[X] Close

இடம் பொருள் மனிதர் விலங்கு: இறுதி உரையாடல்


  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 10:52 am
  • அ+ அ-

-மருதன்

உறக்கம் கலைந்து கண்களைத் திறந்த சாக்ரடீஸ் தனக்கு மிக அருகில் ஓர் உருவம் அமர்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்.

‘‘யார் கிரிட்டோவா? நீ எப்படி உள்ளே வந்தாய்?”

கிரிட்டோவின் குரல் மெலிதாக ஒலித்தது. ‘‘எனக்கு இங்குள்ள சிறைக் காவலரை நன்றாகத் தெரியும். உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் அனுமதித்துவிட்டார். ஆனால்... ஆனால்... உங்களை இந்த நிலையில் பார்க்க இயலவில்லை. ஐயோ, இப்படியா சங்கிலியில் பிணைத்து வைப்பார்கள்?”

சாக்ரடீஸ் புன்னகை செய்தார். ‘‘ஒரு விசித்திரத்தைக் கவனித்தாயா? திருடுபவனைச் சங்கிலி போட்டு பிணைத்துவிட்டால் திருட்டு நிற்கும். கொலைகாரனை அடைத்து வைத்தால் கொலை நிற்கும். கொள்ளையை நிறுத்த வேண்டுமா, கொள்ளைக்காரனைச் சிறையில் போடு.

எனில், ஒரு சிந்தனையாளனை என்ன செய்வது? அவனது சிந்தனை திருட்டு, கொலை, கொள்ளையைக் காட்டிலும் ஆபத்தானதாக இருக்கும்போது என்ன செய்வது? அதே சிறை, அதே சங்கிலி. ஆனால், சங்கிலியோ சிறையோ சிந்தனையைக் கட்டுப்படுத்துவதில்லை. இது அவர்களுக்குத் தெரிவதில்லை.”

‘‘சிந்திப்பது ஒரு குற்றமா?”

‘‘என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டே அதுதான், கிரிட்டோ. எது சரி, எது தவறு என்பதைச் சட்டம் சொல்கிறது. எது பாவம், எது புண்ணியம் என்பதற்கு மதம் போதும். என்ன உடுத்த வேண்டும், என்ன உண்ண வேண்டும் என்பதற்கு நடைமுறை, மரபு இருக்கிறது.

நம் அனைவரையும் வழிநடத்த, சமூகத்தை நிர்வாகம் செய்ய மன்னர் இருக்கிறார். நீ செய்ய வேண்டியது எல்லாம் அடக்கமாக, ஒழுக்கமாக அனைத்தையும் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பது மட்டும்தான். மாட்டேன், நான் சுயமாகச் சிந்திப்பேன் என்று சொல்வாயானால் நீ சமூகத்துக்கு எதிரானவன், ஆபத்தானவன் என்று அர்த்தம்.”

தன் கையிலுள்ள சங்கிலியை அசைத்து அதிலிருந்து வரும் ஒலியை ரசித்தபடி தொடர்ந்தார் சாக்ரடீஸ்:

‘‘நான் நீதிபதியிடம் திருப்பிக் கேட்டேன். ஒவ்வொரு நாளும் புதிதாக விடிகிறது. ஒவ்வொரு நாளும் சூரியனின் புதிய கதிர்கள் என்னைத் தீண்டுகின்றன. நான் மட்டும் ஏன் பழைய சிந்தனைகளைச் சுமந்துகொண்டு திரிய வேண்டும்? மரபையும் நடைமுறையையும் கடவுளையும் நான் ஏன் கேள்விகள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்? மன்னர் தவறே இழைக்காதவரா? அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? நம் எல்லோருக்கும் சேர்த்து அவரே சிந்திப்பார் என்றால் எதற்காக அவர் ஆட்சி நடத்தும் இடத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே ஒரு மூளை இருக்கிறது? அந்த மூளை ஏன் துடிதுடிப்போடு அதையும் இதையும் சிந்திக்கிறது? மலர்களைப்போல் ஏன் அதிலிருந்து புதிய புதிய கேள்விகள் நித்தம் நித்தம் மலர்கின்றன? சும்மாயிரு, உன் கேள்விகள் அனைத்துக்கும் ஏற்கெனவே பெரிய மனிதர்கள் விடை கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அதை நான் அடக்கி வைக்க வேண்டுமா? அடங்க மறுத்தால் அந்த மூளையை ஒரு சங்கிலி போட்டுக் கட்டி இருளடைந்த ஒரு மூலையில் இப்படித் தூக்கிப் போட வேண்டுமா? இப்படி நான் கேட்டதுதான் தாமதம். ஐயோ, இந்தக் கிழவன் எப்படி எல்லாம் பேசுகிறான், பாருங்கள். உடனே இவனைக் கொல்லுங்கள் என்று எல்லா நீதிபதிகளும் அலறியதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது.”

10.jpg 

‘‘ஏன் சிரிப்பு?”

‘‘ஆயுதம் ஏந்திய நூற்றுக்கணக்கான காவலர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்றுகொண்டிருந்தார்கள். இருந்தும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு எழுபது வயது கிழவனைக் கண்டு நீதிபதிகளுக்குப் பயம். என் மீதல்ல அந்தப் பயம். என் சிந்தனை மீது. சிந்தனையின் அசலான வலு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது பார்த்தாயா கிரிட்டோ?”

‘‘உண்மைதான். ஆனால் அநீதியான சட்டத்துக்கு நீங்கள் பலியாவதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சாக்ரடீஸ். காவலரிடம் நான் பேசிவிட்டேன். என்னை உள்ளே விட்டதைப்போல் உங்களை ரகசியமாக வெளியில்விட அவர் சம்மதித்துவிட்டார். இன்றிரவே நீங்கள் சுதந்திரமாக வெளியில் வந்துவிடலாம்.”

சாக்ரடீஸ் எழுந்து நின்றார். ‘‘கிரிட்டோ, வலுவான சிந்தனை தப்பித்து ஓடாது. அநீதிக்கு எதிராக நின்று போராடத்தான் அது விரும்பும். சாக்ரடீஸ் தப்பி ஓடினார் என்பது தெரியவந்தால் ‘ஓ, அப்படியா நல்லது’ என்று மக்கள் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

சாக்ரடீஸை அரசும் சட்டமும் கொன்றொழித்துவிட்டது என்னும் செய்தி அவர்களுக்குச் சென்று சேர வேண்டும். அந்தச் செய்தி ஒரே ஒருவரை உலுக்கினாலும் போதும். சாக்ரடீஸ் அப்படி என்ன தவறு செய்துவிட்டார், அவரை ஏன் கொல்ல வேண்டும் என்னும் ஒரே ஒரு கேள்வியை அவர் கோபத்தோடு எழுப்பினால் போதும். அந்த ஒரு கேள்வி நூறு பேரைப் பற்றிக்கொள்ளும். நூறு ஆயிரமாகும். ஆயிரம் நூறாயிரமாக மாறும்.

அப்படி மாறும்போது நீதிமன்றமும் அரண்மனையும் அதிரும். மனிதனை அழிக்கலாம் ஆனால், அவன் சிந்தனையை அழிக்க முடியாது என்னும் உண்மை ஏதென்ஸைக் கடந்து உலகம் முழுக்கச் சென்றடையும். இதெல்லாம் நடக்க வேண்டுமானால் நாளை காலை நான் ஒரு கோப்பை ஹெம்லாக் அருந்தியாக வேண்டும்.”

உருண்டு வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறும் கிரிட்டோவின் கரங்களைப் பற்றிக்கொண்டார் சாக்ரடீஸ்.

‘‘எனக்கு ஒரு உதவி செய் கிரிட்டோ. ஹெம்லாக் எப்படிப்பட்ட நஞ்சு, அதை எப்படி அருந்த வேண்டும், அருந்திய பிறகு உடலுக்கு என்னாகும், என் மூளை எப்போது சிந்திப்பதை நிறுத்திக்கொள்ளும் என்னும் விவரங்களை எல்லாம் கேட்டுவந்து இப்போதே சொல். பொழுது விடிவதற்குள் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்குப் பிறகு வாய்ப்பு கிடைக்காது.”

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.comஓவியம்: லலிதாஇடம் பொருள் மனிதர் விலங்கு

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close