[X] Close

இனி எல்லாம் நலமே 09: மார்பகத்தால் உருவாகும் மன உளைச்சல்


09

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 14:16 pm
  • அ+ அ-

-அமுதா ஹரி

ஒரு அம்மா அவருடைய 18 வயதுப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்திருந்தார். மார்பகங்களைத் தொட்டுப் பார்த்தால் ஒரு கட்டி உருண்டு கொண்டே இருந்தது. அந்தப் பெண்ணின் அம்மா பயந்துபோய், “இவ்வளவு சின்ன வயசுல கட்டி வருமா? கேன்சராக இருக்குமோ?” என்று பதறியபடி கேட்டார். கல்யாணம் ஆனால் ஏதாவது பிரச்சினை வருமோ என்றெல்லாம் பயந்தார்.

அவரிடம், “இது சாதாரண கட்டிதான். பயப்படத் தேவையில்லை” என்றேன். அந்தக் கட்டிக்கு ‘Breast Mouse' என்று பெயர். கைபட்டால் உருண்டுகொண்டே இருக் கும். பிறகு அந்தக் கட்டியை ஊசியால் பரிசோதித் தோம். எதற்கும் இருக்கட்டும் என அந்தக் கட்டியை முழுமையாக அகற்றி பயாப்சிக்கு அனுப்பினோம். கட்டியை எடுத்தது தெரியாத அளவுக்கு ஆபரேஷன் செய்தோம்.

ஒரு கல்லூரி மாணவி. அவருக்கு மார்பகம் வளர்ச்சியின்றி தட்டையாக இருந்தது. விடுதியில் உடன் படிக்கும் மாணவிகள் அதைச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கி றார்கள். அந்தப் பெண்ணும் ஹார்மோன் ஊசிகள் எல்லாம் போட்டுப் பார்த்திருக்கிறார். அப்போதும் எதுவும் நடக்கவில்லை. மாபெரும் மன அழுத்தத்துக்கு ஆளானார்.

அதற்குப் பிறகு அவருக்கு கவுன்சலிங் கொடுத்துப் புரியவைத்தோம். உருண்டு திரண்டு இல்லாவிட்டாலும் அவரது மார்பகங்கள் அவற்றுக்குரிய வேலையைச் செய்யும். குழந்தைக்குப் பால் கொடுக்க முடியும் என்றெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகே மன அழுத்தத்தில் இருந்து அவர் வெளியே வந்தார்.

மார்பகங்கள் எப்போது வளரத்தொடங்கும்?

முதல் மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கு வதற்கு முன்பாகவே, மார்பகங்களின் வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. ஹார்மோன்களின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்போது, பருவ வளர்ச்சியும் தூண்டப்படுகிறது.

மரபு, உடல் எடை, ஊட்டச்சத்து போன்ற வற்றைச் சார்ந்து ஒருவருக்கு பருவ வயது வளர்ச்சியும் மார்பக வளர்ச்சியும் தொடங்குகின்றன. சராசரியாகப் பெண்களுக்குப் பத்து வயதில் மார்பக வளர்ச்சி தொடங்கும். இது ஒவ்வொருவருக்கும் ஓரிரண்டு ஆண்டுகள் முன்னும் பின்னுமாக அமையலாம். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மார்பகங்கள் முழுமையான வளர்ச்சியை எய்துகின்றன. மார்பக வளர்ச்சி விரைவில் தொடங்கிவிட்டால் மார்பகங்கள் நீண்ட காலம் வளர்ந்து பெரியதாகிவிடும் என்று நினைத்தால் அது தவறு.

ஒரே வகுப்பில் படிக்கக்கூடிய மாணவி களில் முன்னதாக மார்பக வளர்ச்சி தொடங்கிவிட்ட பெண்ணுக்கும் அது கவலை அளிக்கலாம். கடைசியாக வளர ஆரம்பிப்பவர்களுக்கும் கவலை வரலாம். எதுவாக இருந்தாலும் இது பற்றிய கவலை களையோ சந்தேகங்களையோ நம்பிக்கைக் குரிய பெரியவர்களிடமோ மருத்துவரிடமோ பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.

மார்பகங்கள் என்பவை பால் சுரப்பு நாளங்களைக் கொண்டவை. இந்த நாளங்களைச் சுற்றி கொழுப்புத் திசுக்கள் சூழ்ந்துள்ளன. மார்புக் காம்பின் அடிப்பகுதியில் சிறியதும் பெரியது மான எண்ணற்ற கிளை நாளங்கள் பரவிக் கிடக்கின்றன. இவற்றைச் சுற்றி மார்பகத் தசை வளர்கிறது.

சிலருக்கு மார்பகங்கள் சிறியதாக இருக்கலாம். சிலருக்குப் பெரியதாக இருக்கலாம். மார்பகங்களின் அளவு பெரும்பாலும் மரபு சார்ந்தே அமைகிறது.

மார்பகங்கள் என்பதைப் பெரும்பாலும் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கிறார்களே தவிர, அதன் உண்மையான வேலை, குழந்தை களுக்குத் தாய்ப்பால் தர உதவுவதுதான். மார்பகங்கள் சிறியதாக இருந்தால் பால் குறைவாகத்தான் சுரக்குமோ என்று சிலருக்கு சந்தேகம் வரக்கூடும். மார்பகங்களின் அளவுக்கும் பால் சுரத்தலின் அளவுக்கும் சம்பந்தம் இல்லை.

marbagam.jpg 

கவலை வேண்டாம்

அதேபோல், இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்காது; சிறிய அளவில் வித்தியாசம் இருக்கலாம். இது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

தட்டையான மார்பகம் இருந்தால், தான் கவர்ச்சியில்லாதவர் என்று பலர் நினைக்கி றார்கள். இந்த மனோபாவத்திலிருந்து வெளியேவர வேண்டும். ஹார்மோன் ஊசிகளைப் போடுவதோ ஆபரேஷன் செய்துகொள்வதோ சரியான தீர்வல்ல. அது பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம். நம் உடலை நாம் நேசிக்கப் பழக வேண்டும்.

என்னதான் சொன்னாலும், நான் தொடர்ந்து அது பற்றிக் கவலைப்படுகிறேன் என்பவர்கள், ‘Padded Bra’ என்று சொல்லக்கூடிய உள்ளாடைகளை வாங்கி அணியலாம். சிலவகையான உடற்பயிற்சிகள் மிகச் சிறிய அளவில் மார்பகத் தோற்றப் பொலிவுக்கு உதவலாம். ஆனால், இவற்றையெல்லாம் விடச் சிறந்த தீர்வு, நம் உடலை அது எப்படி இருந்தாலும் நாம் நேசிப்பதுதான்.

தட்டையான மார்பகங்களைப் பிரச்சினைக்குரிய விஷயமாகப் பார்ப்பது போல், சிலருக்குப் பெரிய மார்பகங்கள் பிரச்சினை யாக இருக்கிறது. மார்பகம் தொய்ந்துவிட்டால் சிலருக்கு முதுகுவலி வரலாம். நிமிர்ந்து நின்றால் மார்பகங்கள் பெரிதாகத் தெரியும் என்று சிலர் கூன் போடுவார்கள். இதுவும், கனத்த மார்பகங்களும் சேர்ந்து நிரந்தர கூன் ஆகலாம். இப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

marbagam 2.jpg

நான்கு பிரச்சினைகள்

மார்பகங்கள் தொடர்பாக நான்கு விதமான பிரச்சினைகள் வரலாம்:

மார்பகங்களில் வலி வரும்; கட்டி இருக்காது. இது பெரும்பாலும் வளர்ச்சியை யொட்டி வரக்கூடிய வலியாக இருக்கலாம். மருத்துவரிடம் தக்க ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம். சில நேரம் மார்பகங்கள் முழுக்கத் தடித்து இருக்கலாம். இதுவும் பெரிய பிரச்சினை இல்லை. அசௌகரியமாக உணர்ந் தால் மருத்துவரின் உதவியை நாடலாம். 

சின்ன கட்டி வரலாம். புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இளம்பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி வருவது அபூர்வமானதென்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட கட்டிக்கு ‘Fibroa denoma’ என்று பெயர். இது சுரப்பியிலிருந்தும் நரம்புத் திசுக்களில் இருந்தும் உருவாகிறது.

இத்தகைய கட்டிகள் சில நேரம் தானாகவே கரைந்துவிடும். தொடர்ந்து  இருந்தால், மருத்துவர் சிறு ஊசி மூலம், கட்டி இருக்கும் இடத்தில் இருந்து மாதிரி செல்களை எடுத்துப் பரிசோதிப்பார்கள். பிறகு கட்டி முழுவதையுமே எடுத்து பயாப்சிக்கு அனுப்பி புற்றுநோய் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். கடைசியாக, மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம்.

தொடர்ந்து மார்பகங்களைச் சுய பரிசோதனை செய்து வர வேண்டும். சந்தேகம் எதுவும் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

மார்பகங்களை எப்படி சுய பரிசோதனை செய்துகொள்வது?

கண்ணாடி முன் நின்று நம் கையின் விரல் பகுதியைப் பயன்படுத்தாமல், உள்ளங்கையைப் பயன்படுத்தி வட்ட வடிவ சுழற்சியாகத் தடவிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது எந்த சந்தேகம் தோன்றினாலும் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். விரல்களால் பார்க்கும்போது சாதாரண மார்பகத் திசுக்கள்கூட கட்டி மாதிரி தோன்றலாம். ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினையைக் கண்டுபிடித்து விட்டால் நல்லது. எனவே, மார்பக சுய பரிசோதனை என்பது சுலபமான, மிகுந்த பலனைத் தரக்கூடிய தீர்வு.


(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close