[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 14: வரதட்சிணைக் கொடுமையிலிருந்து விடுதலை


14

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 09:53 am
  • அ+ அ-

-ருக்மணி

பழமைவாதங்களில் இருந்து மீண்டுவிட்ட தாகப் பலரும் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், எத்தனையோ பழமைவாதப் பழக்க வழக்கங்கள் இன்றும் அழித்தொழிக்க முடியாமல் செழித்துக் கிளைத்தபடி இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது வரதட்சிணை.

இப்போதெல்லாம் பலரும், “எவ்வளவு வரதட்சிணை தருவீர்கள்?” எனப் பெண் வீட்டாரை நேரடியாகக் கேட்பதில்லை என்றாலும், “உங்க பொண்ணுக்கு நீங்க செய்ய வேண்டியதைச் செய்யுங்க” என மறைமுகமாக வலியுறுத்தி விடுகின்றனர். திருமணத்தின்போது  இப்படி மறைமுகமாவோ நேரடியாகவோ மணமகள் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார்  வற்புறுத்திக் கேட்டுப்பெறும் பணம், நகை, சொத்து போன்ற அனைத்தும் வரதட்சிணையே.

வரதட்சிணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். வரதட்சிணைக் கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சிலரைப் புகுந்த வீட்டினரே கொலை செய்துவிடும் கொடுமையும் நடக்கிறது. இன்னும் சிலரோ பிறந்த வீட்டுக்குத் துரத்தப்படுகின்றனர்.

இதைத் தடுக்க முன் நடவடிக்கையாகத் திருமணத்தின்போது மணமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் தங்க நகைகள், பாத்திர பண்டங்கள் போன்ற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மாப்பிள்ளை, பெண் வீட்டார் ஆகிய இரு தரப்பினரும் இப்பட்டியலில் கையெழுத்திடுவதுடன் உறவினர் அல்லாத இரு நபர்களின் சாட்சிக் கையெழுத்தும் வாங்கப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும் என 1985-ம் ஆண்டின் வரதட்சிணைத் தடுப்பு விதிகள் பரிந்துரைக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் கையாளப்படும் குற்றங்கள் அனைத்தும் அபராதம் செலுத்துதற்குரிய, பிணையில் விடுவிக்க இயலாத தண்டனைக்குரியவை.

2012-க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல்படி இந்தியாவில் 8,233 வரதட்சிணை மரணங்கள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சிணை காரணமாக மரணமடைகிறாள். குடும்ப வன்முறையின் முக்கிய அடிப்படையே வரதட்சிணைதான்.

வரதட்சிணைக் கொடுமையை ஒழிக்க இந்திய அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. அவை:

# வரதட்சிணை கொடுப்பதும் அதைப் பெற்றுக்கொள்வதும் சட்டப்படி குற்றம். இக்குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் அல்லது வரதட்சிணையாகக் கோரி பெற்ற சீதனத்தின் மதிப்பு அதிகமாக இருந்தால் அந்தத் தொகை அபராதமாக  விதிக்கப்பட்டாக வேண்டும்.

# வரதட்சிணையை நேரடியாகவோ மறைமுகமாகவோ கோரினால் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் 10,000 ரூபாய்வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

# வரதட்சிணைச் சாவுக்குக் காரணமானவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில நேரம், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.

# ஒரு பெண்ணின் கணவனோ அவளுடைய கணவனின் உறவினரோ அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கினால் அவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

# வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் 1961-ல் சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் செய்யப்பட்டன.

# இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 1983-ல் 498ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டு, கணவனும் அவனுடைய உறவினர்களும் மனைவியை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கொடுமைப் படுத்தினால் மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. மனரீதியான சித்ரவதை, சட்டத்தால் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986-ல் 304பி என்ற பிரிவு வரதட்சிணைச் சாவு குறித்துக் கொண்டுவரப்பட்டது.

# திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான முறையில் இறந்தாலோ இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சிணைக் கொடுமை நடந்திருந்தாலோ அது வரதட்சிணை மரணம் என்றே பதிவுசெய்யப்படும். கொடுமை செய்த கணவனும் அவனுடைய உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும்.

குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்தாம் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனைவரை கிடைக்கும். இயல்புக்கு விரோதமாக மருமகள் ஸ்டவ் பற்றவைத்தால் மட்டும் வெடித்துச் சாகிற பிரச்சினைக்கு இவ்வாறாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

# மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ்திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை; மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டது. 2005-ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சிணையைக் குற்றமாக்குகிறது.

# 1961 சட்டத்தில் திருமணத்துக்காகக் கொடுக்கப்படுவதே வரதட்சிணை என்று இருந்தது, 1984-ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.

வரதட்சிணைத் தடுப்பு அலுவலர்

தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சிணைக் குற்றங்களைத் தடுக்கவும் பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளைக் குறைக்கவும் வரதட்சிணைத் தடுப்பு அலுவலராக  அந்தந்த மாவட்டச் சமூக நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நேரடியாகப் புகார்களை அளிக்கலாம். மேலும், மகளிர் காவல் நிலையங்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் புகார்களையும் பெற்று அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்துக்கோ  நீதிமன்றத்துக்கோ அறிக்கையாக அவர் அனுப்பலாம்.

மேல்நடவடிக்கைகள்

# பதிவுசெய்யப்படும் வழக்குகள் 1973-ன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் (CPC) கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி விசாரிக்கப்படும். வழக்கு மேல்முறையீடு, மறுவிசாரணை ஆகியவற்றுக்கும் விதிகளின்படி அனுமதி உண்டு.

# விரைவான, சீரிய தீர்வுகளுக்குச் சட்டச் சேவை ஆணையத்தை (Legal Services Authority) அணுகலாம்.

 

வரதட்சிணை புகார் அளிப்பது எப்படி?

# திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள்வரை யார் வேண்டுமானாலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

# குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984-ன் படி வரதட் சிணைக் கொடுமை காரணமான மரணம், மணமகள் எரிப்பு ஆகிய இரண்டைத் தவிர வரதட்சிணை தொடர் பான அனைத்துக் குற்றங்களும் குடும்ப நீதிமன்றங்கள் மூலமாகவே விசாரிக்கப்படும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு (CPC) 46-ன் படி விசாரணைக்கான கால அளவு கீழ்க்காணும்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

# அபராதம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு - ஆறு மாதத்துக்குள்.

# அபராதம், ஒரு வருடச் சிறைத் தண்டனை மட்டுமே தண்டனையாக விதிக்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு - ஓராண்டு வரை.

# ஓராண்டுக்கு மேற்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டு தண்டனையாக வழங்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு - மூன்று ஆண்டுகள் வரை.

# வரதட்சிணை தொடர்பான விஷயங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பூர்வமான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

அ) சொத்தில் பங்கு மறுக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு (IPC) 406.

ஆ) வரதட்சிணை தொடர்பான அனைத்துத் துன்புறுத்தல்களுக்கும் - (IPC)498A

இ) வரதட்சிணை கேட்டுத் தாக்கப்பட்டால் - (IPC)324

ஈ) வரதட்சிணை கேட்டு மிகவும் அபாயகரமாகத் தாக்கப்பட்டால் - (IPC)326

உ) சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைக்கப் பட்டால் - (IPC)342

ஊ) தவறுதலாகப் பிடித்துவைத்தால் சட்டப்பிரிவு - IPC 341

# குற்றவாளிக்கு எதிராக வழக்கை வலுவாக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளை இணைத்தும் வழக்குகளைப் பதிவு செய்யலாம்.

 

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close