்தவுடனேயே இதயங்கள் இடம் மாறிவிடுகின்றன. இதயம் சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை கண் ஜாடைகளாலும் உதட்டு சுளிப்புகளாலும் தத்தம் கோஷ்டியினர் தூதுமொழிகளாலும் காதல்ரசமாக வழிந்தோடச் செய்திருப்பார் ஏ.பி.நாகராஜன். ஆனால், எல்லா உறவுச்சிக்கல்களுக்கும் பின்னணியாக இருக்கும் புரிதல் குறைபாடே இவர்கள் பிரிவுக்கும் காரணமாக அமைந்துவிட பிரிந்த இதயங்கள் இணைவதே மீதிக் கதை.
இடையிடையே நலம் தானா நலம் தானா... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன... பாடல்களும் அதற்கான பாவனைகளும் கண் மூடினால் காட்சியாக விரியும். அத்தனை நேர்த்தியாக செதுக்கப்பட்ட திரைப்படம். இப்படிப்பட்ட கலையைப் பற்றி ஒரு தீவிர சினிமா ரசிகர் கூறிய விவரங்கள் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தன.

சிந்தாமணி தியேட்டரும் தில்லானாவும்...
தில்லானா மோகனாம்பாளைப் பற்றி பேசும்போது அதன் ரசிகர் ஒருவரின் அனுபவத்தை இங்கே பகிர்வதும் மிகப் பொருத்தமாக இருக்கும். மதுரையைச் சேர்ந்தவர் கணேசன். சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தில்லானாவை அவ்வளவு அழகாக சிலாகிக்கிறார்.
"தில்லானா மோகனாம்பாள் சென்னையில் சாந்தி, கிரவும் புவனேஸ்வரி திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் வெளியானது. எனக்கு வயது அப்போது 15 இருக்கும். முதல் நாள் முதல் காட்சிக்கே என் நண்பர்களுடன் சென்றுவிட்டேன். ஈஸ்ட்மேன் கலரின் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்த பிரம்மாண்டத்தில் மூழ்கிப்போனேன். இப்போதுகூட திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தது மனதில் பசுமையாக இருக்கிறது.
சிக்கல் சண்முகசுந்தரம், மோகனாம்பாள், 'கலியுக நந்தி' முத்துராக்கு, கருப்பாயி (எ) 'ஜில் ஜில்' ரமாமணி, 'சவடால்' வைத்தி, 'மதன்பூர்' மகாராஜா, சிங்கபுரம் மைனர், வடிவாம்பாள், நாகலிங்கம், நர்ஸாக வரும் பானுமதி எல்லோருமே என் ஆழ்மனதில் வாழ்கின்றனர். நண்பர்களுடன் ஒரு முறை அப்புறம் தனியாக இரண்டு முறை என மூன்று முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

இப்போதும் சிந்தாமணி தியேட்டர் இருந்த இடம் வழியாகச் செல்லும்போதெல்லாம் எனக்கு தில்லானா பாடல்தான் காதில் ஒழிக்கும். தில்லானாவை அவ்வளவு பிடிக்கும் என்பதாலேயே சிந்தாமணி தியேட்டரையும் அவ்வளவு பிடிக்கும்.
காலத்தால் அழியாத கலையைத் திரையிட்ட அந்தக் கலைக்கூடம் இன்றைக்கு இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. இன்று கீழமாசி வீதியில் சிந்தாமணி இல்லை ஆனால் என் நினைவுகளில் இருந்து தில்லானா மோகனாம்பாள் இன்னும் சிந்தவில்லை.

மதுரைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது!
மதுரைக்கும் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நலம்தானா?.. நலம்தானா?.. உடலும் உள்ளமும் நலம்தானா என்ற பாடலில் சுசீலாவின் குரல் இனிமைக்கு சற்றும் குறையாமல் இனித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வரத்தைக் கேட்டிருப்பீர்கள். அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள். தனது தந்தை நடேசன் பிள்ளையிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்த அண்ணன் எம்.பி.என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். பின்னாளில் இந்த விஷயம் தெரிந்தபோதிலிருந்து தில்லானா மனதுக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டது.

மதுரையில் சினிமா ரசிகர்கள் அதிகம். திரைப்பட ரிலீஸை நாங்கள் எல்லோரும் திருவிழா போல் கொண்டாடுவோம். பல முன்னணி இயக்குநர்கள் நட்சத்திரங்கள்கூட பட ரிலீஸுக்குப் பின் மதுரையில் என்ன ரிசல்ட் என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் ஜூலை பிறந்தவுடனேயே எனக்கு இது தில்லானா மோகனாம்பாள் வந்த 50-வது ஆண்டு என்பது நினைவுக்கு வந்தது. என் அனுபவத்தில் தில்லானாவுக்கு நிகராக நான் ஒரு படத்தைப் பார்த்ததில்லை. இனியும் நிச்சயமாக அப்படியொரு படத்தை எடுக்க முடியாது. அந்தப் படத்தின் கதை அப்படி நடிகர்கள் அப்பேர்பட்டவர்கள். அத்தகைய கூட்டணி இனி சாத்தியமில்லை.

கணேசன் அப்படிக் கூறிச் சென்றபோது நான் என் வயதில் பார்த்த கரகாட்டக்காரன் ஓரளவுக்கு ஏனும் நிகழ்த்துக் கலைஞர்களின் உணர்வுகளையும் வாழ்வையும் சினிமாத் தனமில்லாமல் காட்சிப்படுத்தியது என்றே தோன்றியது.
இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லானா மோகனாம்பாள் 100 என்று இளம் தலைமுறையினர் யாராவது எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அப்பவே அப்படி கதை படிக்க... 

தில்லானா மோகனாம்பாள் - அப்பவே அப்படி கதை

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close