[X] Close

பெண்கள் 360: எல்லைகளைக் கடந்த பெண்


360

  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 09:19 am
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

“அடங்க மறுக்கும் இயல்பைப் பிறப்பிலேயே கொண்டவள் நான். இந்த உலகில் அனைத்தையும் அறியும் நோக்கில் எனது எல்லைகளைக் கடந்தவள் நான்”

                                                          - சூபியா கமால்

எழுத்தாளர், கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர், பெண் உரிமைப் போராளி எனப் பன்முகங்களைக் கொண்டவர் சூபியா கமால். வங்கதேசக் கலாச்சாரத்துக்காக அச்சமின்றி குரல்கொடுத்த பேராளுமை அவர். வங்கதேசத்தில் பெண் உரிமைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சூபியா, செல்வச் செழிப்புமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார்.

உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்கள் அனுப்பப்படுவதும் திருமணத்துக்காகப் பெண்கள் வீட்டில் முடக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்ததால், அவருடைய சகோதரருக்கு வழங்கப்பட்ட கல்வி சூபியாவுக்கு வழங்கப்படவில்லை. அரபு மொழியையும் பாரசீக மொழியையும் கற்றுக்கொள்ள மட்டும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வீட்டு வேலை செய்யும் பெண்களிடமிருந்து வங்க மொழியைக் கற்றுக்கொண்டார். பேசுவதற்கு மட்டுமல்லாமல், எழுதவும் கற்றுக்கொண்டு சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளராக அவர் மாறியது வரலாறு. தன் அம்மாவின் உந்துதலால் மாமாவின் நூலகத்தில் வாசித்துத் தனக்குத் தானே கல்வியை வழங்கிக்கொண்டார்.

அவருடைய முதல் கதையான சைனிக் பாது (சிப்பாயின் மனைவி) வெளியானபோது, அவருக்கு 14 வயது. எழுத்து அளித்த உவகையின் காரணமாகத் தொடர்ந்து எழுதினார். அவரது எழுத்திலிருந்த வசீகரமும் கூர்மையும் சிந்தனைத் தெளிவும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றுத்தந்தது.

‘பேகம்’ எனும் பெண்கள் வார இதழின் முதல் பெண் ஆசிரியராக 1947-ல் பொறுப்பேற்றார். மொழிக்காகவும் கலாச்சாரத்துக்காவும் பெண் உரிமைக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்த அவரது 108-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூன் 20 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

8.jpg 

நதியை உயிர்ப்பித்த பெண்கள்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன் வேலூர் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது நாகநதி ஆறு. நீர்வரத்து இல்லாததால் மெல்ல மெல்ல வறண்ட இந்த ஆறு கடந்த 15 ஆண்டுகளாக முற்றிலும் காணாமல்போனது.

இதன் விளைவாகப் பல கிராமங்களில் மக்கள் குடிக்கவும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். இதனால் நீர்நிலைகளைப் பாதுகாக்க எண்ணிய உள்ளூர் தன்னார்வலர்களும் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பெண்களும் ஒன்றிணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து நாகநதியை மீண்டும் உயிர்பெறச் செய்துள்ளனர்.

இவர்களின் கடும் முயற்சியால் சுமார் 3,500 கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. பெண்கள் ஒன்றுகூடி தற்போது இப்பகுதியைப் பசுமையாக்கி உள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள், மழைநீர் வடிகால்கள் போன்றவற்றையும் அமைத்துள்ளனர்.

தற்போது இந்த ஆறு மீண்டும் உயிர்பெற்று ஓடத் தொடங்கியதுடன் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நல்ல முறையில் மழை பெய்தால் நாகநதியில் முழு அளவுக்கு நீர் பாயக்கூடும்.

9.jpg 

அது அவனது உடலல்ல, அவளது உடல்

அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அலபாமா மாகாணமும் கருக்கலைப்புக்குச் சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அலபாமா மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் பெண்கள்.

 ஆனால், சட்டம் இயற்றும் நிலையில் இருக்கும் 85 சதவீதத்தினர் ஆண்கள். 35 இடங்கள் கொண்ட அலபாமாவின் செனட் சபையில் நான்கு பேர் மட்டுமே பெண்கள். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு செனட் சபைக்கு வெளியே திரண்டிருந்த பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அங்கிருந்த டெலனே கர்லிங்கேம் கூறுகையில், “மனித உரிமைகளைக் காப்பது குறித்து இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இவர்களின் தேவையெல்லாம் பெண்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே” என்றார். “தங்களது உடலில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பெண்களே முடிவு செய்யட்டும். அது அவனது உடல் அல்ல; அவளது உடல்” என்று உணர்ச்சிகர குரலில் கரோல் என்பவர் கூறினார்.

Capture.JPG 

மாதவிடாய்க் குப்பிகளை வழங்கிய கேரளா

கேரளத்தில் கடந்த ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது ஆலப்புழை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கினர். அப்போது சானிட்டரி நாப்கின்களைக் கையாளுவதில் சிரமம் ஏற்பட்டதால், நாப்கின்களுக்குப் பதிலாக மாதவிடாய்க் குப்பி (menstrual cups) வழங்கப்பட்டது.

அதைப் பயன்படுத்திய பெண்கள் பலரும் அதைக் கையாள்வது சுலபமாகவும் சவுகரியமாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் 5 ஆயிரம் மாதவிடாய்க் குப்பிகளைப் பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அமைச்சர் தாமஸ் கடந்த சனிக்கிழமை ஆலப்புழையில் தொடங்கி வைத்தார். இதைப் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மாதவிடாய்க் குப்பிகளைச் சரியான முறையில் பொருத்திப் பழகிக்கொண்டால் எந்த பயமும் இல்லை. ஒரு முறை பயன்படுத்திய பிறகு வெந்நீரில் கொதிக்கவைத்த பிறகு பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் இல்லாதது. இவற்றை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.

11.jpg 

நிலவை வசப்படுத்தும் பெண்கள்

ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் அதிவேகத்தில் நடந்துவருகின்றன. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை.

அந்த வேலையில் இந்தியா ஈடுபட்டுள்ளதால் உலக நாடுகளின் மொத்தக் கவனமும் சந்திரயான் 2 விண்கலத்தின் மீது விழுந்துள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தை உருவாக்கும் பொறுப்பு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளான வனிதா முத்தையா, ரித்து கரிதால் ஆகிய இருவர்தாம் அந்தப் பெரும் பொறுப்பை முன்னெடுத்துச் செல்லும் இரண்டு பெண்கள்.

வனிதா முத்தையா, சந்திரயான் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். மற்றொரு விஞ்ஞானியான ரித்து கரிதால், சந்திரயான் திட்டத்தின் துணைச் செயல்பாட்டு இயக்குநராக உள்ளார். விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது இவரின் பணி. இவர் மங்கள்யான் விண்கலத் தயாரிப்பிலும் பணியாற்றியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close