[X] Close

டாக்டர் பட்டத்தை  தலைமை நீதிபதி வாங்குவது சரிதானா?


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 09:26 am
  • அ+ அ-

-கே.சந்துரு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகமானது கேரள ஆளுநர் சதாசிவம், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி (அடுத்த தலைமை நீதிபதி) போப்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி மூவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காகச் சிறப்புப் பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌரவ டாக்டர் பட்டத்தைப் பற்றி செய்தி வெளியானவுடன் எனது நினைவலைகள் பின்னுக்குச் சென்றன. 1960-களின் பின்பகுதியில் உலகெங்கும் மாணவர்கள் பேரெழுச்சியாக எழுந்தனர். பாரீஸ் நகரத்தை மாணவர்கள் கைப்பற்றியதுபோல் அமெரிக்காவிலும் சில பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டனர்.

கௌரவ பட்டங்களின் கதி

உலகப் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (அந்நாட்டில் அப்பதவி தலைவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) அறையைச் சோதனையிட்டபோது, பல அரிய ஆவணங்கள் அவர்களிடம் கிட்டின. அந்த ஆவணங்களையெல்லாம் தொகுத்து “யார் கையிலுள்ளது கொலம்பியா பல்கலைக்கழகம்?” என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார்கள். அதில், ஒரு அமெரிக்க வர்த்தகருக்கு கௌரவப் பட்டம் அளிப்பதைப் பற்றி ஒரு கடிதம் இருந்தது. அவருக்கு கௌரவப் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்த அமெரிக்க குடியரசுத் தலைவர், “அந்த கௌரவப் பட்டம் அளிக்கப்பட வேண்டிய நபர் சீனராக இருப்பினும், அவருக்கு அமெரிக்க மனைவி உண்டு. மேலும், அவர் அமெரிக்காவுக்கு ஆதரவு தரும் வர்த்தகர்” என்று பரிந்துரைத்திருந்தார். கௌரவப் பட்டங்களின் கதி அந்த நாட்டிலேயே காற்றில் பறந்தது.

சென்னை மாகாணத்தில் 1923-ல் முதல் முறையாக சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் அமைப்பு முறை இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் அமைப்பை ஒத்திருந்தது. பல்கலைக்கழக நிர்வாகம் சிண்டிகேட் என்று அழைக்கப்படும் ஆட்சிக் குழுவின் கையில் ஒப்படைக்கப்பட்டது. மாநில ஆளுநர் அதன் வேந்தராகவும் கல்வி அமைச்சர் இணைவேந்தராகவும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமும் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகத் துணைவேந்தர் நியமனம் அரசியலாக்கப்பட்டு, தற்போது அது ‘ஏலம்’ விடப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டது. கல்வியாளர்கள் அடங்கிய செனட் சபையிலும் ஆட்சிக் குழுவிலும் அநேகமாகக் கல்வியாளர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, அரசுத் துறைச் செயலாளர்களும் ஆட்சிக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். கௌரவ டாக்டர் பட்டமானது வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகப் பலருக்கு ஆகும் சூழல் உருவாக இவையெல்லாமும் சேர்ந்துதான் காரணங்கள் ஆயின.

டாக்டர் பட்டம் பட்ட பாடு

தமிழகத்தில் டாக்டர் பட்டம் பட்ட பாட்டைத் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். 1972-ல் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முற்பட்டபோது எழுந்த எதிர்ப்புச் சூழல் இன்றும் நினைவுகூரத்தக்கது. அப்போது காவல் துறை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் படுகாயமுற்றதுடன், உதயகுமார் என்ற மாணவர் இறந்தேபோனார். அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி (என்.எஸ்.ராமசாமி) விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது வரலாறு. ஆயினும், கருணாநிதியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர். இன்று தமிழகத்தில் அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் தவிர, பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகிவிட்ட சூழலில், கௌரவ டாக்டர் பட்டங்கள் பெட்டிக்கடையில் வெற்றிலைப் பாக்கு விற்பதுபோல் ஆகிவிட்டது. இருப்பினும் ஆசை யாரையும் விட்ட பாடில்லை. தற்போது நீதிபதிகளும் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் காலம்போலும்!

இன்றைய சூழலில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற மூன்று நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளனர் (வினீத் கோத்தாரி, ஜெயச்சந்திரன், அனிதா சுமந்த்). இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்படும் கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற நீதிபதிகள் ஒப்புக்கொள்வது சரிதானா? அதிலும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மூன்று நீதிபதிகளுக்கு (ஒருவர் ஏற்கெனவே அரசியலுக்குச் சென்றுவிட்டார்) ஒரே சமயத்தில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வருவது கேள்விகளை எழுப்பாதா?

தலைமை நீதிபதி மறுபரிசீலிப்பாரா?

ஏற்கெனவே அந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சத் தகுதியில்லை என்பதை விசாரிக்க நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீட்டை அனுமதித்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடைவிதித்ததோடு அல்லாமல் அம்முறையீடு இன்னும் நிலுவையிலும் உள்ளது. இதுபோல் அப்பல்கலைக்கழகத்தின்  மீதான மேலும் சில வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. அப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் தகுதி உள்ளவரா என்று கேட்கப்படும் நீதிப் பேராணை மனுவும் நிலுவையில் உள்ளது.

தவிர, அப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில் 22(2) பிரிவின் கீழ் ஆட்சிக் குழு உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதற்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். 16 உறுப்பினர் உள்ள ஆட்சிக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் அரசு அதிகாரிகளே. அது தவிர, ஒரு உறுப்பினரின் நியமனம் தலைமை நீதிபதியின் கலந்தாலோசனைப்படி நடத்தப்படுகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரிவு 29(1)ன்படி, அகாடமிக் செனட் என்ற கல்வி சபைக்கு ஒரு உறுப்பினரை நேரடியாக நியமிக்கும் அதிகாரமும் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வேறு யாருக்கு அங்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் நாம் கவலைப்படப்போவதில்லை. ஆனால், தார்மீகரீதியாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (அவர் மீது நமக்கு மிக்க மரியாதை உண்டு) அப்படிப்பட்ட நிகழ்வுக்கு இசைவு அளித்திருக்கக் கூடாது என்பதே எமது கருத்து. இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தலைமை நீதிபதி மறுபரிசீலனை செய்வாரா?

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close