[X] Close

கோவில்பட்டி கடலைமிட்டாய்! சுவைக்கும்; இனிக்கும்; ருசிக்கும்!


kovilpatti-kadalai-mittai

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jun, 2018 12:14 pm
  • அ+ அ-

ஊர்ப்பாசம் என்பது ஊர்க்காரர்களுக்கு இருக்கும் என்பது உண்மைதான். அதேசமயம், ஊரின் பெயரைச் சொல்லும்போதே, ஒரு பாசமும் பிரியமும் மணமும் சுவையும் வந்து சட்டென்று ஒட்டிக்கொள்ளும் மனதில்! அப்படி சுவைக்காமலே இனிக்கச் செய்யும் ஊர்... கோவில்பட்டி.

திருவையாறு அசோகா போல, சாத்தூர் காராச்சேவு போல, நெல்லை அல்வா போல, கோவில்பட்டி என்றால் கடலைமிட்டாய். அப்படியொரு சுவை. அப்படியொரு ருசி. அப்படியொரு இனிப்பு! ருசித்துச் சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

கோவில்பட்டி மார்க்கெட் சாலைதான், கடலைமிட்டாயின் சங்கமம். ஏகப்பட்ட கடைகள். கடலைமிட்டாய் கம்பெனிக்கடைகள். கடைக்குப் பின்னேயே தனியே பட்டறை வைத்து தயாரித்தபடி இருக்கிறார்கள். அந்தப் பக்கம் போனாலே, கடலைமிட்டாய் வாசம்தான்!

கடலைமிட்டாய் தயாரிப்பதும் அதை பாக்கெட்டுகளில் போடுவதும் அதை பெரிய பெரிய அட்டை டப்பாக்களில் அடுக்கி, பேக் செய்து, தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடு என்று அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு நாள் ஒன்றுக்கு டன் கணக்காக கடலை மிட்டாய்கள் விற்பனை ஆகின்றன. நிலக் கடலை, வேர்க் கடலை என அழைக்கப்படும் இந்தக் கடலையை மணிலாக் கொட்டை என்றும் அழைப்பார்கள்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தக் கடலைக்கு மணிலாக் கொட்டை என்று பெயர் வந்தது. ஆனால் அது எந்த நூற்றாண்டில் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அதுவா முக்கியம்? கடலைமிட்டாய்தான் முக்கியம்.

கடலை மிட்டாய் தயாரிக்க முதலில் முழு நிலக் கடலையாக வாங்கப்பட்ட பருப்பை இரும்புச் சட்டியில் மிதமான வெப்பத்தில் பொன் நிறத்திற்கு வரும் வரை நன்கு வறுக்கவேண்டும்.  பிறகு, அந்தக் கடலை பருப்பைப் பாதியாக உடைத்து வைக்கவேண்டும்.

வெல்லத்தைக் குறிப்பிட்ட வெப்பத்தில் பாகாகக் காய்ச்சுகின்றனர். பாகை ஆற வைத்து, அதற்குப் பிறகு சிறிதுநேரம் கழித்து மீண்டும் காய்ச்சி இறக்குகிறார்கள். இரண்டாவது முறை பாகை நன்கு கொதிக்கவிடுகிறார்கள். அப்படி நன்றாகக்  கொதித்த பின்னர் பாதியாக உடைக்கப்பட்ட நிலக் கடலை பருப்புடன் சிறிது உப்பு சேர்த்துப் பாகுடன் கலக்கிறார்கள். குறிப்பிட்ட சில நிமிடங்களில் கடலைப் பருப்பும், வெல்லப் பாகுவும் சேர்ந்து மிதமான திடநிலைக்கு வந்துவிடுகிறது.

அதையடுத்து, அந்த வெப்ப நிலையிலேயே அடுப்பிலிருந்து வெளியே எடுத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தில் போட்டுக் கரண்டியால் நன்றாகக் கிளறுகிறார்கள். அப்போது பாகும் பருப்பும் மிகமிக திட நிலைக்கு மாறிவிடுகிறது. பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டுகின்றனர். தேங்காய் துருவலில் சேர்த்துவிட்டால் கடலை மிட்டாய் ரெடி! .

சரி... கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு அப்படியென்ன தனி ருசி?

இங்கு செய்யப்படும் கடலை மிட்டாயின் தனி ருசிக்குக் காரணம் சுமார் 70  ஆண்டுக் கால அனுபவம். அதில் கலக்கப்படும் சுவையான பொருட்கள் இன்னொரு காரணம். வெல்லம், தேனி வெல்லம் என இரு விதமான வெல்லத்தைத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

கோவில்பட்டி வாழ்க! கோவில்பட்டி கடலைமிட்டாய் வாழ்வாங்கு வாழ்க!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close