[X] Close

காணாமல் போகும் கதிர் அரிவாள்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 11:35 am
  • அ+ அ-

-என்.கணேஷ்ராஜ்

தேனி அருகே பூதிப்புரம் என்றொரு சின்ன கிராமம். அங்கு எந்தத் தெருவில் நுழைந்தாலும் பண்ணை அரிவாள் பட்டறைகள்தாம். ஈரோடு, திருச்செங்கோடு, செஞ்சி, திண்டிவனம், சேலம் அல்லாது கர்நாடாகாவிலும் பூதிப்புரம் கதிர்அரிவாள்கள் அதிக அளவில் விற்கப்படுள்ளன. இந்த ஊரில் நடுநசியில்கூட ஏதோவொரு பட்டறையில் இரும்பு அடிக்கும் ஓசை கேட்கும்.

பல பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மூட்டைகளில் இவற்றைக் கொண்டுசெல்வதும், அடுத்த அரிவாள் செய்வதற்கான இரும்பு ரோல்கள், இரும்புத் துண்டுகள், மரக் கைப்பிடிகள் வந்து இறங்குவதுமாகச்

சிறுதொழில் கிராமமாக இருந்தது பூதிப்புரம். கதிர்அரிவாள் தயாரிப்பில் மாநில அளவில் தனி அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது இந்த ஊர். ஆனால், இதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு. உழவுத் தொழிலைச் சார்ந்துள்ள இந்தத் தொழில் சிதைந்துவருகிறது.

நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிப்பு, வேதி உரத்தால் மண்வளப் பாதிப்பு, புழு-பூச்சித் தாக்குதல், விலையின்மை போன்ற காரணங்களால் உழவுத் தொழில் பாதிப்புக்கு உள்ளானது. அதனால் இதை நம்பியிருந்த மக்கள் வேறு பணிகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

இதனால் உழவுத் தொழிலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இப்படித்தான் கதிர் அரிவாளின் தேவையும் குறைந்துபோனது. அதனால் படிப்படியாகப் பட்டறைகளின் செயல்பாடு குறைந்து.

 

“இத்தொழிலில் எதிர்காலம் இல்லாததால் பலரும் இதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் குடும்பமே இப்பணியில் ஈடுபடும். ஒருவர் துருத்தியை (கரி தணலாக எரிய காற்று ஊதும் அமைப்பு) ஊத இன்னொருவர் பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டைச் சுத்தியலால் அடித்து வடிவம் மாற்றுவதும், பிடி அமைத்து வடிவம் கொடுப்பதுமாக மொத்தக் குடும்பமும் இந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள்.

ஒரு நாளுக்கு சுமார் நூறு உருப்படிகளைத் தயாரித்து விடுவோம். சாதாரண இரும்பில் செய்யப்படும் அரிவாள் ரூ.25க்கு விற்கப்படுகிறது, இது சில நாட்களிலேயே கூர் மழுங்கிவிடும். இன்னொன்று முதல் தரத்தில் செய்வோம் அதன் விலை ரூ.150. இது பல மாதங்களுக்கு மழுங்காது. அதன் அளவு பெரியதாக இருப்பதால் அறுப்புக்கும் வசதியாக இருக்கும்” என்கிறார் தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் முருகன்.

தற்போது துருத்தி ஊதக் கூலி கொடுக்க முடியாத நிலை. அதனால் இந்தத் தொழிலும் சற்று இயந்திரமயம் ஆகியுள்ளது. துருத்தியை மின்மோட்டாரில் இயங்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.

கதிர் அரிவாள் மூலம் இந்த ஊரின் பல தலைமுறைகள் செழித்திருந்தன. திருமணம், திருவிழா என அனைத்துக்குமான பொருளாதாரத் தேவையையும் இந்தத் தொழில் நிறைவேற்றியிருக்கிறது. அவர்களை அந்தஸ்தாக வாழ வைத்திருக்கிறது. இப்போது இத்தொழில் பலவீனமான நிலையில் உள்ளது.

இருந்தாலும் இங்குள்ள சிலர் ஒதுங்கிச் செல்ல மனமில்லாமல் இந்தத் தொழிலில் இன்றும் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் இரும்பு அடிக்கும் ஓசை அந்த ஊரில் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஓசை இன்னும் எத்தனை நாளுக்குக் கேட்கும் என்று தெரியவில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close