[X] Close

பெண்கள் 360: முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்


360

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 14:16 pm
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்

மனித மனத்தின் அனைத்து சூட்சுமங்களையும் அறிந்து தேர்ந்த மாபெரும் சிந்தனைவாதி இலினா. இன்றும் அவரே ஆகப்பெரும் தத்துவஞானியாகவும் இறையியலாளராகவும் கருதப்படுகிறார். இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் 1646-ல் அவர் பிறந்தார். உலகிலேயே முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் அவர்.

ஏழு வயதாக இருந்தபோதே அவருள் இருந்த மேதைமையை அவருடைய பெற்றோர் கண்டுகொண்டனர். கிரேக்கமும் லத்தீனும் அவருக்குப் போதிக்கப்பட்டன. தனது சுய முனைப்பினால் ஹீப்ரு, ஸ்பானிஷ், பிரெஞ்சு, அரபி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வயலின் வாசிப்பதை மெச்சத்தக்க வகையில் மேமையைக்கொண்டியிருந்தார்.

கணிதம், வானியல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருந்தபோதும், அவருடைய ஈர்ப்பு, காதல், தத்துவவியல், இறையியல் ஆகியவை மீதே இருந்தன. இறையியலில் முனைவர் பட்டம் பெற முயன்றபோது தேவாலயங்களின் எதிர்ப்ப்பால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், தத்துவவியலில் முனைவர் பட்டம் படிக்க அனுமதி பெற்றார்.

1678-ல் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வின்போது, அதைக் கேட்பதற்காக இத்தாலியின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கே கூடியது இலினாவின் மேதைமைக்குச் சான்று. 32 வயதில் முனைவர் பட்டம் பெற்று, பெண்களுக்கு வழிகாட்டியானார். அவரின் 373-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூன் 5 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

2.jpg

பாதுகாக்கும் காலணி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஆண்களின் வழிமறித்தல் சீண்டலில் இருந்து பெண்களைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். பெண்கள் அணியும் ஷூக்களில் டிரோன் பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஜிபிஎஸ் ஒன்றினை வைத்து, அதன் மூலம் அபாய ஒலி எழுப்பும் விதமாக அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

அந்த மாணவர்களுள் ஒருவரான திவாகர் ஷர்மா பேசும்போது, “இந்த ஷூவின் உள்ளே சிறிய பட்டன் உள்ளது. யாரேனும் தாக்க வரும்போது லேசாக அதை அழுத்தினால் போதும்; அது ஷாக் அடிப்பதுபோல் அதிர்வை ஏற்படுத்தும். அபாய ஒலியையும் எழுப்பும். இது மட்டுமின்றி டிரோன் அமைப்பின்மூலம் அந்தப் பெண் எந்தப் பகுதியில் இருக்கிறாரோ அந்த இடம் குறித்த தகவல் அவரது வீட்டாருக்கும் காவல் துறைக்கும் சென்றுவிடும்.

அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டியபடி ஜிபிஎஸ் மூலம் டிரோன் பறக்க ஆரம்பித்துவிடும். மேலும் இந்த டிரோன், நடந்த அனைத்தையும் வீடியோவாக எடுத்துவிடும். இதன்மூலம் காவல் துறை அந்தப் பெண்ணைத் தாக்க முயன்றவரை எளிதில் அடையாளம் கண்டு விசாரணை நடத்த முடியும்” என்று கூறினார்.

 

பெண்களுக்கு இலவசம்

அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில் போன்றவற்றில் கட்டணம் செலுத்தாமல் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக விரிவான திட்டத்தை ஒரு வாரத்துக்குள் தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

3.jpg 

இது குறித்து பொதுமக்களிடமும் கருத்து கேட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். “பெண்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மெட்ரோ ரயில் சேவையைத் தற்போது தினமும் 25 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும், ஒரு லட்சம் பேர் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்தத் திட்டத்தால் இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில் அதிகபட்சம் 800 கோடி ரூபாய் அரசுக்குச் செலவாகும். வசதியுள்ள பெண்கள் இந்தச் சலுகையை விட்டுத் தரலாம். இதைத் தவிர பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லியில் மேலும் ஒன்றரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன” என்று அவர் கூறினார்.

4.jpg 

சம உரிமை சம ஊதியம்

சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம ஊதியம் கேட்டு 1991 ஜூன் 14 அன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நடந்து 30 ஆண்டுகள் முடிந்தும், சம ஊதியம் என்பது இன்றும் கனவாகவே உள்ளது.

இந்த நிலையில், ‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த அங்குள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. சுவிட்சர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தைவிட 20 சதவீதம் குறைவாகவே உள்ளது.

மேலும், கல்வித் தகுதி சமமாக இருந்தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தைவிட 8 சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கல்வித் தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தினால் பெண்களுக்கு ஊதியத்தில் அநீதி இழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் வேலைக்கு ஏற்ற சம்பளம், மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திப்  போராட்டக் குழுவினர் போராடவிருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close