[X] Close

நட்சத்திர நிழல்கள் 11: ஏந்திழை சின்னத்தாயி


11

  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 09:19 am
  • அ+ அ-

-செல்லப்பா

தமிழில் எத்தனையோ கிராமத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், பெரும் பாலானவற்றில் கிராமத்தின் வாழ்க்கை அப்படியே பதிவானதில்லை. திரைப்படக் கூறுகள் அதிகமாக இடம்பெற்றுவிடும்.

அப்படியான திரைப்படங்களில் கிராமம் இருக்கும்; ஆனால், நாம் பார்த்த வாழ்க்கை அதுவாக இருக்காது. தெற்கத்திய சிற்றூர் ஒன்றின் மனிதர்களது வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவுசெய்த மிகச் சில படங்களில் ஒன்று ‘சின்னத்தாயி’ (1992).

ஆறுமுக மங்கலத்துச் சுடலைமாட சாமியின் அருள் வந்து ஆடும் சாமியாடியின் மகன் பொன்ராசுவுக்கும் ஊரின் கடைக்கோடியில் வாழும், பாவப்பட்ட ஜென்மமாக ஊர் கருதும் ராசம்மாவின் மகள் சின்னத்தாயிக்குமான காதல்தான் படத்தின் தூல நரம்பு.

அந்த நரம்பில் எந்த நாளும் வாடிப்போகாத மலர்களைக் கோத்து அழகான மாலையாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் S.கணேசராஜ். வாலியின் வரிகளில் உருவான  ‘கோட்டையை விட்டு’, ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ போன்ற பாடல்கள் வழியாக மட்டுமே அதிகமாக அறியப்பட்டிருக்கும் திரைப்படம் இது. இளையராஜாவின் இசையும் பாடல்களும் மட்டுமல்ல; அதன் உருவாக்கமும் தனிச் சிறப்பு வாய்ந்தது. கிராமத்தின் அரிதான கணங்களையும் மனத்தால் மட்டுமே பார்க்க முடிந்த துணுக்குச் சம்பவங்களையும் இணைத்துக் காட்சிப்படுத்தியிருந்ததும் இதன் சிறப்புகளில் சேரும்.

ஜீவனான வாழ்க்கை

ஒரு நல்ல நாளு திங்க நாளு இல்லாமல் எல்லா நாட்களையும் காவு கேட்கும் குடும்ப உறவுச் சிக்கல்களின் அடிநாதமான தாம்பத்தியத்தின் தடுமாற்றம், சாதிய வாழ்வின் சதிராட்டம், பக்தி என்னும் சரக்கில் மதிமயங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்க்கை ஆகியவை அதில் ரசனையான சினிமாவுக்கு வாக்கப்பட்டிருந்தன. சினிமாவுக்கான கூறும் சராசரி வாழ்க்கையின் ஜீவனும் சரியான விகிதத்தில் கலந்திருந்த படம் ‘சின்னத்தாயி’.

இயக்குநர் கணேசராஜின் முதல் படம். ‘அவள் அப்படித்தான்’ படத்துக்காக நினைவுகூரப்படும் ருத்ரய்யா போல இந்த ஒரு படத்தின் காரணமாகவே தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டியவர் அவர். இது போக இன்னுமொரு படத்தை இயக்கியிருக்கிறார்.

அது, ‘மாமியார் வீடு’. இரண்டு படங்களை இயக்கிவிட்டு இந்த உலகத்திடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஆனால், வெள்ளித்திரையில் அவரது பெயரைப் பொன்னெழுத்தில் எழுதியிருக்கும் ‘சின்னத்தாயி’, அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

ஆண்களின் அடங்காக் காமத்தாலும் தீராக் கோபத்தாலும் வேட்டையாடப்படும் பெண்களின் துயரமிகு வாழ்வைச் சொல்லும் படம் இது. படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் சின்னத்தாயி. பத்மஸ்ரீ என்னும் நடிகை இந்த வேடத்தை ஏற்றிருந்தார். சின்னத்தாயின் தாய்க்குக் கணவனே இல்லை. சின்னத்தாயின் தந்தை யாரென்பது அவளுக்குத் தெரியாது.

அதனாலேயே ஊராரின் பழிச் சொல்லுக்கு ஆளாகியவள் ராசம்மா. பாரதி பாடலைப் பாடிய பாகவதனிடம் மனத்தைப் பறிகொடுத்து, கருவை வயிற்றில் வாங்கிக்கொண்ட புண்ணியவதி அவள். குழந்தையைக் கொடுத்த காதலனோ அவளை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டுப் பாதியிலேயே சென்றுவிட்டான்.

அவளுக்கு ஆதரவு தந்த சாமுண்டியோ வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாக அவளைப் பயன்படுத்திக்கொண்டான். அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு வீட்டை அமர்த்தி அதில் ராசம்மாவையும் சின்னத்தாயியையும் தங்கவைத்துக்கொண்டான். ராசம்மாவைக் கட்டிலில் கொஞ்சத் தெரிந்த அவனுக்கு அவளைக் கண்ணியமாக நடத்தத் தெரியவில்லை.

19.jpg 

அழுத்தமான உறவு

ஊரிலுள்ள பெண்களின் கழுத்தில் தொங்குவதைப் போன்ற கயிறு மட்டும் ராசம்மாவின் கழுத்தில் கிடந்திருந்தால் அவள் ஊர் வாயில் விழுந்திருக்க மாட்டாள். பின்வாசலில் வந்து உதவிபெற்றுச் செல்லும் பெண்கள்கூட முன்வாசலில் வந்து அவளை வசைபாடும் வாழ்க்கை அவளுக்கு அமைந்திருக்காது. தனது வாழ்க்கை சீரழிந்த போதும் தன் மகளின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைந்துவிட வேண்டும் என்பதால் சின்னத்தாயியைக் கறிவேப்பிலைக் கொத்துபோல் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள்.

பருவத்தின் பூங்காற்று சின்னத்தாயையும் பொன்ராசுவையும் ஒருசேரத் தழுவியது. அமைதியற்ற வீடு அவளுக்குத் தராத மகிழ்ச்சியை பொன்ராசுவின் நேசம் தந்தது. எல்லை மீறும் கிளைகளை வெட்டிவிடலாம்.

நிலத்தடி நீர் எல்லை தாண்டாமல் எப்படித் தடுப்பது? மனம் ரணப்பட்ட ஒரு பொழுதில் எமனைச் சந்திக்க வந்த சின்னத்தாயை மன்மதனின் அம்பு தாக்கியது. மனிதர்கள் இல்லாத அந்தப் பொழுதில் பொன்ராசையும் சின்னத்தாயையும் அப்போது பெய்த மழை ஒன்றுசேர்த்தது. மழையைச் சாட்சியாகக்கொண்ட அந்த உறவு அழுத்தமானது என்பது அறுபது நாட்களுக்குப் பிறகு புரிந்தது.

சுடலைமாட சாமியின் அருள் வந்து வேட்டைக்குப் போகும் வீரமுத்து நாயக்கரின் எதிரே பெண்கள் வந்தால் சாமி கொன்றுவிடும் என்பது நம்பிக்கை. சில உயிர்களைச் சாமி காவு வாங்கியிருக்கிறது என்பதற்குச் சான்றுண்டு.

எனவே, பெண்கள் சாமிக்கு எதிரே வரப் பயப்படுவார்கள் ஆனால், வேட்டைக்குவந்த சாமியின் எதிரே தன் மகளின் வாழ்க்கைக்காகத் துணிச்சலுடன் போய் நீதி கேட்கிறாள் ராசம்மா.

தன் மகனின் வாரிசு ராசம்மா மகளின் வயிற்றில் வளரும் சேதி கேட்டு விக்கித்துப்போய் நிற்கிறார் வீரமுத்து நாயக்கர். சுடலைமாட சாமியின் அருளை மீறி அவரைத் தாக்கிவிடுகிறது யதார்த்தம். பாரம் தாங்காமல் வண்டி குடைசாய்வது போல் மனப் பாரம் தாங்காமல் நிலைதடுமாறி வீழ்கிறார் குறிசொல்லும் பொழுதில்.

மனிதனான சாமி

பட்டணத்தில் படித்து குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய மகன் காதலில் வீழ்ந்து கழுத்தறுத்துவிட்டானே எனக் குமைகிறார். சின்னத்தாயி விவகாரத்தை மகனிடம் மறைத்து அவனைத் தந்திரமாகப் படிக்க அனுப்பிவிடுகிறார். ராசம்மாவைத் தேடி வரும் சாமுண்டியை வளர்ந்து நிற்கும் சின்னத்தாயி உறுத்துகிறாள்.

விபரீதத்தை உணர்ந்த ராசம்மா சாமுண்டியைத் தடுக்கிறாள். ஆனால், அறிவற்ற காமம் முறையற்றுப் பாய முற்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ராசம்மாவின் உயிர் பிரிகிறது. சாமுண்டிக்காக உடலைத் தந்த ராசம்மா சின்னத்தாயிக்காக உயிரையும் தந்துவிட்டாள். சாமியாடிக்குத் தப்பிய அவள் சாதாரணக் கத்திக்கு மடிந்துவிடுகிறாள்.

ஊரே ஒன்றுகூடி ராசம்மாவின் மரணத்தைச் சட்டத்தின் முன் மறைத்து சாமுண்டியைக் காப்பாற்றிவிடுகிறது. ஆனால், சின்னத்தாயி சட்டத்தின் கதவுகளைத் தட்டி சாமுண்டிக்குத் தண்டனை பெற்றுத் தந்துவிடுகிறாள். தனி வீட்டிலிருந்து குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள்.

இப்போது பொன்ராசு மீண்டும் கிராமத்துக்கு வருகிறான்; தந்தை சாமியாட முடியாத சூழலில் சாமியாடியாக வருகிறான். வேட்டைக்கு வரும் சுடலைமாட சாமியாக வருகிறான். எதிரே குழந்தையும் கையுமாக வந்து நிற்கிறாள் சின்னத்தாயி. தெய்வமாக ஊருக்குள் போகவா மனிதனாக மாறி ஊரை விட்டுப் போகவா என்று முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் பொன்ராசு சரியான முடிவெடுக்கிறான்.

சின்னத்தாயுடன் ஊரைவிட்டு வெளியேறுகிறான். வேட்டைக்குச் சென்ற சாமி மனிதனான கதை தெரியாமல் சாமிக்காக அந்த ஊர் காத்திருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட மனிதர் மீது பரிவு கொள்வதும் விலக்கிவைக்கப்பட்ட மாந்தர் மீது கரிசனம் கொள்வதுமே கலைக்கு அழகு. அந்த வகையில் சின்னத்தாயி கலையின் அழகு மகள்.

(நிழல்கள் வளரும்),

கட்டுரையாளரைத்

தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close