[X] Close

வானவில் பெண்கள்: சலூன் ஆண்களுக்கு மட்டுமல்ல


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 09:19 am
  • அ+ அ-

-கோபால்

இந்தியாவில் பெண்கள் தலைமுடியை வெட்டிக்கொள்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் மலை யேறிவருகிறது. நீண்ட கூந்தலைப் பராமரிப்பதில் இருக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காகவும் அழகுக்காகவும் நகர்ப்புறப் பெண்கள் மட்டுமல்ல; கிராமங்களிலும் பெண்கள் பலர் முடிவெட்டிக்கொள்கின்றனர்.

ஆனால், ஆண்களைப் போல் இயல்பாக நிறைவடை வதில்லை இவர்களது முடிவெட்டும் படலம். உயர்தர சலூன்களையும் பெண்களுக்கான அழகு நிலையங்களையுமே அவர்கள்  நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அதுவும் பெண்களுக்கு முடிதிருத்தும் பணிக்குப் பெண்களே நியமிக்கப்படுகிறார்கள். முடி வெட்டிக் கொள்ள சாதாரண சலூன்களுக்குச் செல்லும் பெண்கள் மிகக் குறைவு.

சலூன் கடைகளில் முடி வெட்டுதல், முகச் சவரம் செய்தல் ஆகிய பணிகளில் ஆண்களே ஈடுபடுவதால் அது ஆண்களுக்கான இடமாக மட்டுமே மாறிவிடுகிறது. சலூன் கடைகளில் பெண்கள் நுழைவதுகூட இழிவானதாகப் பார்க்கப்படுகிறது.

தங்கள் மகன்களுக்கு  முடிவெட்ட சலூன் கடைக்கு அழைத்துவரும் பெண்கள்கூட ஏதோ வரக் கூடாத இடத்துக்கு வந்துவிட்ட மாதிரி நாற்காலியில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருப்பார்கள். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பன்வாரி தோலா என்ற கிராமத்தில் ஜோதி (18), நேஹா (16) ஆகிய சகோதரிகள் இந்த நிலையை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

தந்தையின் வழியில்

நம் நாட்டில் தந்தையின் தொழிலைத் தொடர்வது மகன்களின் உரிமையாகவும் தாயுடன் வீட்டு வேலைகளையும் குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் பகிர்வது மகள்களின் கடமையாகவும் இருந்துவருகிறது. இந்த எழுதப்படாத சட்டத்தையும் நேஹாவும் ஜோதியும் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

இவர்களுடைய தந்தை துருவ் நாராயண் நடத்திவந்த சலூன் கடையை இப்போது இவர்கள் நடத்திவருகிறார்கள். 18 வயதாகும் ஜோதி, பள்ளிக் கல்வியை முடித்துவிட்டார். 16 வயதாகும் நேஹா, பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறார்.

2014-ல் உடல்நிலைப் பாதிப்பால் துருவ் தன் தொழிலைத் தொடர முடியவில்லை. அப்போது ஜோதியும் நேஹாவும் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் தடைபடாமல் இருக்கத் தந்தையின் தொழிலைக் கையிலெடுத்தார்கள்.

காலையில் பள்ளிப் படிப்பையும் மாலையில் முடிதிருத்தும் தொழிலையும் கவனித்துக்கொண்டனர். முதலில் உள்ளூர்க்காரர்களின் கிண்டலுக்கும் ஏச்சுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானார்கள். கடைக்கு வந்த ஆண்கள் சிலர் இவர்களிடம் தவறாக நடந்துகொண்டனர்.

ஆனாலும், இந்தச் சகோதரிகள் தங்கள் மன உறுதியைக் கைவிடவில்லை. ஆண்கள்போல் கிராப் வைத்துக்கொண்டும் உடை அணிந்து கொண்டும் தொழிலைத் தொடர்ந்தனர். கிராமத்தவர்களுக்கு இவர்கள் பெண்கள் என்று தெரிந்தாலும் வெளியிலிருந்து வந்தவர்கள் இவர்களை ஆண்கள் என்றே நம்பினார்கள்.

முடிதிருத்தும் தொழிலின் மூலம் இவர்களுக்குத் தினமும் சராசரியாக 400 ரூபாய் வருமானம் கிடைத்தது. இதை வைத்துத் தங்கள் தந்தையின் மருத்துவச் செலவையும் அன்றாட வீட்டுச் செலவையும் கவனித்துக் கொண்டனர். குடும்பப் பொறுப்பைச் சுமந்ததால் கிடைத்த தன்னம்பிக்கை அவர்களது தொழிலிலும் பிரதி பலித்தது. அதுவே தங்கள் ஆண் வேடத்தை அவர்கள் களைவதற்கான துணிச்சலைக் கொடுத்தது.

வாழ்வை மாற்றிய ஊடக வெளிச்சம்

ஆண்களுக்கு மட்டுமே பட்டயம் போட்டுக்கொடுக்கப்பட்டிருந்த தொழிலில் ஒரு நாள் உள்ளூர் இந்தி நாளிதழில் நேஹாவும் ஜோதியும் ஈடுபடுவதைப் பற்றிய கட்டுரை வெளியானது. அதன்மூலம் இவர்களைப் பற்றித் தெரிந்துகொண்ட மாநில அரசு இவர்களின் துணிச்சலையும் உழைப்பையும் பாராட்டிக் கவுரவித்தது.

Sachin 2.jpg 

இதையடுத்து முகச் சவரத்துக்குத் தேவையான பொருட்களின் விற்பனையில் புகழ்பெற்று விளங்கும் ஜில்லெட் நிறுவனம் இவர்களை வைத்து சில விளம்பரப் படங்களை வெளியிட்டது. அவற்றின்மூலம் இவர்களுக்குத் தேசிய கவனமும் கிடைத்தது. இவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட விளம்பரப் படத்தை 1.6 கோடிப் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

பார்வையாளர்களின் கருத்துகள் அனைத்தும் நேஹாவையும் ஜோதியையும் பாராட்டும் வகையில் அமைந்திருப்பது நம் சமூகமும் பிற்போக்கு மனநிலையிலிருந்து மாறிக்கொண்டிருப்பதற்கு சாட்சியமாக விளங்குகிறது.

தேடிவந்த பிரபலங்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தித் திரைப்பட நடிகர் ஃபர்ஹான் அக்தர் ஆகிய இருவரும் இவர்களுடைய கடைக்கு வந்து நேஹா, ஜோதியின் கைகளால் முகச் சவரம் செய்துகொண்டனர். கிரிக் கெட்டில் பல சாதனைகளை முதன்முறையாக நிகழ்த்திய பெருமைக்குரியவரான சச்சின், இந்தப் பெண்களிடம் சவரம் செய்துகொண்ட முதல் பிரபலம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

மேலும், அந்த ஒளிப்படத்தைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சச்சின், தான் இதுவரை சுயச் சவரம் மட்டுமே செய்துவந்ததாகவும் முதன்முறையாக வேறொரு நபரிடம் சவரம் செய்துகொண்டதாகவும் அறிவித்தார். அதோடு ஜில்லெட் நிறுவனம் சார்பில் இந்த இரண்டு பெண்களது உயர் கல்விக்கும் தொழில் முன்னேற்றத்துக்கும் தேவையான நிதியுதவியையும் வழங்கினார்.

பெண்கள் பல்வேறு துறைகளில் நுழைந்து சாதனை படைத்துவருகிறார்கள். இருந்தாலும், குறிப்பிட்ட சில தொழில்களில் அவர்கள் நுழைவதைச் சமூகம் தடுக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் எதிலும் சிறந்து விளங்குவார்கள். எப்பேர்பட்ட சாதனை யையும் நிகழ்த்துவார்கள் என்பதை நிரூபிப்பது ஜோதி, நேஹா போன்ற எளிய பெண்களின் துணிச்சலும் மனவலிமையும்தாம்.

அவர்கள் பள்ளி செல்லும் வயதிலேயே இவற்றைப் பெற்றிருந்தார்கள் என்பது இவர்களின் சாதனைக் கதையை மேலும் சிறப்பானதாக்குகிறது. இவர்களின் இந்த முன்னெடுப்பு முடி திருத்தும் கடைகள் ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களும் அங்கே முடிதிருத்திக்கொள்ளலாம் என்ற மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close