[X] Close

வதந்தியை அல்ல வாட்ஸ் அப்பில் நல்லதைப் பரப்புவோம்..


mob-psychology-and-lynching

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jul, 2018 15:22 pm
  • அ+ அ-

முதன்முதலில் திருவள்ளூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்தபோது மனம் பதறியது. குழந்தை கடத்தலில் ஈடுபட முயன்றதாக மூதாட்டி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பதே அந்த அதிர்ச்சியூட்டிய செய்தி. அடுத்த சில நாட்களில் பழவந்தாங்கலில் மனநலம் பாதித்த ஒருவரை குழந்தைக் கடத்த வந்தவர் என்று கூறி பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.  வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியதையடுத்தே இச்சம்பவமும் நடந்தது. இரண்டாவதாக அதே பாணியில் ஒரு சம்பவம் நடந்தபோது பீதி ஏற்பட்டது.

வாட்ஸ் அப்பில் இப்படிப்பட்ட தவறான தகவல்களைப் பகிர்வோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. காவல்துறை எச்சரிக்கையையும் மீறி இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக வெளிமாநிலத்தவர் மீதான இத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 
சென்னையில் நேற்றுகூட மெட்ரோ ரயில் பணியாளர்கள் இருவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இருவரும் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டோடு இந்த வதந்தி நின்றுவிடவில்லை. மாநிலங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதம் அசாமில் இரண்டு பேர் இப்படி ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பேரை ஒரு ஊரே சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளது. நடந்த சம்பவத்தை விவரித்த போலீஸ், "சோலப்பூரைச் சேர்ந்த நாடோடிக் குடும்பத்தினர் 7 பேர் அரசுப் பேருந்து மூலம் ராணிபடா கிராமத்துக்கு வந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர்கள் வீடுவீடாகச் சென்று உணவு கேட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு குழந்தையிடம் பேசியிருக்கிறார். உடனே, அங்கிருந்த கூட்டம் ஒன்றுகூடி அவர்களை சரமாரியாகத் தாக்கியிருக்கிறது. 2 பேர் எப்படியோ தப்பித்துவிட்டனர். மற்ற 5 பேரையும் அந்த கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் சடலங்களை அப்புறப்படுத்தியபோதுகூட வெறிபிடித்த மாதிரி வந்த கும்பல் இரண்டு பேரின் உடலை இழுத்து இன்னும் உயிர் இருக்கிறதா என சோதித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் சமீப நாட்களாகவே குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன. 

அண்மையில் நடந்த சம்பவங்கள் சில..
அசாமின் குவாஹாட்டியில் ஒரு பெண்ணை குழந்தை கடத்துபவர் எனக் கூறி கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்றது ஒரு கும்பல்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குழந்தைக் கடத்தல்காரர் என எண்ணி திரிபுராவாசிகள் அடித்துக் கொன்றனர்,
அதே நாளில் தெற்கு திரிபுராவில் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை மக்கள் அடித்துக் கொன்றனர்.
தீவிர நோயைப் போல் பரவி வருகிறது வாட்ஸ் அப் வதந்திகள். 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு 
என்று அன்றே வள்ளுவர் சொல்லிவைத்தார்.

ஒருவேளை அவர் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும். இணைய உலகம் என்றும் மார்தட்டிக் கொள்ளும் மனிதர்கள் இணையம் இருப்பதால் மூளையைக்கூட கழற்றிவைத்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள் போல! இல்லாவிட்டால் வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி ஒருவரை அடித்துக் கொள்ளும் வன்முறை வெறி எங்கிருந்து வரும்?! 
தனியாக இருக்கும்போது சாந்தமாக இருக்கும் நபர்கூட குழுவாக இருக்கும்போது வன்முறையில் ஈடுபடும் ஒரு மனநிலையைத்தான் கும்பல் மனநிலை. இத்தகைய கும்பல் மனநிலை கொண்டவர்களால்தான் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடைபெறுகின்றன. 

இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சரியான மனிதரைதான் அடிக்கிறோமா என்கிற பிரக்ஞைகூட இருக்காது. கும்பல் மனநிலையோடு தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒருவர் செய்யும் செயல் அது. அதன் பின்னணியில் இருக்கும் கூரூர மனநிலையைப் பற்றி ஒருவருக்கும் அக்கறையில்லை.

இத்தைய மனநிலை குறித்து பிரபல மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம். 

அவர் கூறியதாவது:
இதற்கெல்லாம் காரணம் குழு மனப்பாண்மை. இது மிகவும் ஆபத்தானது. தனியாக இருக்கும்போது தன்னைக் கடந்து செல்லும் பெண்ணை பார்க்கக்கூட தயங்கும் சாது அதுவே ஒரு கும்பலாக நிற்கும்போது அந்தப் பெண்ணை கிண்டல் செய்யும் அளவுக்குத் துணிகிறான். காரணம் குழு மனம்ப்பாண்மை. இதை மாப் பிஹேவியர் mob behaviour எனக் கூறலாம். குழுவானது ஒரு நபருக்கு அதீத தைரியத்தைத் தருகிறது. குரூர சந்தோசத்தைத் தருகிறது. குழுவில் இருந்து கொண்டு ஒரு செயலைச் செய்யும்போது அதற்கு நாம்தான் முழுதாக பொறுப்பு என்ற நிலை வராது என்ற துணிச்சல் வருகிறது.

அடுத்தநிலை ஃபியர் சைக்காஸிஸ் Fear Psychosis. காதுவழியாக ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது. இல்லை ஒரு விஷயத்தை அடிக்கடி படிக்கும்போதோ ஒருவித ஜாக்கிரதை உணர்வு ஏற்படுகிறது.அந்த ஜாக்கிரதை உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும் பயம் சார்ந்த நபர் சிக்கினால் அவர்களை அடித்துத் துன்புறுத்தச் சொல்கிறது. பல நேரங்களில் கும்பலில் இருப்பவர்களுக்கு தாங்கள் அடிக்கும் நபர் உண்மையான குற்றவாளியாகக்கூட இல்லாமல் இருக்கலாம் எனத் தெரியும். இருப்பினும் வீர தீர செயல் என்று நினைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுவர். ஜேம்ஸ் பாண்ட் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்வார் என்பதுபோல் கும்பல் மனநிலை கொலைக்கு வித்திடுகிறது.

மூன்றாவதாக சட்டத்தின் மீதான தவறான புரிதல். ஒரு கும்பலாக வன்முறையில் ஈடுபடும்போது குறிப்பிட்ட ஒரு நபரை போலீஸார் பிடிக்க மாட்டார்கள் என்ற தவறான புரிதல். சட்டத்தால், கும்பல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே சமமான தண்டனையைப் பெற்றுத்தர முடியும் என்பதை அவர்கள் உணராமல் இருக்கும்போதும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்.
இவை எல்லாவற்றையும்விட மனித மனத்தின் வக்கிர உணர்வின் வடிகால் என்றுகூட குழு மனநிலையைக் கூறலாம்.

வக்கிர உணர்வுக்கு வடிகாலாக கையில் சிக்கியவரை அடித்துத் துன்புறுத்துகின்றனர். இப்படியான குழு மனநிலையில் உள்ளவர்களுக்கு தாழ்வுமனப்பான்மையும் இருக்கும். திருப்பித் தாக்க முடியாத நிலையில் எதிரிகள் இருப்பதை தெரிந்துகொண்ட பின்னர்தான் கும்பல் வன்முறை கட்டுக்கடங்காமல் செல்கிறது.

வாட்ஸ் அப்பால் நன்மைகளும் இருக்கின்றன. இன்று நிறைய பேருக்கு தொழில் ரீதியாக உதவுகிறது. பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்தி மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர். அதே வேளையில் வாட்ஸ் அப் வதந்திகளால் ஆபத்தும் இருக்கிறது.

நம் முன் இணையம் என்ற போர்வையில் கொட்டிக்கிடக்கும் தகவலில் சொக்கத் தங்கமும் இருக்கிறது குப்பையும் இருக்கிறது. மனிதர்களாகிய நாம்தான் அதை சரியாகக் கையாள வேண்டும். அதற்கு தனிநபர் கட்டுப்பாடு அவசியம். தனிநபர் கட்டுப்பாடு இருந்தால் நாம் ஃபார்வர்டு செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகச் செய்வோம். அதைவிடுத்து நமக்கு வரும் தகவல் வதந்தி என்று தெரிந்தும்கூட அதைப் பகிர்ந்தோம் என்றால் அது நமக்கு வக்கிர உணர்வு அதிகமாக இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கட்டுரையை எழுத உந்துதலாக இருந்ததுகூட வாட்ஸ் அப்பில் வந்த ஒரு குறுந்தகவல்தான். FORWARDED AS RECEIVED IS A COWARD'S SHIELD என்று அதில் பகிரப்பட்டிருந்தது. அதாவது நமக்கு வரும் தகவல்களை முழுதாக படிக்காமல் கூட வந்ததைப் பகிர்கிறேன் எனப் பகிர்வது கோழைகள் தஞ்சம் புகும் தற்காப்பு கவசம் என்பதே அதன் அர்த்தம். 

இப்போது இருக்கும் காலகட்டத்தில் நம் ஃபார்வர்ட் மெசேஜ் ஒரு உயிரைக் காவு வாங்கும் அளவுக்கு கொடூரமாக இருக்கிறது எனவே தனிநபர் கட்டுப்பாட்டுடன் இருப்போம். இணையத்தை ஆழ்வோம்.
வதந்தியை அல்ல வாட்ஸ் அப்பில் நல்லதைப் பகிர்வோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close