[X] Close

நட்சத்திர நிழல்கள் 14: நெஞ்சுரம் கொண்ட கல்யாணி


14

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 09:52 am
  • அ+ அ-

-செல்லப்பா

எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றுதான் தாயொருத்தி விரும்புவாள். ஆனால், ஒரு தாய் தான் பெற்ற குழந்தையைக் கொல்லும் அளவுக்குத் துணிவாளா? துணிந்தாள் ஒருத்தி. சரி, துணிந்துவிட்டாள்.

அவள் எதற்காகக் குழந்தையைக் கொன்றாள், எந்தச் சூழல் குழந்தையைக் கொல்லும்படி அவளை நிர்ப்பந்தித்தது என்பனவற்றை அறிந்த பின்பு அளிப்பதுதானே நீதியாகவும் நல்ல தீர்ப்பாகவும் இருக்க முடியும்? எனவே, விசாரிக்கிறது நீதிமன்றம்.

அவள் குழந்தையைக் கொன்றது சட்டப்படி குற்றம் என்கிறார் நீதிபதி. தான் பெற்ற குழந்தையைத் தானே கொன்றது நியாயப்படி சரிதான் என்கிறாள் அவள். குழந்தையைப் பெற்ற தனக்கு அதைக் கொல்ல உரிமை இல்லையா என வாதிடுகிறாள் அந்தத் தாய்.

தமிழ்ச் சமூகம் நன்கறிந்த அந்தத் தாய் வேறுயாருமல்ல; பராசக்தி (1952) திரைப்படத்துக் கல்யாணிதான் அவள். இப்படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எம்.எஸ்.பாலசுந்தரத்தின் நாடகமான பராசக்தியின் கதையைத் தழுவி அமைத்திருந்தார் மு.கருணாநிதி. இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு. கண்ணீரும் கம்பலையுமாகவே பெரும்பாலான காட்சிகளில் தோன்றிய ஸ்ரீரஞ்சனி நடித்த அந்தக் கல்யாணி அனுபவித்த துயரங்களும் வேதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சமூகத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் நடத்தப்பட்டிருக்கிறார், அவர் என்னென்ன கொடுமைகளை எல்லாம் எதிர்கொண்டிருக்கிறார் என்பதன் உதாரணம் கல்யாணி. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் கல்யாணி துயரம் அனுபவித்தாள். இப்போது நாடு விடுதலையாகிவிட்டது. இன்றைக்காவது பெண்களின் நிலைமை மேம்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் காலக் கண்ணாடியாக இருக்கிறாள் கல்யாணி.

நிழலாய்த் தொடரும் துயரம்

கல்யாணி பிறந்த மறுநாளிலேயே அவளுடைய அன்னையைக் காலம் களவாடிக்கொண்டது. அவளது கல்யாணம் வைதிக முறைப்படி நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் குறிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கல்யாணத்தில் அவளால் முழு மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள இயலவில்லை.

அவள் உயிருக்கு உயிராகக் கருதிய அண்ணன்களில் ஒருவர்கூட திருமண நாளன்று வந்து சேரவில்லை என்பதே அதற்குக் காரணம். உடன்பிறந்த அண்ணன்கள் மூவர் ரங்கூனில் இருந்தும், அதில் ஒருவர் கல்யாணி கல்யாணத்துக்காகக் கப்பலில் கிளம்பி வந்தும் இரண்டாம் உலகப் போர்ச் சூழல் காரணமாக அவர்களில் ஒருவர்கூட திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமணத்தைத் தள்ளிவைக்கலாமா என்றுகூடத் தந்தையிடம் கல்யாணி கேட்டாள். ‘அய்யர் வச்ச நாள் தவறுனா தகராறு வரும்’ எனத் தந்தை மறுத்துவிடுவார். அய்யர் வச்ச அந்த நாளில் திருமணம் நடந்துமுடிந்தபோதும் அவளுடைய வாழ்வில் தகராறுகள் தொடரவே செய்தன.

துயரம் ஒரு நிழல்போல அவளை அடியொற்றி வந்தது. அழகான ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். அன்றே விபத்தில் கணவனையும் அதிர்ச்சியில் தந்தையையும் பறிகொடுத்தாள். நல்ல நாள் பார்த்து நடைபெற்ற திருமணம் கெட்ட நாள்களையே கல்யாணியின் வாசலுக்குத் தொடர்ந்து அனுப்பிவைத்தது.

கைக்குழந்தையுடன் கைம்பெண்ணானாள் கல்யாணி. ஆதரவு தர யாருமில்லை. குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டுமே என்ற கவலை அவளை வாட்டியது. வஞ்சக உலகத்தின் கண்களை அவளது வாலிபம் உறுத்தியது. அவற்றை மீறித் தன்மானத்தைக் காக்க அவள் படாத பாடு படவேண்டியிருந்தது. சொந்தமாக உழைத்துப் பிழைக்கலாம் என்று கருதி இட்லிக் கடை நடத்துகிறாள்.

நாமம் போட்ட மனிதர்கள் இட்லிக்கே கடன் வைக்கிறார்கள். பிழைப்புக்காகக் கடன் வாங்கிய சேட்டு மனிதர் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்கடி தருகிறார். உதவ வரும் மைனர் வேணுவோ அண்ணன் எனத் தன்னை அழைப்பதையும் பொருட் படுத்தாமல் கல்யாணியைக் கட்டிலுக்கு வர வற்புறுத்துகிறான். அவனிடமிருந்து தப்பிக்கிறாள் அவள்.

5.jpg 

பசி தீராத் துக்கம்

ஜெனரல் மெர்சண்ட் நாராயண பிள்ளை வீட்டில் பணிப்பெண்ணாகிறாள். உழைத்துப் பிழைக்க முயலும் அவளுக்குப் பிறர் உழைப்பில் கொழுத்த நாராயணன் தொந்தரவு தருகிறான். மனைவியை ‘கிருஷ்ணலீலா’ படத்துக்கு அனுப்பிய நாராயணன் தனது லீலையை கல்யாணியிடம் அரங்கேற்ற முயல்கிறான்.

‘அழகின் சிரிப்பு’ என்று சொன்னதற்கே அதிர்ந்தவளிடம் அவன் ‘எதிர்பாராத முத்தம்’ எதிர்பார்த்து நெருக்குகிறான். தனது உப்பைத் தின்பவள்தானே என்று தைரியமாக நெருங்குபவனிடம் ‘உப்பு உழைப்புக்குத்தானே தவிர, உடலுக்கு அல்ல’ என்று துணிவுடன் உரத்து மொழிகிறாள் கல்யாணி. தக்க நேரத்தில் நாராயணனின் மனைவி வரவே தப்பிக்கும் கல்யாணி அங்கிருந்து வெளியேறுகிறாள்.

குழந்தையின் பசி தீர்க்க முடியாத துக்கம் அவள் நெஞ்சடைக்க வைக்கிறது. மழலையின் பசி தீர்க்க கையேந்தவும் துணிகிறாள். நீதிபதி வீட்டில் விருந்தெனக் கேள்விப்பட்டு அங்கே செல்லும் கல்யாணி அவர் தன் சொந்த அண்ணன் என்பதை அறியாமல் அவர் காலைப் பிடித்துக் கதறுகிறாள். தன் தங்கை என்பது தெரியாத அந்த அண்ணன், அவளை உதறித் தள்ளிவிடுகிறார்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகரில் தன் தங்கத்தின் உயிரைக் காப்பாற்ற இயலாமல் போராடுகிறாள் கல்யாணி. உலகம் உதைத்துத் தள்ளிவிட்ட நிலையில் உலக மாதாவான பராசக்தியிடம் தஞ்சமடைகிறாள் கல்யாணி.

தன் பிள்ளையைக் கோயில் முன்பு கிடத்தி, தன்னையும் குழந்தையையும் காப்பாற்றும்படி கோருகிறாள். அம்பாள் கோயில் பூசாரி அவளையே காணிக்கையாகக் கேட்கிறான். ‘எம் பொண்ணு மாதிரி இருக்கே என் தாயைத் தாராளமா வணங்கு’ என்று சொல்லி கல்யாணியைக் கோயிலுக்குள் அழைக்கும் பூசாரி காம எண்ணத்துடன் அவளை நெருங்குகிறான்.

அம்பாள் சன்னிதி என்ற நினைப்பின்றி, உலக மாதா பார்க்கிறாளே என்ற பயமின்றித் துணிந்து வருகிறான் பூசாரி. ‘பராசக்தி பராசக்தி பராசக்தி’ என்னும் சொற்களைத் தவிர வேறு சொற்களற்ற கல்யாணியை பராசக்தி பார்த்துக்கொண்டே இருக்கிறாள். பராசக்தி வராவிட்டாலும் பாவி மனிதன் ஒருவன் உதவத் தப்பிக்கிறாள் கல்யாணி.

தன்மானம் போற்றிய வாழ்வு

தாராளமாக நீரைச் சுரக்கும் கண்களைக் கொண்ட கல்யாணியின் மார்புகளோ பால் சுரக்க வழியின்றி வற்றிக் கிடக்கின்றன. பசியில் மயங்கிய குழந்தையை நதியில் மூழ்கடிக்க முடிவுசெய்கிறாள். துன்பமிகு இவ்வுலகை நீங்கி இன்பவுலகை எட்டிப்பிடிக்க முயல்கிறாள். குழந்தையை எறிந்துவிட்டுத் தானும் குதித்தபோது சட்டத்தின் பிடியில் சிக்குகிறாள். சோறு தர நாதியில்லாத ஊர் நீதியை நிலைநாட்டும் வேடம் தரிக்கிறது.

‘தகப்பன் பெயர் தெரியாத குழந்தையா?’ எனக் கேட்கிறார் நீதிபதி. ‘பச்சைக் குழந்தைக்கு எப்படித் தகப்பன் பெயர் தெரியும்?’ என்கிறாள் கல்யாணி. ‘ஏழு குழந்தையைக் கொன்ற நல்ல தங்காள், பிள்ளைக் கறி சமைத்த சிறு தொண்டர் போன்ற புராணங்களை உதாரணங்களாகக் காட்டி, என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா பார்வதி வந்து பாலூட்ட?’ எனக் கேட்கிறாள் கல்யாணி.

அவனது பசியைப் போக்க இயலாத நிலையில் அவனைக் கொல்ல நேர்ந்ததாகச் சொல்கிறாள். புராண உதாரணங்களை எல்லாம் ஏற்க சட்டம் மறுக்கும் நிலையில் குழந்தை உயிருடன் இருக்கும் செய்தி நீதிமன்றத்துக்கு வருகிறது. கல்யாணி விடுதலை ஆகிறாள். எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால், கல்யாணியிடம் காணப்பட்ட நெஞ்சுறுதியும் போராடும் குணமும் பெண்களுக்கு ஊக்கம் தரக்கூடியவையாக உள்ளன. தரங்கெட்ட உலகில் தன்மானத்துடன் போராடும் பெண்களின் பிரதிநிதி கல்யாணி.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close