[X] Close

அந்த நாள் 37: அபூர்வ மாமன்னர்


37

  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 10:51 am
  • அ+ அ-

-ஆதி வள்ளியப்பன்

முகலாய ஆட்சியின் மாட்சிமை மிகுந்த மன்னரான அக்பரைப் பற்றி சில முக்கிய அம்சங்கள்:

# தன் தாத்தா பாபரைப் போலவே பதின் வயதுகளில் (13) முகலாய ஆட்சிப் பொறுப்பை அக்பர் ஏற்றபோது, பிற்காலத்தில் அவர் மாமன்னர் என்று போற்றப்படுவார் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

தன் 50 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அந்தப் பெருமையை அக்பர் பெற்றார். அத்துடன் முகலாயப் பேரரசையும் வலுப்படுத்தினார்.

# அவருடைய முழுப் பெயர் ஜலால் உத் தின் முகம்மது அக்பர். அக்பர் என்ற சொல்லுக்கு மாட்சிமை பொருந்தியவர், எல்லாவற்றையும்விட உயர்ந்தவர் என்று பொருள்.

அதன் காரணமாகத்தான் மசூதிகளில் தொழுகையின்போது ‘அல்லாஹு அக்பர் - கடவுளே அனைத்திலும் உயர்ந்தவர்’ என்று பாடப்படுகிறது.

# தனது நம்பிக்கைக்குரிய தளபதி பைரம் கானை அக்பரின் பாதுகாவலராக ஹுமாயுன் நியமித்திருந்தார். தொடக்க கால அக்பரை வளர்த்தெடுத்தவர் பைரம் கான். ரேவாரைச் சேர்ந்த ஹேமு டெல்லியைக் கைப்பற்றியிருந்தார்.

பொ.ஆ. 1556-ல் இரண்டாம் பானிபட் போரில் ஹேமுவை எதிர்கொண்ட பைரம் கான், அக்பரின் படைகள் வெற்றிபெற்றன. தாத்தா பாபரைப் போலவே பானிபட் போர்தான் அக்பரின் ஆட்சி நிலைபெற முதல் படியாய் அமைந்தது.

# தன் வாழ்நாளில் எந்தப் போரிலும் தோற்காதவராக அக்பர் இருந்தார். பொ.ஆ. 1605-ல் அக்பர் காலமானபோது, கிழக்கில் வங்கத்திலிருந்து மேற்கில் காபூல்வரை, வடக்கில் காஷ்மீரிலிருந்து தெற்கில் தக்காணம்வரை அவருடைய ஆட்சிப் பகுதியாக இருந்தது.

# தன் மதத்தைச் சாராதவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நாட்டை ஆண்ட அக்பர் சகிப்புத்தன்மை மிக்கவராகவும், மனிதத்தன்மை மிக்கவராகவும் திகழ்ந்தார். அவரது காலத்தில் முக்கிய அரசு, ராணுவப் பதவிகள் இந்துக்களுக்கு வழங்கப்பட்டன.

# இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற ஜிஸ்யா என்ற வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரியை அக்பர் விலக்கினார்.

# ஆம்பரின் அரசர் ராஜ் பிஹாரி மாலின் மகளான ராஜபுத்திர இளவரசியைத் தன் 20 வயதுகளில் அக்பர் மணந்தார். அதற்கு முன்னரும் இஸ்லாமிய மன்னர்கள் இந்து இளவரசிகளை மணந்திருக்கிறார்கள் என்றாலும், மணமான பிறகு அவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவார்கள்.

ஆனால், அக்பர் அப்படிச் செய்யவில்லை. ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளை இந்து அரசிகளுடன் அக்பர் கொண்டாடினார். இந்த அரசியின் மகனான சலிம், பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்டு, அரசரானபோது ஜஹாங்கிர் என்றழைக்கப்பட்டார்.

# சூஃபி மறையாளர் ஷேக் சலிம் சிஷ்டி வாழ்ந்த பகுதியை ஒட்டியே ஃபதேபூர் சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிர்மாணித்தார். ஷேக் சலிம் சிஷ்டியின் மீது அவருக்குப் பெரும் மதிப்பிருந்தது. 9.jpg

தனது முதல் மகனுக்கு சலிம் என்றே பெயரிட்டார். இன்றைக்கும் வட இந்தியாவில் புகழ்பெற்ற சூஃபி மறையாளராக இருக்கும் சிஷ்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மதிக்கும் மறையாளர்.

# பல மதத்தினர் வாழும் நாட்டை ஆளும்போது, அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதில் அக்பர் திட்டவட்டமாக இருந்தார்.

அதனால், அனைத்து மக்களின் மதிப்பையும் அவர் பெற்றிருந்தார். மகாபாரதம், ராமாயணம் போன்ற சம்ஸ்கிருத காவியங்களை பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப் பணித்தார்.

# ‘தீன் இலாஹி’ என்ற புதிய மதத்தை அவர் தோற்றுவித்தார். ஆனால் பீர்பால், அபுல் பஸல் போன்ற சிலர் மட்டுமே அந்த மதத்தைப் பின்பற்றினார்கள். இவர்கள் இருவரும் அவருடைய நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தார்கள். அந்த மதத்தைப் பின்பற்ற வேண்டுமென யாரையும் அக்பர் வற்புறுத்தாததால், அவருடனேயே அது மடிந்தது.

# அக்பருடைய அரசவையின் பெருமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது நவரத்தினங்கள் எனப்பட்ட சிறந்த அமைச்சர்கள். பதிவுகளின்படி வரலாற்று ஆய்வாளர் அபுல் பஸல், கவிஞர்கள் ஃபைஸி, அப்துர் ரஹிம், பீர்பால், ராஜபுத்திரத் தளபதி மான் சிங், நிதி அமைச்சர் தோடர் மால், (இந்த மூவரும் ராஜபுத்திரர்கள்), பாடகர்கள் தான்சேன், பஸ் பகதுர் ஆகியோர் அந்த ஒன்பது பேரில் அடங்குவார்கள்.

# அக்பரின் ஆட்சிக் காலம் குறித்து ‘அய்ன் இ அக்பரி’, ‘அக்பர்நாமா’ ஆகிய புத்தகங்களை அரசவை வரலாற்றாளர் அபுல் ஃபஸல் எழுதியுள்ளார்.

‘அக்பர் நாமா’ அழகான ஓவியங்கள் அடங்கியது. அக்பர் ஆட்சிக் காலம் குறித்து போர்த்துக்கீசிய சேசு சபை பாதிரியாரான அந்தோணி மான்செரேட், ஆங்கிலேயப் பயணி ரால்ஃப் பிட்ச் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.

# அக்பர் பிறந்தபோது முகலாய வரலாற்றாளர் ஹைதர் இப்படிச் சொன்னார். “சன்னி மதப் பிரிவுத் தந்தைக்கும் ஷியா மதப் பிரிவுத் தாய்க்கும் சூஃபி மதம் செழித்த இந்துஸ்தானில் ஒரு இந்து வீட்டில் பிறந்தவர் அக்பர்”. தன் பிறப்பு மட்டுமல்ல ஆட்சிக் காலமும் சகலருக்குமானது என்பதை நிரூபித்து மறைந்தார் அக்பர்.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close