[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: நெற்றியில் மருந்து தடவினால் தலைவலி எப்படிக் குணமாகும்?


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 11:19 am
  • அ+ அ-

தலைவலிக்கு நெற்றியில் மருந்து தடவினால், அது எப்படி வலியைப் போக்குகிறது, டிங்கு?

தலைவலி மருந்து மட்டுமில்லை, உடலில் தடவப்படும் எல்லா வலி நிவாரணி மருந்துகளும் ஒரே மாதிரிதான் வேலை செய்கின்றன. முள்ளை முள்ளால் எடுப்பது என்று சொல்வர்களே, அதுபோல் வலிக்கு மருந்து மூலம் எரிச்சலை ஏற்படுத்தி வலியைப் போக்குகின்றன.

வலி நிவாரணிகளில் Methyl salicylate, Menthol, Camphor என்ற மூன்று வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மெதில் சாலிசிலேட் வலியைப் போக்கும். காம்பர் எனப்படும் சூடத்தை எளிதில் தோல் இழுத்துக்கொள்ளும்.  குளிர்ச்சியையும் மிக லேசான மயக்கத்தையும் ஏற்படுத்தும்.

மென்தால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்த இடத்தைக் குளிர்ச்சியடையச் செய்யும். இந்த மூன்று வேதிப்பொருட்களும் தலைவலி, மூட்டுவலி, கால்வலி போன்ற வலிநிவாரணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, யூகலிப்டஸ் எண்ணெய், தைமால், டர்பன்டைன், கிராம்பு எண்ணெய் போன்றவையும் வலிநிவாரணிகளில் சேர்க்கப்படு கின்றன, ஹரிஹரசுதன்.

–எஸ். ஹரிஹரசுதன்,

9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.

காலையில் சீக்கிரமே எழச் சொல்கிறார் அம்மா. என்னால்  முடியவில்லை. என்ன செய்வது, டிங்கு?

உயர் வகுப்புக்குச் செல்லச் செல்லப் பாட அளவு அதிகரிக்கும். நீங்களும் பெரியவராகிக் கொண்டிருக்கிறீர்கள், அணிஸ் சங்கர். அதனால் காலையில் சீக்கிரம் எழுந்து படித்தால் நல்லது என்பதற்காகச் சொல்கிறார் அம்மா. காலையில் படிக்கும் பாடங்கள் நன்றாக மனதில் பதியும்.

நீங்கள் முதல் நாள் இரவு வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு, சாப்பிட்டு, 9 மணிக்குத் தூங்கச் சென்றுவிடுங்கள். அப்போது அதிகாலை எழுவது கடினமாக இருக்காது. அதிக நேரம் டிவி பார்ப்பதில் செலவிட்டால், காலையில் எழ முடியாது. அதனால் டிவி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, சீக்கிரமே தூங்கினால் காலை எழுவதில் சிரமம் இருக்காது. செய்து பாருங்கள்.

நீங்கள் 6-ம் வகுப்புதான் படிக்கிறீர்கள், அன்புமதி. அன்று நடத்தும் பாடங்களை அன்று மாலையே படித்துவிடுங்கள். வீட்டுப் பாடம் செய்துவிடுங்கள். மறுநாள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை மறக்காமல் எடுத்து வைத்துவிடுங்கள். மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்தாலும் பதற்றம் இல்லாமல் பள்ளிக்குச் சென்றுவிடலாம். இல்லாவிட்டால் நீங்களும் பதற்றமாகி, உங்கள் அம்மா, அப்பாவும் பதற்றமாகி இனிய காலை இம்சைக் காலையாக மாறிவிடலாம். அதற்காகச் சீக்கிரம் எழச் சொல்லியிருப்பார்கள். எல்லாவற்றையும் முதல் நாளே செய்து விட்டால் தாமதமாக எழுந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

-அணிஸ் சங்கர்,

8-ம் வகுப்பு,  கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.  

–அ.ரா. அன்புமதி, 6-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,  சூலூர், கோவை.

உடற்பயிற்சிக்குப் பிறகு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்கிறார்களே ஏன், டிங்கு?

உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், இதுக்கு அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை, கமலேஷ். உடற்பயிற்சியின்போது உடலிலிருந்து ஏராளமான வியர்வை  வெளியேறும். உடலில் நீர்ச்சத்துக் குறையும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.

மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கார்போ ஹைட்ரேட் உள்ள பானத்தைப் பருகினால் இன்னும் நல்லது. உடற்பயிற்சி செய்தவுடன் ஐஸ், குளிர்ந்த நீரைப் பருகினால் ஜீரண மண்டலம், உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம். வயிற்று வலியையும் உண்டாக்கலாம். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது உடல் சூடாகியிருக்கும். உடனே குளிர்ந்த நீரைக் குடித்தால் இதுபோன்ற பின்விளைவுகள் ஏற்படலாம்.

– ரா. கமலேஷ், 6-ம் வகுப்பு,

எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

நான் கோயிலில் பார்த்த யானை இப்படியும் அப்படியும் அசைந்து கொண்டே இருந்தது, ஏன் டிங்கு?

ஒரே இடத்தில் நிற்க வைத்தால் எந்த உயிரினமாக இருந்தாலும் ஆடாமல், அசையாமல் இருக்க முடியாது. யானைகள் காட்டில் நீண்ட தூரம் உணவு தேடிச் செல்லக் கூடியவை. கூட்டமாக வசிக்கக் கூடியவை. தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்கு உடல்மொழியைப் பயன்படுத்திக்கொள்கின்றன. விளையாட்டு, நடனம், மகிழ்ச்சி, கோபம் என்று பலவற்றுக்கும் பலவிதங்களில் உடல் உறுப்புகளை அசைத்து உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. மனிதர்களிடம் வசிக்கும் யானைகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மனிதர்களை நேசிக்கும் யானைகள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த உடலையும் தலையையும் இப்படியும் அப்படியும் அசைக்கின்றன.

இயல்புக்குப் பொருந்தாத நகர வாழ்க்கை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பது, சங்கிலியால் கட்டி வைப்பது, பிற யானைகளுடன் பழக இயலாதது போன்ற பல காரணங்களால் யானைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. அப்போது தலையை வேகமாக அசைத்துக்கொண்டே இருக்கின்றன. இப்படி யானையின் ஒவ்வோர் அசைவுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன, பிரியதர்சினி.

-அ. பிரியதர்சினி,

8-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close