[X] Close

உலகை  வளைக்கும் சீனா


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 11:11 am
  • அ+ அ-

-ஜெ.சரவணன்

இந்திய அரசு கடந்த வாரம் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம் இந்தியா, சீனாவின் பொருளாதாரப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பது. ஏன் சீனாவைப் பின்பற்ற வேண்டும்? இந்தியா சீனாவைப் பின்பற்ற முடியுமா? சீனாவின் பொருளாதார கொள்கைகள் இந்தியாவுக்கு ஒத்துவருமா?

இன்றைய சந்தையைக் கூர்ந்து கவனித்தால் பெரிய அளவில் வளர்ந்துவரும் துறைகளாக இரண்டு துறைகளைச் சொல்லலாம். ஒன்று கேட்ஜெட், மற்றொன்று ஆட்டோமொபைல். இந்திய கேட்ஜெட் சந்தையில் 90 சதவீதத்தைப் பிடித்துவைத்திருக்கிறது சீனா. ஆட்டோமொபைல் துறையிலும் அதிரடியாகக் களம் இறங்க ஆரம்பித்துவிட்டது.

இரண்டு துறைகள்தானே என்று சாதாரணமாக இவற்றைக் கடந்துவிட முடியாது. காரணம், இன்றைய தொழில்நுட்பத்தின் வேகத்தைப் பார்க்கும்போது இன்னும் நூறு ஆண்டுகளில் நம் வாழ்க்கை முழுக்க முழுக்க கேட்ஜெட்டுகளாலும், அதி நவீன ஆட்டோமொபைல்களாலும் சூழப்பட்டிருக்கும். எரிபொருள் பயன்பாடும் வெகுவாக மாறியிருக்கும்.

ஆனால், அந்த நவீன உலகில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும் என்று யோசித்தால் எதுவுமே புலப்படவில்லை. அரசு எலெக்ட்ரிக் வாகன பயன் பாட்டுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்தாலும், எலெக்ட்ரிக் வாகன மாற்றத்துக்குப் பெரிய அளவில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் ஆதரவு இல்லை.

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் வரும்போதே எலெக்ட்ரிக் மாடலுடன்தான் வருகின்றன. எலெக்ட்ரிக் மாற்றம் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய சந்தையாக அமையப்போவது நிச்சயம். இந்தச் சந்தையைக் கபளீகரம் செய்வதற்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது சீனா.

இந்தியா சீனாவை இந்தத் துறைகளுக்காக மட்டுமல்ல, அதன் பொருளாதார கொள்கைகள், அண்டை நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகள், பொருளாதார ராஜதந்திரம் என அனைத்துக்காகவும் பின்பற்ற வேண்டியிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சைக்கிள் கூட வாங்க முடியாத சீனாவின் அடித்தட்டு மக்களால் கூட இன்று கார் வாங்க முடிகிறது. காரணம், அந்நாடு 30 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியை உலகில் எந்த நாடும் அடையவில்லை.

காலனி ஆதிக்கத்தின் அதிருப்தியில் இருந்த சீனா எந்த நாட்டோடும் ஒட்டுமில்லை உறவுமில்லை எனத் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது. ஆனால், ரஷ்யாவுடனான உறவு முறிவுக்குப் பிறகு சீனா, ரஷ்யாவுக்கு எதிராளியான அமெரிக்காவுடன் நட்புறவு கொள்ள ஆரம்பித்தது.

அப்போதைய சீனத் தலைவர்களும் தங்களின் சிந்தனைகளை பரந்த உலகை நோக்கி மாற்ற ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் மட்டுமே வர்த்தகம் செய்துகொண்டிருந்த சீனா மெல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது. இன்று உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. கம்யூனிச நாடாக அறியப்படும் சீனா, பொருளாதார சிந்தனைகளைக் காலப்போக்கில் மாற்றிக்கொண்டது.

காரணம், பொருளாதாரத்தை அரசியல் தீர்மானித்த காலம் போய், அரசியலை பொருளாதாரம் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது என்பதை சீனா விரைவிலேயே உணர்ந்துகொண்டது. சந்தை, வர்த்தகம், வளர்ச்சி இவையெல்லாம்தான் இன்றைய உலக அரசியலைத் தீர்மானிக்கின்றன.

தொழில் எங்கே, வேலைவாய்ப்பு எங்கே, வருமானம் எங்கே என்பதுதான் மக்களிடமிருந்து எழும் கேள்விகளாகவும் இருக்கின்றன. இவைதான் அரசியலில் இன்று வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. எனவேதான் பாஜக அரசும் வளர்ச்சியை மையமாகக்கொண்ட உத்திகளைக் கையில் எடுக்கிறது. ஆனால், இங்கே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது.

உலக அரங்கில் சீனா

உலக வர்த்தக மையத்தின் புள்ளிவிவரப்படி 2.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை சீனா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. (இந்தியாவின் மொத்த ஜிடிபியே இந்த அளவில்தான் இருக்கிறது) சீனாவின் ஏற்றுமதியில் 47.8% ஆசிய நாடுகளுக்கும், 22.4 சதவீதம் அமெரிக்காவுக்கும், 19.1% ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

சீனா ஏற்றுமதி செய்யும் பிரதான பொருட்கள் ஒளிபரப்பு உபகரணங்கள், கணினி, அலுவலக இயந்திரங்கள், சர்க்யூட்டுகள், டெலிபோன்கள் ஆகியவை. என்ன இறக்குமதி செய்கிறது என்று பார்த்தால் கச்சா எண்ணெய், இரும்புத்தாது, கார், தங்கம் போன்றவை. சீனா எந்த அளவுக்கு ஒரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டிலிருந்து இறக்குமதியும் செய்கிறது.

ஆனால், ஒரே வித்தியாசம், மூலப்பொருட்களையும், உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்கிறது. அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பயன்பாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாகச் சொன்னால் ஒரு நாட்டின் வளத்தை வாங்கி அதிலிருந்து பொருளைத் தயாரித்து மீண்டும் அந்த நாட்டிலேயே விற்கிறது.

இதன் மூலம் பல மடங்கு லாபத்தை மிக எளிதாக ஈட்டிவிடுவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. புரியும்படி சொன்னால், சந்தை என்பது பொருளை விற்கும் இடம் மட்டுமல்ல. உற்பத்தியும் அதோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒருநாடு தனக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் இன்னொரு நாட்டிட மிருந்து வாங்குகிறதெனில், அது நுகர்வு நாடாக மட்டுமே அறியப்படும்.

அங்கே உற்பத்தி என்பது குறைவாகவே இருக்கும். ஒருநாட்டின் உற்பத்தியை இன்னொரு நாடு முடக்க முடிந்தால், எளிதில் அந்நாட்டின் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும்.

சீனா அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நிறுவனங்களைத் தன் நாட்டில் உற்பத்தி ஆலையை அமைக்கச் செய்தது. அந்நாட்டினருக்கு கணிசமான வேலைவாய்ப்பையும் வழங்கியது. வளங்களை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது. உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது.

இப்போது பல நாடுகளின் சந்தை சீனாவின் கட்டுப்பாட்டில் வந்ததால் எளிதில் அதனால் எங்கும் எந்த முடிவுகளையும் ‘டிமாண்ட்’ செய்ய முடிகிறது. ஆனாலும், சீனாவால்­ தனது அதிகப்படியான அந்­நிய செலா­வணி கையி­ருப்­பினை தொடர்ச்­சி­யாக மறைத்து வைத்திருக்க முடியாது என்பதால் முதலீடு செய்ய திட்டமிட்டது.

அதற்காக தீட்டப்பட்ட பெருந்­திட்­டம்தான் பெல்ட் அண்ட் ரோட். 2013-ல் அறி­மு­க­ப்படுத்தப்பட்ட இத்திட்டம் கஜ­கஸ்­தானில் ஆரம்பித்தது. அப்போது இத்திட்டத்தை உலக நாடுகள் ஏளனம் செய்தன. ஆனால், இப்­போது இத்திட்டத்தில் 67 நாடு­கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் சீனாவின் விநி­யோகத் திறனை அதி­க­ரிக்கும் ஒன்­றா­கவே உள்ளது.

இதன்மூலம் சீனா தனது பன்னாட்டு உற­வு-களை மேலும் வலுப்­ப­டுத்தும் முயற்­சியில் இறங்கியிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் கடல் வழி வர்த்தகத்தில் உலகம் முழுவதும் ஆளத் தேவையான வகையில் பல்வேறு முனையங்களை உருவாக்கிவருகிறது. இவற்றில் பல அந்தந்த நாடுகள் சீனாவுக்குத் தர வேண்டிய கடனுக்கு ஈடாகக் கைப்பற்றப்பட்டவை.

ஐரோப்பிய நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து மீள சீனாவிடம் நிதி எதிர்பார்க்கின்றன. வளரும் நாடுகள் தொடர்ந்து உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முதலீட்டை தேடுகின்றன. சீனாவின் சுதந்திரமான நாணய மதிப்பு முறையை நிறுத்த சொல்லி மன்றாடுகிறது அமெரிக்கா. (வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலர் உட்பட இரட்டை நாணய முறையைப் பயன்படுத்து வதை நிறுத்தி யுவானை மட்டும் பயன்படுத்த சீனா முடிவு செய்தது.

இந்த முடிவை அமெரிக்காவால் மாற்ற முடியவில்லை. இறுதியில் சர்வதேச செலாவணி நிதியம்யுவானுக்கு அங்கீகாரம் கொடுத்ததுதான் மிச்சம்.)  சீனா மீது வர்த்தகப் போரை அறிவித்து அதிரடி காட்டிய அதிபர் ட்ர்ம்ப் இறுதியில் பின்வாங்கி சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்ததுதான் நடந்தது. ஏனெனில் வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். சீனா அல்ல.

பொதுத் துறையின் முக்கியத்துவம்

சீனாவில் முக்கியமான துறைகள் பலவும் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. முக்கியமாக வளங்கள். வளர்ச்சிக்காக தனியார் பங்களிப்பையும், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பையும் ஊக்குவித்தாலும் அதில் தன் நாட்டுக்கு எந்த பங்கமும் வராத அளவுக்கு கொள்கைகளை வகுப்பதில் சீனா கவனமாக இருந்தது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், சந்தைக்காகவும் உலக நாடுகளிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டது சீனா.

பெருமளவிலான சீனர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார்கள். உள்ளே அந்நியப் பொருளோ, அந்நிய முதலீடோ எது நுழைந்தாலும் அது சீனாவுக்கானதாகவே மாற்றப்படும். சீன சந்தையில் இன்றும் பொதுத் துறை நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், பொதுத் துறை நிறுவனம்தானே என்ற அலட்சியம் துளியும் இருக்காது. பொறுப்பும், தரமும் சரியாக இருந்தால் அரசுத் துறை நிறுவனங்களுக்குப் போட்டியாக தனியார் நிறுவனங்கள் தலைதூக்காது என்பதற்கும் சீனா சிறந்த உதாரணமாக இருக்கிறது. தன்னளவில் வலுவான நிலைப்பாடுகளை எப்போதும் கொண்டிருப்பதால்தான், 2008-ல் சர்வதேச பொருளாதார நெருக்கடியின்போது சீன அரசு பொருளாதாரத்தில் 50 ஆயிரம் கோடி டாலரை முதலீடு செய்ய முடிந்தது.

ஆனால், இந்தியா என்ன செய்கிறது?

இந்தியாவில் சீர்திருத்தங்களைப் பற்றியும் மாற்றங்களைப் பற்றியும் பேசும்போதெல்லாம் பரவலாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து ‘இந்தியா போன்ற பெரிய நாட்டில் இதெல்லாம் சாத்தியமில்லை’ என்பதே. ஆனால், இந்தியாவுக்கு இருக்கிற அத்தனை பலவீனங்களையும் கொண்ட சீனா, அவற்றையெல்லாம் பலங்களாக மாற்றியிருக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி ஜிடிபியில் வெறும் 16 சதவீதம். இதுவும் குறைந்துகொண்டே இருக்கிறது. அரசும் தொடர்ந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறதே தவிர, அதற்கு ஆதாரமான உற்பத்தி துறையை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டவே இல்லை. `மேக் இன் இந்தியா திட்டம்' எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குர்கானில் மிகப்பெரிய பரப்பளவில் பெரிய கட்டிடத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்தது.

ஆனால், இன்று அதன் அலுவலகம் ஏதோ ஒரு கட்டிடத்தில் ஒரு மாடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே, இந்திய நிறுவனங்கள் பலவற்றின் நிலை இதுதான். பொதுத் துறை நிறுவனங்களின் அழிவைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பொதுத் துறை வங்கிகள், ஐஎல் அண்ட் எஃப் எஸ், பிஎஸ்என்எல் எனத் துறை வாரியாக இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் திவாலாகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் பொருளாதார கொள்கைகளும் இந்தியாவுக்குப் பாதகம் செய்வதாக இருக்கின்றனவே தவிர, இந்தியாவுக்குப் பலனளிப்பதாக இல்லை. அந்நிய நிறுவனங்கள், அந்நிய முதலீடுகள், அந்நியப் பணம் இதற்காக இந்தியர்கள் பணிபுரிகிறோமே தவிர, இந்தியாவுக்காகப் பணிபுரியவில்லை.

இந்தியாவின் பாரம்பரிய உற்பத்தி நிறுவனங்கள்கூட சமீப காலங்களில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இறக்குமதி செய்து அப்படியே சந்தையில் விற்பனை செய்வதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

இந்தியர்களாகிய நாமும் நுகர்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோமே தவிர, உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. வெறும் நுகர்வு சந்தையாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் நாம் உற்பத்தி செய்வது ஒன்றுதான். குப்பை. ஆக்கம் நிறுத்தப்படும்போது, அழிவு ஆரம்பமாகிவிடுகின்றது.

விவசாயம் செய்யத் தெரிந்தவர்களே இந்தியாவில் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்பதை சிந்தித்தாலே இந்த அபாயத்தின் அர்த்தம் புரியும். இது எல்லா உற்பத்திக்கும் பொருந்தும். இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

சீனா போல் ஆக முடியாவிட்டாலும் நமக்கான பொருளை நாமே உற்பத்தி செய்யும் அளவுக்காவது மாற வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் நவீன பொருளாதார காலயனியாதிக்கத்தை இந்தியா சந்திக்க நேரிடலாம்.

saravanan.j@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close